#ஜோக்கர் அதிகார பீடங்களை ஒய்யாரமாக ஓய்வெடுக்கவிடாமல் சட்டத்தின் துணையோடு வழக்குகளாக போட்டு அவற்றை அசைத்தபடியே இருக்கும் கேரக்டருக்கு பெயர் 'பொன்னூஞ்சல்' (அ.ராமசாமி) காதலிக்கு கக்கூஸ் கட்ட வக்கில்லாத நாயகனுக்கு பெயர் 'மன்னர் மன்னன்' ,(சோமசுந்தரம்) இறந்து போன ரிட்டயர்ட் மிலிட்டிரிக்காரரின் (பவா செல்லத்துரை) வீட்டில் அவுட் ஆப் போகஸில் தொங்கும் 'கவட்டைகள்' . சிறையில் சககைதியை 'மற்றதை நோக்கிய நீதியுடன்' அணுகும் 'லோக்கல் எதிக்ஸுள்ள' கைதி(அருள் எழிலன்), என பாத்திர படைப்பிலும், காட்சியமைப்பிலும் இயக்குநராக ராஜுமுருகன் நன்றாக செய்திருக்கிறார்.
படத்தை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாத டோனில் படமாக்கப்பட்ட செழியனின் கேமரா, ஆல்பர்ட் தியேட்டரில் உடன் படம் பார்த்த மக்களின் கையொலி என #ஜோக்கர் நன்று.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, டிராபிக் ராமசாமி ,தஞ்சை மன்னர் மன்னன் போன்ற வாழும் உதாரணங்களை கேரக்டர்களாக எடுத்துக்கொண்டது நல்ல ஐடியா.
படத்தின் முதுகெலும்பாக வரும் வசனங்களுக்கு கையொலி அலையாய் எழுகிறது.இந்திய சமூக அமைப்பில் இன்னும் எந்த தத்துவத்தாலும், அதிகார முழுக்கத்தோடு கிளம்பும் இயக்கங்களாலும் இன்று வரை தீர்க்கமுடியாத, கேட்டு கேட்டு அயர்ச்சியான கேள்விகளைத்தான் ராஜூ முருகனும் முன்வைக்கிறார் அதனுடன் ஒரு கோரிக்கையும்...
"நீங்கள் போராடாவிட்டாலும், போராடுபவனை ஜோக்கராக பார்க்காதீர்கள் ஏனெனில் உண்மையான ஜோக்கர் நீங்கள்தான் ".
படம் முடிந்த உறைந்த மௌனத்தில் பட்டென போடப்பட்ட விளக்கொளியில் நிறைய கலங்கிய முகங்களை காணமுடிந்தது.
" கலெக்டர் சார், நீங்க ஒண்ணும் எங்களுக்கு சகாயம் செய்யவேணாம். 'சகாயம்' மாதிரி நடந்துகுங்க அது போதும்"