விடையளி - அறிமுகம்

சில மாதங்களுக்கு முன் நடந்ததிது: என்னிடம் ஒருவர் “Sir, time?” என்றார், “பத்து இருபது…” என்றேன். அதற்கு அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். பின் கீழும் மேலும். பின் மேலும் கீழும். பின் திரும்பிக்கொண்டார். என்னுள் பல கேள்விகள் - ஒருவேளை இப்போது பத்து இருபதாகயிருக்க முடியாதோ? தவறாகச் சொல்லிவிட்டோமோ? நேரம் கூடப் பார்க்கத்தெரியவில்லையே என்று இப்படிப் பார்க்கிறாரோ? மறுபடியும் என்னை மேலும் கீழும் பார்த்தார். பின் கீழும் மேலும். பொறுமையிழந்து “என்னாச்சு?” என்றேன். “இல்ல சார், படிச்சவர் மாதிரி இருக்கீங்க, தமிழ்ல டைம்சொல்றீங்களே…” :-| பின் நான் அவரை மேலும் கீழும்...

ஆங்கிலமே இனியெல்லாம் என்று நம் நகரவாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ்ச்சொற்களை நாம் நாளுக்கு நாள் மறந்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில நாள்களில் எண்களுக்கான தமிழ்ச்சொற்களை மறந்து விடுவோமோ என்று அச்சமாயிருக்கிறது. இது இப்படியிருக்க நம்மில் எத்தனை பேர் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று யோசித்திருப்போம்? சில தமிழ் ஆர்வலர்கள் “Waterfalls” என்பதற்கு “நீர்வீழ்ச்சி” என்பது இணையான தமிழ்ச்சொல் என்றாலும், அது ஒரு நேரடி மொழிபெயர்ப்பு, “அருவி” என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள் - மரபுச்சொற்களைப் பயன்படுத்துவது மேலானது என்கிறார்கள். உங்களுக்கு, நீர்வீழ்ச்சி ஞாபகம் வந்ததா, இல்லை அருவியா? அல்லது, இரண்டுமே ஞாபகம் வரவில்லையா? :( மறந்துவிடுகிறோம்.

சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில்... ‘ஏன் Facebook என்கிறாய்? முகநூல் என்று சொல்!’ என்கிறீர்களா? Facebook என்பது ஒரு பெயர்ச்சொல் (Proper noun), கமல் என்பது போல. கமல் வடமொழிச்சொல் என்பதால், அவரைத் தாமரை என்று அழைப்பது சரியா? இனி எவரேனும் Facebook, Twitter, Whatsapp முதலியவற்றிற்குத் தமிழில் மொழிபெயர்த்து எழுதினாலோ, அல்லது இணையான தமிழ்ச்சொல் என்ன என ஆராயத்தொடங்கினாலோ தடுத்து நிறுத்துங்கள். மற்ற மொழிகளைப் பயன்படுத்தாதே என்பது நம் கொள்கையாக ஒருபோதுமிருக்கக்கூடாது. அதற்குப் பதில், உங்கள் நிறுவனங்களுக்கு அல்லது குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட்டுத் தமிழை மேலெடுத்துச் செல்லுங்கள்.

சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பார்த்ததிது.

பள்ளிகளில் தமிழ் பயில்பவர்களுக்குக் கண்டிப்பாகப்பயிற்றுவிக்கப்படும் இலக்கணவிதிகளில் ஒன்று. நாமும் பயின்றோம். எத்தனை பேர் இதைச் சரியாகப் பயன்படுத்துகிறோம்? முதலில், இது எத்தனை பேருக்கு நினைவிலிருக்கிறது? நினைவிலிருந்தாலல்லவா பயன்படுத்துவது. “இரும்பு குதிரை”, “காக்கிச்சட்டை” என்று வலி மிகும் இடங்களில் மிகாமலும், மிகா இடங்களில் மிகுந்தும் பிழைகளுடன் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் ஒரு சிறு நிகழ்வு. கோவலன் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறான். அவன் கோட்டையைக் கடக்கும்போது, அங்கே மேலே கட்டப்பட்ட கொடிகள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. அவை அவனைக் கோட்டைக்குள் வராதே, ஆபத்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்வது போல் அசைகின்றன என்கிறார் இளங்கோவடிகள். ஆம், நம் பள்ளி பாட நூல்களில் இடம்பெற்ற சிலப்பதிகாரத்திலுள்ள ஒரு பாடலில் வருவதிது. தன் கருத்தை, இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து சொல்வது தற்குறிப்பேற்ற அணி என்றும், இதே போல இளங்கோவடிகள் மற்றொரு கருத்தைச் சேவல் கூவும் நிகழ்வோடு கூறுவார் என்றும் (மன்னியுங்கள், நிகழ்வை மறந்துவிட்டேன். :( ) என் தமிழாசிரியர் அழகாகச் சொல்லிக்கொடுத்தார்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் பள்ளிகளில் பயின்றோம், பின் மறந்துவிட்டோம். இந்த மறதிகளுக்கு என்ன காரணம்? பள்ளிகளுக்குப் பின் நாம் தமிழைப் பயன்படுத்துவது குறைந்துக்கொண்டு வருவதே. முக்கியமாகக் கணினித்துறைகளில் இருப்பவர்களுக்கு. என்றைக்காவது ஒரு புத்தகத்தைப் பற்றியோ ஒரு திரைப்படத்தைப் பற்றியோ தமிழில் எழுத நினைக்கும்போது பிழைகளில்லாமல் நம்மால் எழுத முடிவதில்லை. என்ன செய்யலாம்? தமிழ் சொற்களை மறக்காமலிருக்கச் செய்தால்? தமிழ் இலக்கணவிதிகளை நினைவுக்கூர்ந்தால்? விடையளி அப்படியொரு சிறுமுயற்சி.

மொழிபெயர்ப்பு, சொல்வளம், இலக்கணம், இலக்கியம் என நான்கு பிரிவுகளில் 15 கேள்விகள் கேட்கப்படும், விடையளித்து எவ்வளவு நினைவிலிருக்கிறது என்று நீங்களே உங்களைச் சோதித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள். சுவாரசியம் சேர்க்க, புள்ளிகள் கணக்கிடப்பட்டு, தரவரிசைப்பட்டியல் (முதல் 10) காண்பிக்கப்படும். இத்தளம் நம் தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு. சில தமிழ்ச்சொற்களை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை மறக்காமலிருப்பதற்கும் நினைவுப்படுத்துவதற்கும் ஒரு சிறு முயற்சி.

விடையளியின் முகப்புப்பக்கம்

விடையளி - சில குறிப்புகள்

இதுவரை விடையளியைப் பயன்படுத்தியவர்கள் கேட்ட சில கேள்விகளை இங்கே பட்டியலிடுகிறேன்.

  1. விடையளியில் கேள்விகளைச் சேர்ப்பவர்கள் யார்யார்?

விடையளி இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ் ஆர்வலர்களிடமும், தமிழைக் கற்றும், கற்பித்தும் வரும் சிலரிடமும் கொடுக்கப்பட்டது (Crowdsource செய்யப்பட்டது). இப்போதுள்ள கேள்விகள் அவர்கள் சேர்த்ததைவையே. விடையளியிலிருக்கும் பாதிக்கும் மேலான கேள்விகளைச் சேர்த்த விசயநரசிம்மன் அவர்களுக்கு நன்றி. :)

2. விடையளியில் கேள்விகள் சேர்க்க விரும்புகிறேன். யாரை அணுக வேண்டும்?

விடையளியில் யார் வேண்டுமானாலும் “என் கேள்வித்தொகுப்புகள்” என்ற பகுதியில் கேள்விகளைச் சேர்க்கலாம். ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை வெளியிடப்படும். அவற்றிற்கு மற்றவர்கள் பதிலளிக்கலாம். விடையளியில் கேள்விகள் சற்று குறைவாகவே உள்ளன. உங்களால் முடிந்தாலோ, அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் தமிழில் தேர்ந்தவர்களானாலோ கேள்விகள் சேர்த்து உதவுங்கள், சேர்க்கச் சொல்லுங்கள்.

என் கேள்வித்தொகுப்புகள் பகுதி

3. ஏன் புகுபதிய (login) வேண்டும்? பெயரிலியாகப்பயன்படுத்த (anonymous) இயலாதா?

விடையளியைப் பயன்படுத்த உங்கள் Google account கொண்டு புகுபதிய வேண்டும். பெயரிலியாகப் பயன்படுத்த இயலாது. யார் எவ்வளவு வினாக்களுக்கு விடையளித்தார்கள், அவற்றில் எத்தனை சரி என்று தெரிந்து கொள்வதற்கும் சேமித்து வைப்பதற்கும், சில நாட்களுக்குப்பின் திரும்பி வந்தால் ஏற்கனவே விடையளித்த கேள்விகளை விட்டு புதிய கேள்விகளை மட்டும் காண்பிப்பதற்கும் புகுபதிகை தேவைப்படுகிறது. நீங்களளித்த விடைகள், எடுத்த புள்ளிகள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் முதல் பத்தில் இருந்தால் மட்டும் தரவரிசைப்பட்டியலில் காண்பிக்கப்படுவீர்கள்.

4. சிட்டன், சட்டன், நிபுணன் முதலிய நிலைகள் ஆண்பாலுக்குரிய பெயர்களாக இருப்பதால், பெண்கள் சிலர் பயன்படுத்தத்தயங்குவர். மாற்ற இயலுமா?

நடுநிலையான பெயர்கள் கிடைத்தால், கண்டிப்பாக மாற்றுகிறேன். பயனர்களே, இதற்கான உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். பிடித்திருந்தால் மாற்றிவிடுகிறேன்.

5. விடையளியில் சில பிழைகளுள்ளன. இதை எப்படிச் சரிபடுத்துவது?

விடையளியைச் செய்த நான் தமிழறிஞனோ, தமிழைக் கற்றுத்தேர்ந்தவனோ அல்லன். தமிழைக் கற்றுக்கொள்ளவும், பிழையில்லாமல் எழுதவும் ஆர்வமுள்ளவன். தளத்தில் பிழைகளிருந்தால் என்னை மன்னித்து, அவற்றை மேலிடது புறத்திலுள்ள “கருத்துப்பதிவில்” (அல்லது vidaiyali.yaazh@gmail.com என்ற முகவரியில்) என்னிடம் தெரிவியுங்கள். நிச்சயம் திருத்துகிறேன். கேள்விகளில் ஐயங்களிருந்தால் - விடையளித்தப்பின் உங்கள் ஐயங்களை/கருத்துக்களை ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிவுச்செய்யலாம்.

விடையளி ஒரு தொடக்கம். பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களைக் கருத்துப்பதிவிலோ அல்லது vidaiyali.yaazh@gmail.com என்ற முகவரியிலோ என்னிடம் தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.