பொறுப்பாளர் குறிப்பு — குயர் லென்ஸ், IFFC 2020

சென்னை சுயாதீனத் திரைப்பட விழா

moulee
bumpahead.net
4 min readFeb 7, 2020

--

ஒரு திரைப்படத்தினை எது (பால்)புதுமையானதாக்குகிறது அல்லது ஒரு திரைப்படம் எப்போது (பால்) புதுமையாகக்கருதப்படுகிறது?

பால்புதுமையினர் கதாப்பாத்திரங்கள் இருப்பது ஒரு திரைப்படத்தை (பால்) புதுமையானதாக்குகிறதா அல்லது எதிர்பாலுணர்ச்சி இயல்பானதென்று (cis-hetero-normativity) கருதும் பாலீர்ப்பு (sexual orientation) அது மீறுகின்ற போது அத்திரைப்படத்தை (பால்)புதுமையான திரைப்படமென்று முத்திரையிட முடியுமா?

1992-ல் அமெரிக்க திரைப்பட விமர்சகரும், கல்வியியலாளருமான பி.ரூபி ரிச் (B Ruby Rich), மேலே கூறிய பாலியல் நோக்குநிலையை மறுக்கிற திரைப்படங்களைக் குறிக்க ‘புதிய பால்புதுமையினர் சினிமா’ (New Queer Cinema) என்ற பதத்தை உருவாக்கி பால்புதுமையினர் கலாச்சாரத்தினை நோக்கி அரசியல்மயப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில், பால்புதுமையினரின் கதை மற்றும் வாழ்க்கை பற்றிய புரிதலற்ற, உணர்வற்ற ஒன்றாக மையநீரோட்ட திரையுலகம் இருக்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பால்புதுமையினரை நேர்மறையாகவும் உண்மையாகவும் பிரதிநிதித்துவப்படுத்துவது அரிதாகவே நிகழ்கிறது. நல்ல படைப்புகளாகத் தெரிகின்ற சிலவும்கூட சமூகத்தின் வெகுசில இடங்களில் நிகழ்கிற விவாதங்களை உள்ளடக்கத் தவறியதாகவே படுகிறது. ஆனால், ஆச்சர்யப்படும் வகையில் 2019-ம் ஆண்டு திரையுலகம் இந்த பால்புதுமையினர் பற்றிய விவாதத்தினை உள்ளடக்கிய ஆண்டாகவே தெரிகிறது. இவற்றில் சில படங்கள் பால்புதுமையினர் கதாப்பாத்திரங்களை உணர்வுடனே அணுகியிருந்தாலும், அவை பெரும்பாலும் வழக்கமான எதிர்பாலுணர்ச்சி-இயல்பென்ற-நோக்குநிலை கொண்ட கதைகளிலேயே அவற்றைப்பொருத்தியிருக்கின்றன. கதையில் ஒரு கதாப்பாத்திரத்தின் பாலினத்தையோ பாலினவிருப்பத்தையோ மாறுபட்டதாக சித்தரிப்பது போன்றவை இப்போதைக்கு சரியான முயற்சியாகத் தோன்றினாலும் பால்புதுமையினரின் வாழ்க்கை யதார்த்தத்தை இன்னும் சரியாக பிரதிபலிக்கத் தொடங்கவில்லையென்றே தோன்றுகிறது.

IFFC 2020-ன் Queer Lens பகுதியில் திரையிடப்பட இருக்கும் படங்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாண்டு Queer Lens பகுதிக்காக அனுப்பப்பட்ட 1367 படங்களில் இருந்து 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பால்புதுமையினர் பற்றிய கதைகளை விவரிக்கும், வெகுகவனமாக தொகுக்கப்பட்ட இத்திரைப்படங்களை நான் உங்கள் முன்வைக்கிறேன். இன்றைய தமிழ்நாட்டில் உள்ள ஒரு லெஸ்பியன் பெண்ணுக்கும் 1958 காலத்திய வேல்ஸைச் சேர்ந்த ஒரு லெஸ்பியன் பெண்ணுக்கும் பொதுவானதாக என்ன இருக்க முடியும்? அல்லது லண்டன் மற்றும் தைபேவைச் சேர்ந்த ’ஆணாகவோ-அல்லது-பெண்ணாகவோ-தன்னை-உணராத’ நான்-பைனரி (non-binary) நபர்களுக்குள் பொதுவாக என்ன இருக்கக்கூடும்? நிராகரிப்பு என்பது திருநர் (trans) அல்லாத ஆதிக்கப்பால்-அடையால நபர்களுக்கு (cis) என்னவாக இருக்கும்? வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பால்புதுமையினர் சமூகத்திற்குள் அர்த்தமுள்ள உரையாடல்கள் நடைபெறுகின்றனவா? இத்தகைய பல்வேறு விதமான கதைசொல்லல்களில் அவர்களுக்கான குரலை காண்பதையும், அவர்கள் பிழைக்க போராடுவதையும் காண முயல்கிற நாம் பால்புதுமையினர் பற்றிய நம்முடைய உரையாடல்களில் அடையாளமற்ற பால்புதுமையினரின் நிலை என்னவாக இருக்கும்? சமூகத்தில் ”வழமையான” விருப்பங்களாக எண்ணப்படுபவை பால்புதுமையினரின் அடையாளங்களில் எந்த பங்கும் வகிக்காத போது, அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

பாலுணர்வை வரையறுப்பதில் ஆசை ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. கரிமா கவுலின் (Garima Kaul) ஆவணப்படம் Desire? (ஆங்கிலம், 2019, இந்தியா) இந்தியாவில் பாலுணர்வு அற்றவராக இருப்பதைப் பற்றியும், பால்புதுமையினர் பற்றிய நமது உரையாடல்களில் பாலுணர்வு மற்றும் காதலுணர்வு அற்றவர்கள் (aro-ace community) இடம்பெறாததைப் பற்றியும் பேசுகிறது.

நாட்டுமக்களின் சட்டப்பூர்வ குடியுரிமையைத் தீர்மானிக்க அரசு விழையும் காலத்தில் குடியுரிமை பற்றிய விவாதங்களில் ஏற்கனவே விளிம்புநிலையில் இருக்கும், சில சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளாகக் கருதப்படும் பால்புதுமையினர் எங்காவது இடம்பெறுகிறார்களா? சவினோ கார்போனின் (Savino Carbone) ஆவணப்படம் LIBERTÀ (பிரெஞ்சு / ஆங்கிலம், 2019, இத்தாலி) இத்தாலியின் பாரி நகரில் அகதிகளாக நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு லெஸ்பியன் (lesbian) பெண் மற்றும் செனகலைச் சேர்ந்த ஒரு கேய் (gay) ஆண் பற்றியும் பேசுகிறது.

தமிழ் சினிமாவாலும் பால்புதுமையினர் கதைசொல்லல்களை உணர்வுபூர்வமாகவும் துருத்தலாக இல்லாமலும் கையாள முடியும் என்பதற்கு ரெகு ராதாகிருஷ்ணனின் (Reghu Radhakrishnan) உறவுகள் தொடர்கதை (தமிழ், 2019, இந்தியா) ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது. காலமறிந்து களமறிந்து விவேகத்தோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும் — அதுவே இத்திரைப்படம் எழுப்பும் குறிப்பிடத்தக்க கேள்விகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

LGBT-வினர் பற்றி பேசும்போது அவர்களில் வயதானவர்களை நாம் எவ்வாறு சித்தரிக்கிறோம் அல்லது புரிந்துகொள்கிறோம்? ரேச்சல் டாக்ஸின்(Rachel Dax) Time & Again (ஆங்கிலம், 2019, யுகே) வேல்ஸ்-ஐ சேர்ந்த இரண்டு லெஸ்பியன் பெண்கள் உறவுமுறிவு (breakup) நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் கதை.

எல்,ஜி, பி, டி, க்யு, ஐ, ஏ (LGBTQIA) என்று வளர்ந்துகொண்டே இருக்கும் பால்புதுமையினர் வகைமைகளைப் பற்றி உலகம் குறைகூறிக்கொண்டிருக்கும் சமயத்தில், காவ் ஹாங் (Gao Hong) & சாங் சுன்-யூவின் (Chang Chun-Yu)Unnamed (சீன / ஆங்கிலம், 2019, தைவான்), இந்த சமூகம் சித்தரிப்பதுபோல் அதுவொன்றும் அவ்வளவு சிக்கலானதல்ல என்று காட்டுகின்றது. இந்த முத்திரைகள் மற்றும் வகைமைகளில் இருந்தெல்லாம் விலகி இருக்க நினைக்கும் ஜாங் யா-டிங் (Zhang Ya-Ting) மற்றும் அவரது கேய் நண்பனான ஹாங் ஜியா-ஹாவ் (Hong Jia-Hao) ஆகிய தைபேயைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பற்றிய படம்.

மைக்கேல் அச்ச்ட்மேனின் (Michael Achtman) Orin & Anto (ஆங்கிலம், 2019, யுகே), பால்புதுமையினர் சமூகத்திற்குள் நடைபெறும் தலைமுறை மாற்றத்தை நமக்குக் காட்டுகிறது. பைனரி அல்லாத நபரான ஓரின் (Orin) மற்றும் வயதான கேய் நபரான அன்டோ (Anto), ஒரு தலைமுறை இடைவெளியை எதிர்கொள்கின்றனர். பாலுணர்வு சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு கொண்ட இளைய பால்புதுமையினர்களுக்கும், அந்த விழிப்புணர்வை உண்டாக்க வழிவகுத்தவர்களாக இருந்தாலும் அவ்வழியிலிருந்து விலகிச் செல்ல மறுப்பவர்களான முதிய பால்புதுமையினர் இடையிலான பதற்றத்தை இத்திரைப்படம் படம்பிடித்துக் காட்டுகிறது.

அலெசியோ டி கோசிமோ மற்றும் ஜுவான் டியாகோ புவேர்டா லோபஸின் (Alessio Di Cosimo and Juan Diego Puerta Lopez) 35 [Temporary Number](மௌனப்படம், 2019, இத்தாலி) என்ற படம் ரோமானிய புறநகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசிக்கும் தென் அமெரிக்க திருநங்கை அமண்டாவின் கதை. திருநங்கை பாதுகாப்பாக உணரவேண்டிய தங்கள் வீடுகளிலும் பணியிடங்களிலும் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு அழுத்தமான கதையாகும்.

ஜேமி டி ஸ்பிரிட்டோவின் (Jamie Di Spirito) Thrive (ஆங்கிலம், 2019, யுகே). கேய் ஆண்களின் சமூகம் எதிர்கொள்ளும் தனிமைப்படுத்தலின் சோகத்தையும் நிராகரிக்கப்படும் அச்சத்தையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

சோபியா ஜெய்கரின் (Sofía Jaeger) XY (ஸ்பானிஷ், 2018, சிலி) 20 வயது மானுவலின் கதை. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே திருநர்களுக்கு இழைக்கப்படும் நிராகரிப்பு மற்றும் வன்முறையை பற்றிய கதையும் ஆகும்.

ஜோர்டானா வலேரி ஆலன்-ஷிம்-ன் (Jordana Valerie Allen-Shim) Gay as in Happy: A Queer Anti-Tragedy (ஆங்கிலம், 2020, கனடா / யுஎஸ்) என்பது பாலியல் வன்பிரயோகம், மனவேதனை மற்றும் டிரான்ஸ்ஃபோபியா ஆகியவற்றினிடையே மகிழ்ச்சி, எதிர்ப்பு மற்றும் மீண்டெழும்திறன் ஆகியவற்றைப் பேசும் ஒரு சோதனை முறையிலான இனவரைவியல் தன்வரலாற்று ஆவணப்படமாகும். இந்த ஆவணப்படம் சமுகத்தின் வழமையான பார்வைகளை நடுவிரல் காட்டி உதாசீனப்படுத்துவதாகவும் இருக்கிறது.

இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலம், இடம் மற்றும் வெவ்வேறு நபர்களின் கதைகளை விவரிக்கின்றன. ஒவ்வொரு படத்தையும், நம் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கும் ஒரே இணைப்புநூலாக இருப்பது பால்புதுமையினரின் வாழ்வனுபவமும் மன வேதனையும் தான். இத்திரைப்படங்கள் பால்புதுமையினரின் கலாச்சாரத்துடன் நெருக்கமானவை மற்றும் அவர்களைப் பற்றிய நமது உரையாடல்களுக்கு பொருத்தமான தொடர்புடன் இருப்பவை. நீங்கள் அனைவரும் இந்த படங்களைப் பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் இந்த விவாதத்தினை திரையரங்குகளுக்கு அப்பாலும் கொண்டுசெல்வீர்கள் என்று நம்புகிறேன்.

~ மௌலி, பொறுப்பாளர், குயர் லென்ஸ், IFFC 2020

--

--

moulee
bumpahead.net

Diversity, Equity & Inclusion Strategist. Trainer and Coach. Co-Founder Queer Chennai Chronicles.