தனிமனிதன் என்கிற கருத்தாக்கம், மதம், தஸ்தயேவ்ஸ்கி இன்ன பிற

venkatramanan
Nov 5 · 2 min read

The below was shared in WhatsApp in last December (12/12/18!) to my friends. Logging this here (as usual for a wider audience ;-))

சென்ற சனியன்று எம்.ஏ.சுசீலா அவர்களுக்காக ரஷிய கலாசார மையமும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். சுசீலா பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு நான்கு பேரிலக்கியங்களை ரஷிய மொழியிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். (இதைப்பற்றிய ஜெயமோகனின் அறிமுகக் கட்டுரை (1) தவறவிடக்கூடாத ஒன்று)

இந்தக் கூட்டத்தில் ஜெயமோகனும் சுரேஷ் பிரதீப்பும் பேசிய ஒரு விஷயம் மிக முக்கியமானது.

16/17 நூற்றாண்டு வரை மனிதனுக்கு முக்கியமான (=ஒரே) அடையாளம் அவன் இன்ன இனக்குழுவிலிருந்து வந்தவன் என்பதுதான்.
பின்னர் தொழிற்புரட்சி சூடுபிடித்தபின் ‘தனிமனிதன்’ என்கிற கருத்து வலுப்பெறும்போது அவன் சந்திக்கிற சிக்கல்களை களம் அமைத்து தஸ்தயேவ்ஸ்கியும் தல்ஸ்தோயும் பல படைப்புகளை படைத்திருக்கின்றனர்

இதன் காரணமாகவே இவ்விரு ருஷிய படைப்பாளிகளும் உலக வாசகர்களை மிகவும் ஈர்த்தனர்.
புற வர்ணனைகள் மிகக்குறைவாக இருந்தாலும் (குறிப்பாக தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில்) அவை ஒரு பொருட்டாகவே படவில்லை.

இரண்டு நாள்களாக இந்தக் கருத்து பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நான் என் குடும்பத்திலிருந்து தனியே வாழ்ந்த முதல் சந்தர்ப்பம் கல்லூரியின் விடுதி வாழ்க்கை.
அது வரை வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த எனக்கு விடுதி வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் துயரமாகவே தோன்றியது.
நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சூழ இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் தனிமையோடுதான் போராடிக்கொண்டிருந்தேன்.
புதனன்று கல்லூரியில் சேர்ந்து அந்த வெள்ளியன்றே வீட்டிற்கு (இரண்டு நாள் விடுமுறை) வந்தபோது வீடு புத்தம்புதிதாகத் தோன்றியது! வீட்டைப் பார்க்கும் பார்வை முற்றிலும் மாறியிருந்தது.

முதல் வருடம் முழுக்க ஏதோ ஒரு வகையில் அந்த ஏக்கமும் தனிமையும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. ‘ம்யூச்சுவல் டிரான்ஸ்ஃபர்’க்கெல்லாம் கூட முயற்சி செய்து பார்த்தோம் (அப்பாவும்).

பின்னர் மெல்ல மெல்ல (வேறு வழியில்லாமலும் என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும்) இரண்டாமாண்டு முதல் விடுதி வாழ்க்கைக்கு பழகத் துவங்கினேன்.
முதல் முறை வீட்டை விட்டு வெளியே வந்து இதோ 19 வருடங்கள் முடியப் போகின்றன. பொறியியல் படிப்பு முடிந்து வேலையில்லாமல் வெட்டி ஆஃபீசராய் வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாதங்களையும் கோவை சசி அட்வெர்டைசிங்கில் வேலை பார்த்த நான்கு மாதங்களையும் தவிர 10 வருடங்கள் நண்பர்களுடன்தான் வாசம். அப்பா ஓய்வு பெற்று இரண்டு மாதங்கள் கழித்து அம்மா அப்பா நான் மூவரும் சென்னையில் சேர்ந்து வசிக்கத் துவங்கினோம்.(இந்த அக்டோபரோடு சென்னையில் அம்மாப்பாவின் முதல் தசாப்தம் நிறைவுபெறுகிறது)

நடுவில் ஜப்பானில் ஏழு மாதங்களும், அமெரிக்காவில் இரண்டு வாரமும் இருந்த பொழுது நான் உணர்ந்த ஒன்று — நாம் முற்றிலும் வேறு ஒரு சூழலில் வசிக்க நேரும் ஆரம்ப நாள்கள் தஸ்தயேவ்ஸ்கியின் இந்த ‘தனிமனிதன்’ கருத்தை ஆணித்தரமாக, எதிர்ப்பே இல்லாமல் நம்முள் நிறுவுகின்றன. அதாவது இந்த நவீன உலகில் சுற்றி எத்துணை பேர் இருந்தாலும் ஒரு மனிதன் தனிதான். அவன் குடும்பத்தில் உணரும் ஒரு பாதுகாப்பென்பது நிச்சயம் மறுபடியும் வேறெங்கும் கிடைக்கபோவதில்லை. எவ்வளவுதான் சௌஜன்யமாக வெளியில் காட்டிக்கொண்டாலும் நவீன உலகம் மறைமுகமாக உண்டாக்கும் போட்டி மனப்பான்மை காரணமாகவே மனிதன் எப்போதும் தப்பு செய்து விடக்கூடது என்ற ஒரு பதற்றத்திலும் பதைபதைப்பிலும்தான் இருக்கிறான். இது தவிர்க்கமுடியாதென்பது (அட்லீஸ்ட் சமீபமாகவேனும்) என் எண்ணம்.

இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது ஆர்.பி. ராஜாநாயஹத்தின் ‘அவன் ஆனது’ ராமு பதிவு (2) பற்றிய நினைவு வந்தது. எடுத்து வாசித்துப் பார்த்தால், அவர் தல்ஸ்தோயை குறிப்பிட்டிருக்கிறார்! முற்றிலும் இதே கருத்தில் அல்ல- ஆனால் தொடர்பு கொள்ளக்கூடிய இன்னொரு விதத்தில்.

நேற்று ஸ்ரீதரின் இந்தப்பதிவைப் பார்த்ததும் (3) ஆச்சரியமான ஆச்சரியம் — இந்த நவீன உலகு உருவாக்கும் மன அழுத்ததைதான் அவரும் (தன் சமீபத்திய கட்டுரைகளில் இது குறித்து பல முக்கியமான விஷயங்களை அவர் தொட்டிருக்கிறார்) குறிப்பிட்டிருப்பதாகவே உணர்கிறேன்!

(1) https://www.jeyamohan.in/107783
(2) http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_12.html
(3) https://www.evernote.com/shard/s498/sh/85f22b85-9218-47f4-b6a9-f6f88be8e554/069e8e077bba79ff0bafb9f5fb6632ac

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade