“ பண்ணப்பழகடா பச்சைப்படுகொலை “

நேற்று அதிகாலை 4.45க்கு புதுப்பேட்டை தாண்டி வந்து அண்ணாசாலை வழியாக அலுவலகம் செல்வதற்காக ஸ்பென்சர் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். ( ரோடு வைகோ ஆபிஸ் போல கழுவிவிட்ட மாதிரி இருந்தாலும் சிவப்பெரிந்தால் நின்று பச்சை எரிவதற்காக ‘காத்துகிட்டிருக்கிறது’ வழக்கமாகிவிட்டது)

ஸ்பென்சருக்கு எதிரிலிருக்கும் காவல் நிலையம் வழக்கமான சோம்பலில்லாமல் பரபரப்பாக இருந்தது. பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வேலையும் இருந்ததால் வலப்பக்கமாக அண்ணாசாலையை கடந்த நான் அந்த ஸ்டேசனை ஒட்டி இருக்கும் சர்வீஸ் ரோடு வழியே பங்க் செல்ல முயன்றேன். அங்கு நின்றிருந்த போலீஸ் ‘அங்கிட்டு ரோடு ப்ளாக்குங்க போகக்கூடாது’ என்றார். ‘பங்குதான் சார் போறேன்’ என்றேன். அதெல்லாம் முடியாது மேஜர் ஆக்சிடெண்ட் ரோடு ப்ளாக் என்றார். இனி அவருடன் தம் கட்ட முடியாது என்று நினைத்துக்கொண்டு அந்த ஸ்டேசன் பின்புறம் புக்பாயிண்டின் பின்வாசலில் வழியாக ‘மிஸ்கின் படம்’ எடுக்கவென நேர்ந்து விடப்பட்ட சிறுசாலையொன்று உண்டு. அதில் சென்றால் ஈரானி பேக்கரி வழியாக பங்கை அடையலாம், அப்படியே ஆக்ஸிடெண்ட் குறித்த செய்தி கவர் செய்தது போலும் இருக்கும் என்று அந்த பக்கம் சென்றேன்.

என்னைக்குமில்லாத அதிசயமாய் அங்கும் ஒரு போலீஸ்.. சரியென எக்ஸ்பிரஸ் அவன்யூவிலிருந்து சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலைக்கு போய் வண்டியை மறுபடி கிழக்கே திருப்பி போக முயன்றால் வேறு ஒரு போலீஸ் கைகாட்டி நிறுத்தினார். பார்க்க இளம் போலீஸாக இருக்கவும் அவர் அருகே சென்று பிரஸ் என்கிற கெத்துபோல காட்டிக்கொண்டு

“என்ன சார், மெட்ரோ டன்னல் எதும் உடைஞ்சு உள்ள போயிடுச்சா, ஆளுங்க உள்ள விழுந்துட்டாங்களா? “ என்றேன்.

அங்கிருந்து பார்க்க இருட்டில் ஒன்றுமே அப்போது தெரியவில்லை.

“கார் போயிருக்கு சார், ராங்க் ரூட்டில் புல் போதையில வந்து உள்ள விழுந்துட்டான் சார் ஒருத்தன், காருக்கு பின்னாடியே வந்த மினி வேனும் கார் மேல மோதி, பாவம் காரில வந்தவங்களுக்கும் நல்ல அடி” என்றார். “இன்னேரத்துக்கா குடிச்சுட்டு வண்டி ஓட்டுறாய்ங்க” என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

“பாடிலாம் எடுத்துட்டு போயிட்டாங்க சார், வண்டியை இழுத்து போட ரெக்கவரி வண்டிக்காக வெயிட்டிங்” என்றவர் அந்த பக்கம் பேரிகார்டுக்கு போக்கு காட்டி உள் நுழைய முயன்ற இன்னோரு டூவீலரை சத்தம் போட்டு மறித்து பணியில் முழ்கினார்.

ஜெமினி பாலம் ஏறிக்கொண்டே, அந்த ராங் ரூட்டில் வந்தவன் இந்நேரத்துக்கு எங்கு வாங்கி குடித்திருப்பான் என்கிற முக்கியமான டவுட் வந்தது. எக்மோர் ஆல்பர்ட் ரோடு திருப்பத்தில் இந்நேரம் கிடைக்கும். அங்கு வாங்கி குடித்திருந்தால்தான் இப்படி ராங்ரூட்டில் வரமுடியும், இதை விட்டால் சிந்தாகிரிப்பேட்டை அங்கேயும் 2 மணிக்கு மேல கிடைக்காதே, அதை தாண்டினா மண்ணடி,பேசின் பிரிட்ஜ், மகாராணி, ராயப்பேட்டை, 24 X 7 ராணுவமே வந்தாலும் தடுக்க முடியாத சைதாப்பேட்டை ராஜ் தியேட்டர் பாயிண்ட் என மனதுக்குள் ப்ளாக் விற்பனையகங்களின் மேப் விரிந்தது. இந்த மாதிரி அதிகாலை வாங்க வேண்டுமாயின் பாலவாக்கம் தாண்டினா போதும் 4 மணி முதல் கிடைக்கும். காரணம் கடலாடி வரும் மீனவர்கள்.

மாலையில் வீட்டுக்கு போனவுடன் காலையில் மறந்துவிட்டு போன பெண்-ட்ரைவை மதிமலரிடம் இருந்து நாள் முழுவதும் காப்பாற்றிய கதையை சாகசத்துடன் விவரித்த தங்கமணியிடம்

“ஒருத்தன் செத்துப்போயிட்டான் காலங்காத்தால, இங்கதான் ஸ்பென்சர் கிட்ட” என்றேன்.

“பைக்காரன் மேலதான் மிஸ்டேக்காம் போதையில் வந்துவுட்டுருக்கான். ராங்க் ரூட்டில போய் கார் மேல மோதி செத்திருக்கான்” என்றேன்.

“நீ நல்ல நாளிலேயே தண்ணியப்போட்ட மாதிரித்தான் ஓட்டுவ, விடியக்காலையில போற.. பாத்து போய்த்தொல” என்றார் கரிசனத்துடன்.

இன்று அருள் அண்ணன் சாட்டில் வந்து ஒரு செய்தித்தாளின் லிங்கை எடுத்துப்போட்டு “இதுலாம் பச்சை படுகொலை, படிச்சியா” என்று கேட்டார்.

அந்த செய்தி இப்படியாக ஆரம்பித்தது.

“ அண்ணாசாலையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வாலிபர் மீது வண்டியேற்றிக் கொன்ற இருவர் குடிபோதையில் கைது “

இறந்து போன கெவின்ராஜ் என்கிற அந்த வாலிபர் தி.நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்கிறார். இரவுப்பணி முடிந்து காசிமேட்டிலுள்ள தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கெவின்ராஜ் (25) மீது அண்ணாசாலை டிவிஎஸ் எதிரே ஒரு வழிப்பாதையில் தவறான வழியில் மிக மிக அதி வேகத்தில் வந்து மோதியதில் அவர் 30 அடி உயரத்துக்கு தூக்கிவீசப்பட்டு மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்டிருந்த கம்பியில் குத்தி தொங்கியபடி உயிர் விட்டார். மோதிய வேகத்தில் காரினுள் இருந்த பலூன்கள் விரிந்ததால் ஓட்டிய நபரும் உடன் வந்த நபரும் தப்பிச்செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டனர். அதிலிருந்து தப்பி செல்ல முயன்ற போது அந்நேரம் அங்கு வந்த பொது மக்களால் தடுத்து வைக்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிலைகொள்ளாத போதையில் இருந்த இருவரும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர்கள் என்றும் சென்னையில் நடைபெறும் கண்காட்சிக்காக வந்தவர்கள் என தெரிவித்தனர். கெவின்ராஜ் பின்புறமாக வந்து கொண்டிருந்த மின்வேன் மீதும் கார் மோதியதில் அதன் ஓட்டுநரும் காயமடைந்தார். “கெவின்ராஜ்க்கு அமைந்த முடிவு போல யாருக்குமே அமையக்கூடாது “என்று மினிவேன் ஓட்டுநர் நமது நிருபரிடம் தெரிவித்தார். “ என்று முடிந்தது.

கெவின்ராஜ் பலியானதை தொடர்ந்து நடக்கவிருக்கும் வழக்கில் நட்டஈடு கேட்டு 3 ஆண்டுகள் வழக்கு நடக்கும். வாய்தாவிற்கு அலைந்து சலித்து அவனின் குடும்பத்தினர் வெறுப்புற்ற நாளொன்றில் “லோக் அதாலத் கோர்ட் போகலாமா உங்க அவசரத்துகுலாம் அதுதான் லாயக்கு “ என கெவின் சார்பான வழக்கறிஞர் கேட்பார். அவருக்கும் வேறு வழியில்லை. இவர்களும் சரி என்பர். அவன் வாழ்க்கைகான தொகையாக 3 லட்சத்திலிருந்து இன்ஸுரன்ஸ் தரப்பு ஆரம்பிக்கும்.

“ உங்க புள்ளையும் போதையில்தான் வந்துருக்காப்டி எங்க கிட்ட ரிப்போர்ட் இருக்குது. ப்ரூ பண்ணினா பத்துகாசு இல்லாம போயிடும், அந்த பாவம் வேணாம்ன்னுதான் “என ஆரம்பிப்பார்கள்.

அந்தா இந்தாவென அதிகார வர்க்கத்திடம் போராடி 5 லட்சம் நட்டஈடு வாங்குவதற்குள் பல முறை கெவின் செத்து தொலைத்திருப்பான் அவன் பெற்றோர் மனதில்.

அப்போதாவது அவர்களுக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை அவனை கொன்ற “ஆடி க்யூ 7” காரின் விலை 80 லட்சம் என்று!

-வரவனையான்