அரியணைகளின் ஆட்டம் — கேம் ஆஃப் த்ரோன்ஸ்: முன்கதை சுருக்கம் (பாகம் 2)

அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: ஒரு அறிமுகம்.

அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: முன்கதை சுருக்கம் (பாகம் 1)

டிசம்பர் 12, 2017 இந்த ஆண்டின் வரலாறுகளும் நாட்டுப்புறக்கதைகளும் அத்தியாயம் வெளிவரவிருக்கிறது. அதையொட்டி HBO வெளியிட்டிருக்கிற முன்னோட்டம்.

தொடரும் சம்பவங்கள் பற்றிய சிலபல தகவல்கள் தொடரை இன்னும் பார்க்காதவர்களுக்கு அப்பட்டமாக நிறைய மர்மங்களை போட்டு உடைக்கக்கூடியவை. ஆகவே, அவற்றுள் முக்கியமான சில சம்பவங்களை இலைமறை காய்மறையாக வேறு வழியின்றி தவிர்த்திருக்கிறேன். மறுபடியும் குறிப்பிடுகிறேன், நான் இன்னும் புத்தகங்களை வாசிக்கவில்லை. தொடர்ந்து மார்ட்டினின் வாசகர்களும் தொடரின் நேயர்களும் ரெட்டிட்டில் உரையாடுவதையும், காணொளிகளில், ட்விட்டரில், விக்கியாவில் பார்த்த விஷயங்களின் வெளிப்பாடே இந்தப்பதிவு. சென்ற பதிவைப் போலவே தமிழாக்கப்பட்ட சொற்களுக்கு இணையான ஆங்கில சொற்கள் பதிவின் முடிவில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பிலோ, தகவல்களிலோ பிழைகள் இருப்பின் மன்னித்தருளி பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.
War of the Usurper. Source: http://aminoapps.com/page/thrones/8153652/back-through-the-reeds

புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே, வெஸ்டரோசில் கோடைக்காலம் அரும்பியதாக எண்ணி மக்கள் குதூகலித்தனர். பொழுதுகள் கதகதப்பாக புலர்ந்தன, மண்ணெங்கும் மலர்கள் மணம் வீசின. குடியானவர்களின் வயல்கள்தோறும் கதிர்கள் ஆளுயர வளர்ந்து, நாட்டினர் எழிலும் ஏற்றமும் கொண்டனர்; பிரபுக்களின் தோளில் முத்தும் பொன்னும் ஜொலித்தது. நூறாண்டுக்கு ஒருமுறை பொங்கும் வசந்தகாலத்தில் ஹேரன் மண்டபம் விழாக்கோலம் பூண்டது. எல்லா திசைகளிலும் காகங்களின் கால்களில் வால்டர் வெண்ட் பிரபுவின் மகளது பெயர்சூட்டல் திருவிழா அழைப்பிதழ்கள் விரைந்தன. அதே தருணத்தில், மன்னர் ஜஹேரிசின் காலத்திலிருந்தே அரசமெய்க்காவலராகப் பணிபுரிந்த பெருந்தகை ஹார்லன் க்ராண்டிசன் மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது இடத்தை நிரப்ப மன்னரின் தேர்வு — டைவினின் மூத்த மகனும் பாறைதேச பட்டத்து இளவரசருமான ஜேமி லேனிஸ்டர். 15 வயதே நிரம்பிய ஜேமி மெய்க்காவலர் சகோதரர்களின் நீண்ட பட்டியலில் இடம்பெறுவதையே பெரும்பேறாக, அதிலும் வரலாற்றின் மிக இளைய பெருந்தகையாக அமைவதை பிறவிப்பயனாகவே கருதினார். ஆனால், தந்தை டைவின் இந்த முடிவைக் கொஞ்சமும் ஏற்கவில்லை. மேற்குநாட்டின் ஒரே வாரிசாக ஜேமியைத் தான் அவர் பாவித்தார். பிறந்ததிலிருந்தே விசித்திரக்குள்ளனாக சபிக்கப்பட்ட மற்றொரு மகன் டிரியனை துச்சமாக மதித்தார். ஒரே மகளுக்கு ரேகாரை மணமுடிக்க மறுத்ததுமின்றி, தற்போது மகனின் சிற்றரச மகுடத்தையும் பறித்துக்கொண்ட மன்னரின் சூழ்ச்சியைக் கண்டுகொண்ட டைவின் மனக்கசப்பின் உச்சியில், முடிவாக தனது வலக்கர பதவியைத் துறந்து மேற்குநாட்டிற்கு திரும்பினார். பித்தம் தலைக்கேறிய அரசர் தனக்கு பொழுதெல்லாம் துதிபாடுகிற வயசாளி ஓவென் மெர்ரிவெதருக்கு அந்தப் பதவியை வழங்குகிறார். பெருநாட்டின் மையப்புள்ளியான ஹேரன் மண்டபத்துத் திருவிழாவிற்கு பலப்பல பிரபுமார்களும் பெருந்தகைகளும் வந்து குவிகின்றனர். நூற்றுக்கணக்கான நாட்களாக செங்கோட்டையிலேயே அடைபட்டுக் கிடந்த மன்னர் ஏரிசும் வருகை புரிய இருப்பதாக சலசலப்பு எழுந்தது.

Aerys II Targaryen’s Kingsguard. Source: reaprycon.deviantart.com

வால்டர் வெண்ட் பிரபுவின் மகளுக்கு பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி என்ற பட்டம் வழங்கப்பட்டு மலர்க்கிரீடம் அணிவிக்கப்பட்டது. போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமானது. வில்லாயுதப் போட்டி, ஈட்டியெறியும் போட்டி, குதிரையேற்றப் போட்டி, கோடரி சுழற்றும் போட்டி என்று வீரர்கள் பலப்பரீட்சை வெகு விமர்சையாக நடைபெற்றது. செல்வச்சீமான்களான லேனிஸ்டர் பிரபுக்கள் அழைப்பு விடுத்த முந்தைய போட்டியை விட இம்முறை பரிசுகள் மூன்று மடங்கு உயர்ந்திருந்ததால் மோதல் மிகக்கடுமையாக இருந்தது. விழாவை முன்னிட்டு பெருநாட்டில் வந்தவர்களை விட வராதவர்களை எண்ணுவதே சுலபம் என்று சொல்லுமளவிற்கு பெருந்தலைகளின் நடமாட்டம் அலைமோதியது. ஆறு அரசமெய்க்காவலர் பெருந்தகைகள், ஈரிக்கோட்டை சிற்றரசர் ஜான் ஆரின், அவரது இளவல்கள் புயல்தேச இளவரசர் ராபர்ட் பராத்தியன், வடக்குநாட்டின் எட்டார்ட் ஸ்டார்க், அவரது தங்கை லையான்னா ஸ்டார்க், தமையன் பிராண்டன் மற்றும் பெஞ்சன் ஸ்டார்க், எட்டார்டின் காதலியும், மெய்க்காவலர் ஆர்தர் டேனின் தங்கையுமான அஷாரா டேன், ஜான் கானிங்டன் பிரபு, ரீச் சிற்றரசைச் சேர்ந்த மேஸ் டைரெல், இளவரசர் ரேகார் டார்கேரியன், மனைவியும், இளவரசியுமான எலியா மார்ட்டெல் மற்றும் மாமன்னர் ஏரிஸ் டார்கேரியன் என்று ஏழு சிற்றரசுகளின் பிரதான அரசியல் தலைவர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டனர். விருந்தினர்களை மகிழ்விக்க கேளிக்கை நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், விருந்து உபசாரங்கள் என்று முதல் சில தினங்கள் களை கட்டியது. திருவிழா, கேளிக்கை என்றாலே சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது தானே? அடையாளம் தெரியாத ஒரு வடக்குதேசத்துக்காரரை 15 அகவை கூட நிரம்பாத நான்கு முரட்டு சேவகர்கள் மூர்க்கமாக தாக்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். வெஸ்டரோஸ் வரைபடத்தில் மதிற்சுவருக்கு முந்தைய பகுதி கழுத்தைப் போல தோற்றமளித்ததால் அந்தப்பகுதிக்கு கழுத்து என்ற பேரே நிலைத்துவிட்டது. அங்கிருக்கிற எளிமையான பனிதேசத்துக்காரர்கள் எளிமையான குடில்களில் வாழ்பவர்கள். தேகம் மெலிந்து உடற்பளுவின்றி உயரம் குறைவாகவே அவர்கள் காணப்பட்டனர். புஜபலமிக்க வெஸ்டரோசி மக்கள் கழுத்தூரார்களை அசட்டை செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். தாக்குதலுக்குள்ளான நபர் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர் போலத்தான் தெரிந்தார். இந்த விஷமத்தனத்தை கண்டு பொறுக்காத லையான்னா ஸ்டார்க் நான்கு சேவகர்களையும் புரட்டி எடுத்தார். முரடர்கள் அத்தனை பேர் மீசையிலும் மண். அநேகமாக தர்ம அடி வாங்கிய வடக்குநாட்டவர் ஹாலண்ட் ரீடாக இருக்கக்கூடும் என்று தகவல். அவர் லையான்னாவின் அண்ணன் பிராண்டனின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே லையான்னா சீற்றம் கொண்டார் என்று பரவலாக பேச்சு. ரீட் எளிமையான மனிதராக இருந்தாலும் அவரது சிற்றூருக்கு அவரே பிரபு என்பதால் அவருக்கும் உபசாரங்களும் விருந்துகளும் அளிக்கப்பட தன் அண்ணன் பெஞ்சன் ஸ்டார்க்கிடம் லையான்னா முறையிட்டார். பொருத்தமான உடைகளுடன் அரசவிருந்திற்கு ரீட் பிரபுவுடன் சங்கமித்தனர்.

நாட்டின் மிக முக்கிய நபர்கள் அத்தனை பேரும் அந்த அரங்கத்தில் குழுமியிருந்தனர். அரசர் உட்பட. பல மாதங்களாக பொதுவில் யாருமே பார்க்காத அரசர் நீண்ட நகங்களுடனும், கேசத்துடனும் முழுப்பைத்தியக்காரராக காட்சியளித்து மக்களுக்கு பெரும் சங்கடத்தைத் தந்தார். சான்றோர்கள் முன்னிலையில் ஜேமி லேனிஸ்டரின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. முறையாக வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு அரச மெய்க்காவலர் பொறுப்பேற்றார் ஜேமி. மதுவிலேயே திளைத்த ராபர்ட் பராத்தியன் அங்கு நடந்த குடிமகன்களுக்கான போட்டி ஒன்றில் பட்டையைக் கிளப்பினார். ஹாலண்டைத் தாக்கிய பேர்களில் மூவரை அண்ணன் பெஞ்சனிடம் அடையாளம் காட்டினார் லையான்னா. அண்ணன் பிராண்டனின் விண்ணப்பத்தின் பேரில், தனது காதலி அஷாரா டேனுடன் நடனமாடினார் எட்டார்ட் ஸ்டார்க். முடிவில், இளவரசர் யாழிசையுடன் பாடிய பாடலில் லையான்னா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல், கண்ணீர் மல்க மனமுருகினார். அதைக்கண்டு கிண்டல் செய்த பெஞ்சனின் தலையில் மதுவை ஊற்றினார் லையான்னா. விருந்தை முடித்துக்கொண்டு கிளம்புகையில், ஹாலண்ட் ரீட் பிரபுவிற்கு நடந்த சோகத்திற்கு ஈடாக பழிவாங்க குதிரையும் ஆயுதங்களும் தந்து மேலும் சில உதவிகளும் செய்து தருவதாக அவருக்கு வாக்களிக்கிறார் பெஞ்சன் ஸ்டார்க். போட்டிகள் உச்சகட்டத்தை எட்டின. மாவீரர்களையே கதிகலக்கும் வேல்வீச்சு* போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ஏழு நாட்கள் நடக்கிற போட்டியில் ஐந்து நாட்கள் வரை நடைபெற்ற ஆகக்கடுமையான போட்டி அதுவே. ஆகவே, பரிசுகளை அள்ளிக்குவிக்கும் வாய்ப்பு வேல்வீச்சின் வெற்றிவீரரையே சாரும். நீளமான தடுப்புகளின் இருபுறமும் வேலேந்திய வீரர்கள் குதிரைகளின் குளம்போசை அதிர மோதிக்கொள்ள வேல் செலுத்தி கேடயத்தைத் தாண்டி போட்டியாளரை குதிரையிலிருந்து திறம்பட வீழ்த்துவதே ஆட்டத்தின் குறிக்கோள். ஆட்டத்தில் ஜெயிக்கிற வீரருக்கு பொன்னும் பொருளும் மட்டுமின்றி தன் மனம் கவர்ந்த பெண்ணுக்கு பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி* என்கிற பட்டத்தை வழங்கும் அரிய வாய்ப்பும் உண்டு. விழாவின் துவக்கத்தில் அந்த பட்டத்தைப் பெற்ற வால்டர் வெண்ட் பிரபுவின் மகளது கௌரவத்தை அவளது தமையன்மார்களும், பிரபுவின் தம்பியும், அரசமெய்க்காவல் படையைச் சார்ந்த பெருந்தகை ஆஸ்வால் வெண்ட்டும் காக்க களத்தில் குதித்தனர். பாரம்பரிய வடிவப்போட்டிகள் முதலில் நடத்தப்பட்டன. ஏழுபேர் கொண்ட மோதலான அந்த வில்வீச்சுப் போட்டியில் கலங்காத கலைமான் ராபர்ட் பராத்தியன் ஆதிக்கம் செலுத்தினார்.

Source: awoiaf.westeros.org/index.php/Tourney_at_Harrenhal

நவீன வடிவப்போட்டி அதன் பிறகு நடைபெற்றது. முதலாம் நாள் முடிவில், பெயர்போன கோட்டைகளின் பெருந்தகைகள் அல்லாத சிறிய சிற்றரசு சேனைகளின் சிப்பாய்கள் மூன்றுபேர் சுற்றுகளைக் கடந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல ஹால்ண்ட் ரீட் பிரபுவைத் தாக்கிய அதே மூவர் தான். இரண்டாவது நாள் இவர்கள் மூவரையும் களம் கண்டு மர்மப் பெருந்தகை ஒருவர் சவாலுக்கு அழைத்தார். அவருக்கு தண்மையான குரல், குறைவான உயரம். ஏகப்பட்ட தையல்களுடைய உடைகள் அணிந்து விசித்திரமாக இருந்தார். அவரது கையிலிருந்த கேடயத்தில் சிரிக்கும் முகம் பதித்த வியர்வுட் மரம் இருந்தது. அதைத்தவிர அணிகலன், ஆயுதம் எதிலும் எந்த சிற்றரசின் சின்னமும் பொறிக்கப்படவில்லை. அதுவரைக்கும் அவரை அங்கு யாரும் பார்க்கவும் இல்லை, அவரது பெயர் கூட யாருக்கும் தெரியவில்லை. கூடியிருந்த மக்களின் பேரார்வத்தின் மத்தியில் மூன்று பேரையும் நையப் புடைத்தார் அந்த மர்மப் பெருந்தகை. தோற்ற வீரர்களின் குதிரைகளையும் ஆயுதங்களையும் பரிசாகப் பறித்துக்கொண்டவர், அவர்களது தலைமைப் பிரபுக்களிடம் தங்கள் சேவகர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிக்க அறிவுரைக்கச் சொன்னார். அந்த ஒரு போட்டிக்குப் பிறகு அவர் திடீரென்று மாயமானார். தன்னை எந்நேரமும் ஆபத்தும் சூழ்ச்சி வலையும் தாக்கக்கூடுமென்று அஞ்சிய மடமன்னர் ஏரிஸ், புன்னகை மரப் பெருந்தகையை* தன் விரோதியாக அறிவித்தார். டைவினின் எண்ணத்திற்கு எதிராக ஜேமியை மெய்க்காவல் படையில் இணைத்ததற்காக லேனிஸ்டர்களின் சதித்திட்டம் இந்த மர்ம வீரனின் பின்னணியில் இருக்கும் என்று கணித்த அரசர், தனது மகன் ரேகாரிடம் விரைந்து அந்த மர்மப்பெருந்தகையை தேடிப்பிடித்து உடனே தனது கண்முன் நிறுத்துமாறு கட்டளையிட்டார். ஆனால், ரேகாரின் கண்களில் மண்ணைத்தூவிய அந்த வீரர் பிடிபடாமல் மறைந்தார். இளவரசரால் அரசரிடம் ஒப்படைக்க முடிந்தது புன்னகைக்கும் மர இலச்சினை பொறித்த அந்த கேடயத்தை மட்டுமே. அந்த கவசத்திற்கு பின்னாலிருந்த முகத்தை கடைசிவரைக்கும் யாராலும் பார்க்கமுடியாமல் போனது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில் இளவரசர் ரேகார் டார்கேரியனின் வேல் மீதமிருந்த அத்தனை வீரர்களை விடவும் பராக்கிரம் வாய்ந்த கரங்களில் இருந்தது. தோல்வியைத் தழுவாத மாவீரர்களான பிராண்டன் ஸ்டார்க், ஆர்தர் டேன், யோன் ராய்ஸ் எல்லோரையும் மண்ணைக் கவ்வ வைத்து முடிவில் துணிச்சலின் மறுபெயரான பெருந்தகை பேரிஸ்டன் செல்மியையே வீழ்த்தி பெருவெற்றி பெற்றார். பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவியாக ரேகார் தன் உள்ளங்கவர்ந்த மங்கையை அறிவித்து நீலநிற ரோஜா கிரீடம் அணிவிக்கும் நேரம் வந்தது. இளவரசி எலியா மார்ட்டெலுக்கு மகுடத்தை இளவரசர் சூட்டும் கண்கொள்ளா காட்சியை நாட்டுமக்கள் பார்த்து அகமகிழ ஏங்கிக் காத்திருக்கிறார்கள். தொடக்கம் முதலே போட்டியில் நிறைய மர்மங்கள் இருப்பதை நாம் இப்போது உணர முடியும். (லேனிஸ்டர் பிரபுக்களுக்கே சவால் விடுகிற ஒரு போட்டியும் விருந்தும் வழங்கும் அளவுக்கு வெண்ட் பிரபுக்கள் செல்வாக்கு படைத்தவர்கள் அல்ல. இவ்வளவு முக்கியஸ்தர்கள் கூடும் இடத்திற்கு டைவின் பிரபு வராமல் போனதும் நிறைய சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. ரேகார் டார்கேரியன் ஏழு பிரதான சிற்றரசர்களிடமும் கூடிப்பேசி ஏரிஸ் மன்னரின் தலையிலிருக்கிற மகுடத்தை தான் சூடிக்கொள்ள முன்னேற்பாடு செய்யத்தான் இந்த ஏற்பாடு என்று மன்னரின் காதில் வேரிஸ் ஓதியதன் பயனால் தான் செங்கோட்டையிலிருந்து வெளியே வரவே ஏரிஸ் ஒத்துக்கொள்கிறார். போர்க்கலையில் தேர்ந்தவர் தான் ரேகார் எனும் போதும், அரச மெய்க்காவலர்கள் அத்தனை பேரும் சட்டென சாய்ந்ததும் நிறைய வெறும்வாய்களுக்கு அவலைத் தந்தது போலாகிப்போனது. எல்லாவற்றுக்கும் மேல் மர்மப் பெருந்தகை ஒருவனது திடீர் தோற்றமும் மறைவும் எதேச்சையானதாக இல்லை) அந்த மர்மங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவதைப்போன்ற திருப்பம் ஒன்று நேரப்போவதை அதுவரைக்கும் யாரும் அறியவில்லை. கூடியிருந்த அத்தனை பேரும் வாய்பிளந்து நின்றனர். நாணத்தில் தலைகுனிந்து காத்திருந்த எலியாவைக் கடந்த இளவரசர் ரேகார் டார்கேரியன் புயல்தேச சிற்றரசருக்கு மணமுடிக்கக் காத்திருந்த விண்டர்பெல்லின் செல்லப்பிள்ளை லையான்னா ஸ்டார்க்கிற்கு நீலநிற ரோஜாக்கிரீடத்தை அணிவித்தார். பேரதிர்ச்சியில் திருவிழாக்கோலம் பூண்ட ஹேரன் மண்டபம் சலனமற்று மௌனத்தில் ஆழ்ந்தது. ஒரே நொடியில் ஸ்டார்க், பராத்தியன், மார்ட்டெல் — மூன்று கோட்டை பிரபுக்களையும் பகைத்துக்கொண்டார் இளவரசர். திருவிழா முடிந்து, சில தினங்களுக்குப் பிறகு இரண்டு ராஜவாரிசுகளின் தந்தை ரேகார் டார்கேரியனும் வடக்கின் வதனம் லையான்னா ஸ்டார்க்கும் மாயமாகிப் போனதாகவும், ரேகார் தான் லையான்னைவை கடத்திக்கொண்டு போனதாகவும் நாடெங்கும் சேதி கசிந்தது. கோடைக்காலம் என்று மக்கள் ஆர்ப்பரித்த பகல் கனவு கானல் நீராகக் கலைந்தது. மேகங்கள் மீண்டும் கருகின. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு பொய்த்த வசந்தத்தின் ஆண்டென* பின்னாளில் அறியப்பட்டது.

Tourney of Harrenhal. Source: paolopuggioni.com/illustrations/world-ice-fire

வடக்கிலிருந்து நதிகளின் தேசத்திற்கு கேட்டலின் டல்லியை மணமுடிக்கச் சென்றுகொண்டிருந்த பிராண்டன் ஸ்டார்க் சேதியைக் கேட்டறிந்து வீரர்கள் சிலரை சேகரித்துக்கொண்டு பாதிவழியில் தெற்கிலிருந்த தலைநகரம் நோக்கி தடம் மாறினார். அரண்மனை வாயிலில் வீரர்களுடன் வந்த வடநாட்டு இளவரசர் நீதிகேட்டு மன்னரை நாடினார். இரண்டு பிள்ளைகளின் தகப்பனாக இருந்துகொண்டு மாற்றானுக்கு நிச்சயம் செய்த தன் தங்கையைக் கடத்திக்கொண்டுபோன ரேகாரின் தலையை தனியாகக் கேட்டார். மகனின் தலையைத் தரமறுத்து ராஜதுரோகத்தின் பேரில் பிராண்டனை சிறையில் தள்ளினார் அரசர். மகன் அரியணைக்கெதிராக செயல்பட்டதற்கு உரிய பதில் தரவேண்டி வடக்குநாட்டின் பிரபு ரிக்கார்ட் ஸ்டார்க்கிற்கு ஓலை பறந்தது. விரைந்தோடி வந்த ரிக்கார்ட் பிரபு நீதியை போட்டியின்பால் கோரினார் (சென்ற பதிவில் சொன்னதைப் போல வழக்காடி வெல்ல முடியாத நேரங்களில் தங்களது வாள்வீச்சையும், தெய்வத்தின் தீர்ப்பையும் நம்பி தானே நேரடியாக, அல்லது தங்களது பிரதிநிதியை போட்டியில் இறக்குவது வெஸ்டரோசின் வழக்கம்) அரசர் போட்டியில் தனது பிரதிநிதியாக காட்டுத்தீயை அறிவித்தார். தனது அரசவை ரசதந்திரவாதிகள் காட்டுத்தீயில் ரிக்கார்டை வாட்ட ஆயத்தமானார்கள். செய்வதறியாது விம்மிய இளவரசர் பிராண்டன் பிரபுவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கினார் அரசர். கழுத்தைப் பிணைக்கிற தூக்குக்கயிற்றால் கட்டப்பட்ட பிராண்டனுக்கு அருகில் ஒரு நீளமான வாள் வைக்கப்பட்டது. கரங்களை நீட்ட நீட்ட கயிறு இறுகும். ஆனால், வாளைக் கைகொண்டால் தகப்பனாரை தண்டனையின்றி விடுவிப்பதாகச் சொன்னார் ஏரிஸ். தந்தையின் உடல் தீக்கிரையாகி அங்குலம் அங்குலமாகக் கருகிய வேளையில் வாளைத் தொட முயன்ற மகனின் கழுத்தை தூக்குக்கயிறு நெரித்துக் கொன்றது. இந்தக் கோர சம்பவத்தை மொத்த அரசவையும் கண்ணீர் பெருக ஊமை சாட்சியாக கண்டு குமுறியது. முச்சூடும் சித்தம் கலங்கிய மன்னர், ராபர்ட் பராத்தியனின் தலையயையும் எட்டார்ட் ஸ்டார்க்கின் தலையயும் தன்னிடம் சேர்க்குமாறு ஜான் ஆரினுக்கு ஓலை அனுப்பினார். பெருங்கோபத்தின் உச்சியில் டார்கேரிய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஜான் ஆரின் பிரபு போர் முரசுகளைக் கொட்ட ஆணையிட்டார். ஹாஸ்டர் டல்லிப்பிரபுவின் துணையுடன் ஏழுதேசங்களிலும் ஆதரவுக்கரம் தேடி ஸ்டார்க் — பராத்தியன் — டல்லி — ஆரின் நான்கு பிரபுக்களின் பேரில் அரசருக்கு எதிராக புரட்சி வெடித்தது.

Madness of the Crown. Source: reaprycon.deviantart.com

பிரபுக்கள் கிளர்ந்தெழுந்தாலும், மக்களின் ஆதரவு முடியரசரின் பக்கம் தான் இருந்தது. ஈரியைத் தலைநகரமாகக் கொண்ட மலைதேசமும், வடக்குதேசமும் மட்டுமே முழுமையாக போராளிகளின் பக்கம் நின்றது. பராத்தியனின் ஆட்சியிலிருந்த புயல்தேசத்திலும் அரசுக்கு ஆதரவாகவே கொடிகள் எழும்பின. எந்தப்பக்கமும் சாயாமல் டைவின் லேனிஸ்டர் பிரபுவைப் போல சிலர் மௌனம் காத்தனர். ராபர்ட்டும் எட்டார்டும் ஈரிக்கோட்டையிலிருந்து தங்கள் நாடுகளுக்கு சென்று சேனையைத் திரட்டிவர புறப்பட்டனர். அரசரின் ஆணைக்கிணங்க தனது காலடியில் கலக்காரர்கள் ராபர்ட் மற்றும் எட்டார்டை ஓவென் மெர்ரிவெதர் பிரபு பொறுப்புள்ள வலக்கரமாக கைது செய்யவில்லை. சந்தேக நோய் பீடித்த அரசர், வலக்கரமும் கலகக்காரர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி புரிவதாக எண்ணி மெர்ரிவெதர் பிரபுவை பதவிநீக்கம் செய்தார். இந்த வேளையில் லையான்னாவை ரேகார் அரசமெய்க்காவலர்கள் சிலருடன் டார்னுக்கு அழைத்துக்கொண்டு போவதாக வதந்திகள் பரவின. புயல்தேசத்து எல்லையிலிருந்த கோடை மண்டபத்தின் அருகாமையில் மூன்று வெவ்வேறு இடங்களில் அரசரின் ஆதரவாளர்களை செருக்களத்தில்* வீழ்த்தினார் ராபர்ட். இந்த மாவீரத்தைப் போற்றிப்பாடும் நாட்டுப்புறப்பாடல்கள் கூட உண்டு. தோல்வியுற்ற தன்னாட்டு மக்களில் சிலரை தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டு வடக்கிலிருந்து எட்டார்ட் தலைமை தாங்கும் புரட்சியாளர்களுடன் குழுமப் புறப்பட்டார். செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக ரீச் சிற்றரசின் ரேண்டல் டார்லியின் தலைமையிலான ஒரு படையும் மேஸ் டைரெலின் தலைமையிலான ஒரு படையும் சேர்ந்து புரட்சியாளர்களுடன் ஆஷ்ஃபோர்டில் கடும் தாக்குதலில்* ஈடுபட்டன. சுதாரித்துக்கொண்ட ராபர்ட் பராத்தியன் துரிதகாலத்தில் தாக்குதலிலிருந்து விடுபட்டு வடக்குநோக்கி நகர்ந்தார். டைரெல் மற்றும் டார்லி படைகள் கிழக்கிலிருந்த புயல்தேசக் கோட்டையைத் கைப்பற்ற முன்னேறிச் சென்றனர். அங்கு ராபர்ட்டின் தம்பி ஸ்டேனிஸ் பராத்தியன் கோட்டை சேனையின் பொறுப்பிலிருந்தார். எல்லைப்புயல் கோட்டை* முற்றுகையிடப்பட்டது. நதிப்பிரதேசத்திலிருக்கிற ஸ்டோனி ஆலயத்தில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் புரட்சியாளர்கள் கூடுவதாக உத்தேசிக்கப்பட்டது. அவர்களை மோப்பம் பிடித்து சுற்றிவளைக்க புதிதாக மன்னரின் வலக்கரமாகப் பதவியேற்றுக்கொண்ட ஜான் கானிங்க்டன் பிரபுவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. புகழ்வாய்ந்த ஸ்டோனி ஆலயத்தை சுற்றியிருந்த நெரிசலான தெருக்களில் மக்களோடு மக்களாக கலந்துவிட்ட புரட்சியாளர்களை அடையாளம் கண்டுபிடிப்பதே கானிங்க்டன் பிரபுவிற்கு பெரும் சவாலாக இருந்தது. இரண்டு நாட்களாக தேடிக்களைத்த அரசரின் படைகளை ஹாஸ்டர் டல்லி — எட்டார்ட் ஸ்டார்க்கின் கூட்டுப்படைகள் தாக்கின. யுத்தம் மூண்டதை ஊராரிடம் அறிவிக்க ஆலயமணியோசை எழுப்பியது நகராட்சி. ஆகவே இந்த யுத்தம் ஆலயமணிகளின் யுத்தம்* என்ற பேர் பெற்றது. நகரின் தெருக்களில் களைகட்டிய கடும் வாள்வீச்சுக்கிடையே ஒரு உல்லாச விடுதியிலிருந்து வெளியேறிய ராபர்ட் பராத்தியன் சட்டென்று ஜான் கானிங்டனுடன் தனியொருவனாக மல்லுக்கு நின்றார். எதிர்பாராத திடீர் தாக்குதலை எதிர்கொண்ட கானிங்க்டன் பிரபு மயிரிழையில் உயிர் தப்பி தோல்வியுற்று தலைநகருக்கு எஞ்சிய படையினருடன் தப்பியோடினார். கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் புறமுதுகிட்டுவந்த கானிங்க்டனின் நிலங்களையும் செல்வங்களையும் மணிமுடியின் பேரில் திரும்பப்பெற்ற அரசர் பிரபுவின் பட்டங்களை நீக்கி நாடுகடத்தினார். ராபர்ட் புரட்சியின் முதல் பெருவெற்றி இதுவே.

Robert’s Rebellion. Source: Histories & Lore, HBO

நிலைமையின் தீவிரத்தை உண்ர்ந்த அரசர் தனது பழைய நண்பரான டைவினை தலைநகருக்கு திரும்புமாறு காலில் விழாத குறையாக வேண்டிக்கொண்டார். கோபம் தணியாத டைவின், மன்னரின் வேண்டுகோளுக்கு செவிமடுக்கவில்லை. வேரிஸ் பிரபுவின் அறிவுரைப்படி தனது மனைவி ரயெல்லாவையும் தனது இரண்டாவது மகன் விசேரிசையும் செங்கோட்டையிலிருந்து ட்ராகன் பாறைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். அந்நேரம் அரசி கருவுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் கூட தனது மருமகள் எலியா மார்ட்டெலையும், பேரக்குழந்தைகளையும் பத்திரப்படுத்த அவர் யோசிக்கவுமில்லை, செங்கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கவும் இல்லை. முடியரசிற்கு எதிராக டார்ன் தேசமும் சதிவலை பின்னுகிறது என்று அவரது சந்தேக வியாதி சகலத்தையும் பீடித்திருந்தது. மேலும், தனது இரசதந்திரவாதிகளிடம் காட்டுத்தீயை ஏகப்பட்ட கிண்ணங்களில் நகரம் முழுக்க பூமிக்கடியில் விதைக்கச் சொன்னார். மன்னரின் குலைந்துபோன மதியின் மிச்சம் ஒரு ஓரமாக எட்டிப்பார்த்து பட்டத்து இளவரசரை தலைநகருக்கு திரும்பக்கோரி தகவல் சொல்லி ஆள் அனுப்பினார். தெற்கிலும் தென்மேற்கிலும் மகுடத்திற்கு விசுவாசிகள் பலரை வழிநடத்தி வேந்தர் மேடைக்கு வந்த இளவரசர் ரேகார் தலைநகரத்திலிருந்த படைகளையும் இணைத்துக்கொண்டு மூன்று அரசமெய்க்காவலர்களான — பெருந்தகை பேரிஸ்டன் செல்மி, பெருந்தகை ஜானதர் டேரி மற்றும் இளவரசர் லூவின் மார்ட்டெல் துணையுடன் வடக்கு நோக்கி சென்றார். நதிப்பிரதேசத்தின் புகழ்பெற்ற திரிசூல நதிக்கரையில்* மன்னரின் ஆசியுடன் சுமார் நாற்பதாயிரம் பேர் கொண்ட ட்ராகன் கொடியேந்திய படையும், முப்பதாயிரத்தி சொச்சம்பேர் கொண்ட புரட்சிப்படைகளின் கொடிவீரர்களும் நேருக்கு நேர் மோதினார்கள். வடக்குக்கரையில் காத்திருந்த புரட்சிப் படைகளை நேரடியாக நீர்நிலையைக் கடந்துவந்து தாக்கியது அரசரின் சேனை. வலதுபுறமாக சுத்தியல் சுழற்றிய ராபர்ட்டுடன் மோதினார் இளவரசர் லூவின். பரிதாபமாக கார்ப்ரே பிரபுவின் பலத்த அடியில் உயிரிழந்த டார்ன் தேசத்து இளவரசரைத் தொடர்ந்து பல பெருந்தகைகளும் பிரபுக்களும் படுகாயமடைந்தும் உயிரிழக்கவும் கூட நேர்ந்தது. ஆனால், யுத்தத்தின் வேகமோ வீரியமோ குறையவே இல்லை. உச்சகட்டமாக அரசகாவலர்களின் வரிசைகளைத் தகர்த்த ராபர்ட் பராத்தியன், தனது நெஞ்சார்ந்த காதலி லையான்னா ஸ்டார்க்கை கவர்ந்து சென்ற இளவரசர் ரேகார் டார்கேரியனை சந்தித்தார். உக்கிரமாக நடைபெற்ற மோதலின் இறுதியில் ராபர்ட்டின் சுத்தியல் ரேகாரின் நெஞ்சைப் பிளந்தது. பெருஞ்சப்தத்துடன் அவர் இடித்த அதிர்வில் இளவரசரின் கவசத்திலிருந்த மாணிக்கங்கள் மண்ணில் சிதறின. குதிரையிலிருந்து சாய்ந்த இளவரசர் வீரமரணம் அடைந்தார். தலைவனின் இழப்பு அரசசேனை மன உறுதியைக் குலைத்தது. படைகள் தோல்வியை உணர்ந்து தத்தம் ராஜ்ஜியங்களுக்கே திரும்பின. போர் முடியும் நேரத்தில் தனது படைகளுடன் வந்து புரட்சியாளர்கள் பக்கம் சேர்ந்து கொண்ட ஃப்ரெய் பிரபு, படுகேவலமாக கேலிக்குள்ளானார். போர்க்களத்தில் பலரைக் காவு கொண்ட பெருந்தகை பேரிஸ்டன் செல்மியின் பராக்கிரமத்தைப் பாராட்டி படுகாயங்களை தனது கோட்டையின் மேஸ்டர்களைக் கொண்டு வைத்தியம் பார்க்க பரிந்துரைத்தார் ராபர்ட் பராத்தியன். உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கவே உற்ற நண்பரும் படைவீரருமான நெட் ஸ்டார்க்கை தலைநகருக்கு விரைந்து செல்லப் பணித்தார் ராபர்ட். திரிசூல நதிக்கரைப் போர் வெஸ்டரோஸ் வரலாற்றின் மிகமுக்கிய நிகழ்வாக நிலைத்தது. ரேகாரின் கவசத்து மாணிக்கங்கள் சிதறுண்டதால், அந்த இடத்திற்கே மாணிக்கக்கரை* என்ற பெயரும் உண்டானது.

Battle of the trident, Source: https://nickkalinin.deviantart.com/gallery/59860015/Song-of-ice-and-fire

திரிசூல நதிக்கரை போரில் இளவரசர் ரேகாரின் மரணச்செய்தியை அறிந்துகொண்ட டைவின் சற்றும் தாமதிக்காமல் வேந்தர் மேடைக்கு புறப்பட்டு சென்றார். தன் காரியதரிசி வேரிசின் எச்சரிக்கையை மீறி மேஸ்டர் பைசெல்லின் அறிவுரைப்படி அரசர் டைவினுக்கு வாயிற்கதவுகளை திறந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் டைவினின் திட்டம் வேறாக இருந்தது. நெட் ஸ்டார்க் தலைநகர வாயிலுக்கு வருவதற்குள் வேந்தர் மேடை சூறையாடப்பட்டிருந்தது. செங்கோட்டைக்குள் நுழைந்த லேனிஸ்டர் படைகள் நகரத்தையே கொலைக்களமாக மாற்றினர். புரட்சியாளர்களுக்கு தனது விசுவாசத்தையும், சார்புநிலையையும் நிரூபிக்க வேண்டி இளவரசி எலியா மார்ட்டெலையும், அரசரின் பேரக்குழந்தைகள் இருவரையும் கொல்லச்சொல்லி பெருந்தகை க்ரெகார் க்ளெகேனை ஏவினார் டைவின். ஈவு இரக்கமின்றி இளவரசியை கற்பழித்துக்கொன்ற க்ரெகார் அரசவம்ச வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக இரண்டு பிஞ்சுக்குழந்தைகளையும் துடிதுடிக்க கொன்றான். நேரக்கூடாது என்றெண்ணிய அசம்பாவிதம் ஒருவழியாக நடக்கப்போவதை உணர்ந்த அரசர் தனது தலைமை இரசவாதியிடம் நகரம் முழுக்க இருக்கிற காட்டுத்தீயை பற்ற வைக்குமாறு பணித்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த பெருந்தகை ஜேமி லேனிஸ்டர் தலைமை இரசவாதியை வேறு வழியின்றி கொன்றார். வேறு யாரையேனும் அரசர் திரியைப் பற்றவைக்க அனுப்பக்கூடும் என்று அஞ்சி தலைநகரத்தைக் காக்கவேண்டி அரச மெய்க்காவல் உறுதிமொழியை மீறீ, அரசரை முதுகில் குத்திக் கொன்றார். இந்தக்காட்சியைக் கண்ட எட்டார்ட் ஸ்டார்க் ஜேமிக்கு ராஜவஞ்சகன்* என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த அவமானப் பட்டப்பெயரைச் சுமந்த ஜேமி லேனிஸ்டர் பல நூறாண்டுகளாய் கோலோச்சிய டார்கேரியப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். போர் முடிவுற்றது. டார்கேரிய வம்சம் ஆதிக்கத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியப்பட்டது. புரட்சி வென்றது.

Kingslayer. Source: https://nickkalinin.deviantart.com/gallery/59860015/Song-of-ice-and-fire

நெட் ஸ்டார்க் அரண்மனையில் நுழைந்து கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். ஒருபுறம் மார்ட்டெல் இளவரசி மற்றும் அவர் குழந்தைகள் ரத்தவெள்ளத்திலும், மறுபுறம் தனது அரசரை அவரது மெய்க்காவலரே கொன்ற அவலத்தையும் கண்டு பெரும் கவலை கொண்டார். டைவின் லேனிஸ்டர் முற்றுகையிட்ட நகரத்தை கலகக்காரர்களை தலைமையேற்று நடத்திய ராபர்ட்டிடம் சமர்ப்பித்தார். அரியணைக்கு எவ்வித பாதகமும் நேராத வண்ணம் டார்கேரிய வம்சத்தையே அழித்தொழித்த டைவினின் தந்திர உத்தியை மெச்சினார் ராபர்ட். இந்தப் புள்ளியில் நெட்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தலைநகரிலிருந்து கிளம்பிய நெட் ஸ்டார்க், முடிவுக்கு வந்திருந்த போரின் கடைசி முன்னெடுப்புகளாக நெட் ஸ்டார்க் புயல்தேசக் கோட்டையையும் ராபர்ட்டின் தம்பி ஸ்டேனிசையும் மீட்டார். புயல்தேசத்திலிருந்து தனது தங்கையை வைத்திருப்பதாக சொன்ன டார்ன் தேசத்திலிருந்த ஆனந்த கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். எஞ்சிய அரச மெய்க்காவலர்களான பெருந்தகை ஆர்த்தர் டேன், பெருந்தகை ஜெரால்ட் ஹைடவர், பெருந்தகை ஆஸ்வால் வெண்ட் ஆகிய மூன்று மாவீரர்களையும் தன்னுடன் வந்திருந்த சொற்ப வீரர்களுடன் வென்று முன்னேறினார். ஆனால், அங்கும் அவருக்கு சோகமே பரிசாகக் காத்திருந்தது. நெட் தன் ஆருயிர் தங்கையின் உயிர் பிரியும் தருவாயில்தான் லையான்னாவை சந்திக்க நேரிட்டது. போரில் வென்றாலும், தனது தந்தை, அண்ணன், தங்கை என்று மொத்தக் குடும்பத்தையும் இழந்து நின்றார் நெட் ஸ்டார்க் பிரபு. தனது காதலியை இழந்தார் ராபர்ட் பராத்தியன். தனக்கு மணமுடிக்கவிருந்த மணமகனை இழந்தார் கேட்டலின் டல்லி. தனது தம்பி தங்கையை இழந்தார் டார்ன் தேச இளவரசர் ஓபரின் மார்ட்டெல். அனைத்து பிரபுக்களின் குடும்பங்களிலும் போரில் ஒரே ஒரு உயிராவது மாய்ந்து போனது. தன் தங்கையைத் தவிர அனைத்து சொந்தங்களையும் இழந்தார் விசேரிஸ் டார்கேரியன்.

டார்கேரிய வம்சத்தின் கூறுகளைக் கொண்டிருந்தவரும், கிளர்ச்சியின் முக்கிய சக்தியாகவும் செயல்பட்டு இளவரசர் ரேகாரை களத்தில் வென்ற ராபர்ட் பராத்தியன் ஏழு தேசங்களின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். டைவினின் மூத்த மகளான செர்சி லேனிஸ்டரை திருமணமும் செய்துகொண்டார். தனது காதலியின் தமையன் விடியலின் வாள் ஆர்த்தர் டேன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட்டு, அவர்களது குடும்பத்தின் உயரிய கௌரவத்துக்குரிய வாளை அஷாரா டேனிடம் திருப்பித் தந்தார் நெட் ஸ்டார்க். அதிர்ச்சியில் வாளுடன் மலையுச்சியிலிருந்து அவள் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக செவிவழிச் செய்தி. தனக்கிருந்த கடைசி தம்பி பெஞ்சன் ஸ்டார்க்கும் மதிற்சுவரைக் காக்க முடிவெடுக்க, விண்டர்ஃபெல் கோட்டையின் பிரபுவானார் நெட் (எ) எட்டார்ட் ஸ்டார்க். பிறகு, தனது அண்ணனுக்கு நிச்சயித்த மணப்பெண்ணான கேட்டலின் டல்லியை மணமுடித்துக்கொண்டார். போரின் போது வைலா என்ற பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட நெட் ஸ்டார்க்கிற்கு ஜான் என்கிற பாஸ்டர்ட் வாரிசும் உண்டு. கேட்டலினின் தங்கை லைசா டல்லி, ஈரீக்கோட்டையின் பிரபு ஜான் ஆரினை மணந்துகொண்டார். தனது வழிகாட்டியான ஜான் ஆரினை அரண்மனையில் பக்கபலமாக செயல்பட மன்னர் ராபர்ட் பராத்தியன் தனது வலக்கரமாக நியமிக்கிறார். பெருந்தகை பேரிஸ்டன் செல்மியின் மாவீரத்தைப் போற்றி அவருக்கு அரசமெய்க்காவலர் பதவியை உறுதிசெய்தார். சிலந்தி (எ) வேரிசை தொடர்ந்து ஒற்றர்படைத்தளபதியாக நீடிக்கவும் ஆணையிட்டார். பேரறிஞர் மேஸ்டர் பைசெலுக்கும் அவரது அரசவைப் பதவியே வழங்கப்பட்டது. நெட் ஸ்டார்க் பிரபு வடக்குதேசத்தின் பாதுகாவலராகவும், டைவின் லேனிஸ்டர் பிரபு மேற்குநாட்டின் பாதுகாவலராகவும், புரட்சிக்கெதிராக செயல்பட்டாலும், தற்போது இணக்கமாகிவிட்ட மேஸ் டைரெல் தென்மேற்கு ரீச் தேசத்தின் பாதுகாவலராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். புயல்தேசம் மீண்டும் தன் வசமானதும் ஸ்டேனிசும், நெட் ஸ்டார்க்கும் ஒன்றிணைந்து தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த இரும்புத்தீவுகளைச் சேர்ந்த க்ரேஜாய் பிரபுக்களையும் மன்னர் ராபர்ட்டின் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். பிறகு, புதிய மாமன்னர் ராபர்ட்டின் சொல்படி டார்கேரிய வாரிசுகள் ட்ராகன் பாறையில் இருப்பதைக் கண்டறிந்து அவர்களைக் கொல்லப் புறப்பட்டார் ஸ்டேனிஸ் பராத்தியன். மூன்றாவதும் கடைசியுமாக ஏரிஸ் டார்கேரியனின் வாரிசாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ரயெல்லா டார்கேரியன் மகப்பேறின் போது மரணமடைந்தார். சாவதற்கு முன் அவர் குழந்தைக்கு இட்ட பெயர் — டனேரிஸ் டார்கேரியன். டனேரிஸ், விசேரிஸ் என்கிற இரண்டே இரண்டு பேர் தான் வெஸ்டரோசையே தன் விரலசைவில் வைத்திருந்த ஏகான் டார்கேரியன் நிறுவிய பேரரசின் மிச்சம். ஆனால், ஸ்டேனிசின் வருகைக்குள் வாரிசுகள் இருவரும் பெருந்தகை வில்லெம் டேரியின் உதவியால் ட்ராகன் பாறையிலிருந்து கிழக்கே குறுங்கடலுக்கு* அப்பால் இருந்த எஸ்ஸோஸ் கண்டத்திற்கு கடத்தப்பட்டார்கள்.

அரியணைகள் ஆட்டம் காணத் துவங்கின.

கலைச்சொற்கள்:

  1. வேல்வீச்சு — Joust

2. பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி — Queen of Love and Beauty

3. புன்னகை மரப் பெருந்தகை — Knight of the Laughing Tree

4. பொய்த்த வசந்தத்தின் ஆண்டு — Year of the false spring

5. கோடைமண்டபப் போர்கள் — Battles of Summerhall

6. ஆஷ்ஃபோர்ட் போர் — Battle of Ashford

7. எல்லைப்புயல் கோட்டை — Castle of Storm’s End

8. ஸ்டோனி ஆலயம் — Stoney Sept

9. ஆலயமணிகளின் யுத்தம் — Battle of the Bells

10. திரிசூல நதிக்கரைப் போர் — Battle of the Trident

11. மாணிக்கக்கரை — Ruby Ford

12. ராஜவஞ்சகன் — Kingslayer

13. குறுங்கடல் — Narrow Sea