“சாதனைகள் தானாக நிகழ்வதில்லை! தோல்விகளும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்களால் நிகழ்த்தப்படுகின்றன.”

Kheerthy
Digital Storytelling & Content Creation
6 min readDec 22, 2021

ஆர்கலி இன்ஜினியரிங் அன் கண்ஷ்ரக்சன் நிறுவனத்தின் நிறுவுனர், பொறியியல் பீட மாணவி மற்றும் பாடல் வரியமைப்பாளர் ஆர்கலி எனப்படும் ரஜித்தனா தமிழ்மாறனுடனான ஒரு நேர்காணல்.

Q1: வணக்கம் சகோதரி ரஜித்தனா தமிழ்மாறன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள்?

Ans:- உங்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி. நான் நலமாக உள்ளேன்.

Q2: ஆரோக்கியம் மிக்க சிறந்த பிரஜையை உருவாக்குவதில் சிறுபராயமும் பாடசாலைக்கல்வியும் முக்கியத்துவம் மிக்கவை. அவர்களது குடும்பம், சமூகம், பாடசாலை சமூகம், சுற்றுப்புறச்சூழல், நண்பர்கள் வட்டாரம் என்று அவர்களைச் சுற்றி இருக்கும் விடயங்களின் பிரதிபலிப்பாக நம் வளர்ச்சி மற்றும் உளவியலில் தாக்கம் செலுத்தும் என்று பொதுவாக சொல்வார்கள். அந்த வகையில் முதலில் உங்கள் சிறுபராயம் பற்றிக் கூறுங்கள்?

Ans:- நான் வீட்டில் முதல் பிள்ளை. என்னை தொடர்ந்து எனது தம்பிகள் இருவரும் தங்கை ஒருவரும் உள்ளார். இரண்டு வயதிலேயே அரிச்சுவடி கற்றுத்தரும்படி அடம்பிடித்து கற்றுக்கொண்டேன் என என் அம்மா பலமுறை கூறி மேலும் என்னை உற்சாகப்படுத்துவார். எனது பெயரில் தமிழ் வாசம் வீசவேண்டும் என்று ஆர்கலி என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.

வீரபத்திரர் முன்பள்ளியில் எனது பாலர் வகுப்பினை மிக உற்சாகத்துடன் ஆரம்பித்து மிகவிரைவாக எழுத்துக்கள் அனைத்தும் எழுதப் பழகிக்கொண்டேன். பின் சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து தரம் இரண்டு வரை கல்வி பயின்றேன்.

அதன் பின் கொழும்பு மாநகரத்திற்கு குடிபெயர்ந்த காரணத்தினால் தரம் ஐந்து வரை கொழும்பு இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் கல்வியை மேற்கொண்டேன். அப்பாடசாலை நான் வசிக்கும் பிரதேசத்திலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் விருப்பத்தேர்வின் படி அங்கிருந்து அருகிலிருக்கும் பாடசாலைக்கு மாறுவதற்கு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்ணை பெறவேண்டியதான நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக இரண்டு வருடங்கள் அதிகமாக புத்தகங்களுடனேயே நகர்ந்தது. அத்துடன் பரீட்சையில் 171 புள்ளிகளை பெற்று கொழும்பு மாவட்டத்தில் 19வது இடத்தினையும் பெற்று எனது வசிப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் இணைந்தது நான் பெற்ற முதலாவது பெரும் இலக்கு.

சிறுவயதிலிருந்தே எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயற்பட்டு வெற்றி ஈட்டுவதும் , அதற்கென அதிகபட்ச உழைப்பினை மேற்கொள்வதும் , சகிப்புத்தன்மை , சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் தலைமைத்துவ பண்புகள் அதிகம் கொண்டவளாக இருந்தேன். அத்துடன் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவளாகவும் இருந்தேன்.

Q3: பள்ளிவாழ்கை என்பது வசந்தகாலம் போன்றது என்று பலரும் சொல்லும் அதே நேரம் சிலருக்கு அது கசப்பான நினைவுகளாக இருக்கும். அந்த வகையில் உங்களுடைய பள்ளிக்காலம் எவ்வாறாய் அமைந்தது? உங்களுடைய பாடசாலை நாட்கள் பற்றிக் கூறுங்கள்?

Ans :- ஆம் கண்டிப்பாக சகோதரி. பாடசாலை என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்குமான இரண்டாவது உலகம் எனலாம். நண்பர்களுடனான இனிமையான நினைவுகள் , சில முரண்பாடுகள் நிறைந்த நட்புவட்டாரம் , அன்பால் அறிவு சூடும் ஆசிரியர் குழாம் என பல்வேறுபட்ட காத்திரம் நிறைந்த களங்கள்.

இப்படியாக தொடங்கப்பட்ட என் பாடசாலை கல்வி கொழும்பு இராமநாதன் கல்லூரியில் இரண்டு வருடங்கள் தொடர்ந்தது. தரம் எட்டு கல்வி கற்கும் காலத்தில் என் குடும்பத்தினருடன் இணைந்து மீண்டும் யாழ்ப்பாணம் இடமாறிச் சென்றேன். அங்கு யாழ்.விக்ரோறியா கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி பயன்றேன்.

எனக்கு கணித துறையில் அதிகளவிலான நாட்டம் இருந்தது. இருப்பினும் உயர்தரத்தில் உயிரியல் துறையினையே தேர்வு செய்திருந்தேன்.பின் பொறியியல் துறையை தேர்வு செய்து கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். பாடசாலை காலத்தில் கவிதை , சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததுடன் பல போட்டிகளில் கலந்து பரிசில்களும் பெற்றுக்கொண்டேன். மற்றும் விஞ்ஞான மன்றத்தில் உறுப்பினராகவும் செயலாற்றினேன். வலைப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த விருப்பம் கொண்டவளாகவும் வீராங்கனையாகவும் பாடசாலை காலங்களில் காணப்பட்டேன்.


Q4: ஆரம்பகாலத்தில் உங்களுடைய இலட்சியம் என்ன? முன் உதாரணமாக யாரை நினைத்துக் கொள்வீர்கள்?

Ans :- சிறுவயது முதல் வைத்தியராக வேண்டும் என்னும் இலட்சியம் என்னிடையே மேலோங்கி காணப்பட்டது. ஓர் வைத்தியருக்கு கொடுக்கப்படும் நன்மதிப்பு மற்றும் அத்துறை மீதான அழகியல் நிமிர்த்தம் நானும் வைத்தியராக வேண்டும் என்னும் அவா என்னிடம் அதிகமாகவே காணப்பட்டது. அத்துடன் பெற்றோரின் தூண்டுதல் மிகையாக காணப்பட்டமையால் வைத்தியராக வேண்டும் என்னும் கனவு மேலும் வலுப்பெற்றது.

ஆனாலும் நான் கணித துறையிலேயே அதிக வினைத்திறனான பெறுபேற்றினை காண்பித்து வந்திருந்தேன். ஆனாலும் வைத்தியராக வேண்டும் என்னும் பொருத்தமற்ற ஆசை என் உண்மையான கொள்ளளவு என்ன என்பதை மறைத்துவிட்டது. அதனால் உயிரியல் பிரிவில் இணைந்து என் உயர்கல்வியை தொடர்ந்தேன். இருப்பினும் என்னால் அதில் சாதனை நிகழ்த்த முடியவில்லை. மூன்று தடவையும் முயற்சி செய்து சுகாதாரத்துறையுடன் தொடர்புபட்ட “பிசியோதெரப்பி” என்னும் கல்வித்துறையில் உள்நுழைந்தேன். பின் பயிற்சிக்காக கொழும்பு ஆதார வைத்தியசாலையில் இரண்டாம் வருடமுடிவில் பயிற்சி பெற்றுக்கொண்டேன்.

இருப்பினும் என்னால் சாதனை என்ற ஒன்றை என் மனம் பூசிக்காத உணர்வு என்னுள் மேலோங்கி இருந்தது. பின் தனியார் நிறுவனத்தில் பொறியியல் கல்வியை கற்க ஆரம்பித்தேன். “தனியாரா? அது சரியில்லை. உனக்கு வேண்டாத வேலை இது.” என்று பல கற்கள் என்மீது கருத்துகளாக வீசப்பட்டது. எதனையும் பொருட்படுத்தாது கல்வியை மேற்கொண்டேன். தற்போது வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டுள்ளேன்.

உண்மையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பங்களும் எனக்கான முன்னுதாரணங்களே. நான் என் வாழ்க்கை பாதையே எனக்கான முன் உதாரணமாக தெரிவு செய்து முன்னேறிக்கொண்டுள்ளேன். அவை எனக்கான சிறந்த ஆசானும் கூட.

என்னை போன்ற என் சக சகோதர சகோதரிகளுக்கும் நான் இதை அறிவுரையாகவே கூற நினைக்கிறேன். பிறர் கூறுகிறார் , பெற்றோர் ஆசை , என் சுயவிருப்பு என்னும் போர்வையின் கீழ் யாரும் உங்கள் எதிர்கால இலக்கினை தீர்மானம் செய்யாதீர்கள். உங்கள் திறன் என்ன? உங்கள் தேடல் என்ன? உங்களால் என்ன முடியும்? எதற்காக முயற்சிகள் எடுப்பது நன்று? என்னும் கேள்விகளுக்கு விடைகளை முதலில் பெற்றுக்கொண்டு பின் சுயமதிப்பீட்டினையும் மேற்கொண்டு அதற்கிணங்க செயல்படுவதன் மூலம் உங்கள் காலத்தினையும் நேரத்தினையும் திறமையையும் வீணாக்கிவிடாது ஓர் நல்ல நிலையினை அடையக்கூடியவாறு காணப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

Q5: நீங்கள் பொறியியல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் அதே நேரம் ஆர்கலி இன்ஜினியரிங் அன் கண்ஷ்ரக்ஷன் எனும் கட்டடநிர்மாண தொழிலகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்துள்ளீர்கள். இது குறித்து உங்களுக்கு இதில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது எனக்கூறுங்கள்?

Ans:- பெண்கள் பொதுவாக கட்டடநிர்மாணத்துறைக்குள் உள்நுழைவது மிகக்குறைவு. ஆனால் புதுமைகளை என் வசமாக்குவதில் அலாதிப்பிரியம் கொண்டவள் நான். அத்துடன் புதுவிதி செய்வோம் என்னும் சிந்தனையை மிகவும் செவிமடுப்பேன். இவ்வாறான நிலையில் எனது பயிற்சிக்காக நான் பலமுறை பல நிறுவனங்களிடம் எனது சுயவிபரகோவையை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதற்கு தகுந்த போலான பதில்கள் எனக்கு கிடைப்பதில்லை. பெண்பிள்ளைகள் வேலைத்தளத்தில் பணியாற்றுவதில் சிரமமான சூழல் ஏற்படுவதுடன் சிறந்த இலாபம் ஈட்டுவதும் கடினம் என்னும் காரணங்களினால் தட்டிக் கழித்தவாறு இருந்தனர்.

இதனால் மனதில் ஓர் தேடல் தோன்றியது . “ஓர் நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக முன்னெடுத்து பெண்களுக்கான வாய்ப்பினையும் வழங்கி ஓர் பெண்ணாக சிறந்த நிறுவனத்தை உருவாக்கி கொள்ளவேண்டும் “ என்னும் அவா தோன்றியது.

அதற்கிணங்க பல இன்னல்களின் மத்தியில் நிறுவனத்தை ஆரம்பித்து தற்போது யாழ்ப்பாண பிரதேசங்கள் , நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் பல நிர்மாணத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறேன். மேலும் பல வேலைவாய்ப்பினை நம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தி என்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றேன் என்பதை மனமகிழ்வுடன் கூறிக்கொள்கிறேன்.

Q6: ஆர்கலி இன்ஜினியரிங் அன் கண்ஷ்ரக்சன் நிறுவனத்தை ஆரம்பிப்பதிலும் அதை நடாத்துவதிலும் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள் என்பது பற்றியும் கூறுங்கள்?

Ans:- ஆண்கள் என்றால் பொறியியலாளர் , பெண்கள் என்றால் வைத்தியர் என்னும் ஓர் பரவலான கருத்து நம் சமூகத்தினரிடையே வெகுவாக காணப்படுகின்றது. காரணம் பெண் மென்மைத்தன்மை பொருத்தியவள் என்பதால் கடினமான தொழில்துறையை மேற்கொள்வது கடினம் என்னும் மனப்பான்மை தான் காரணம். ஆனாலும் பொறியியல் துறை மீதான அதீத விருப்பு காரணமாக உடற்களைப்பு எதுவும் என்னை பின்நோக்கி இழுப்பதாக இல்லை.

அத்துடன் வேலைத்தளத்தில் மென்போக்கு தன்மையை கையாளும் போது வேலையாட்கள் அதனை சார்பாக எடுத்து வேலையை தாமதிக்கிறார்கள் என்பதை அறிந்த பின் சற்று அன்பு கலந்த அதிகாரத்தை மேற்கொண்டு எனது நிறுவனத்தை வெற்றிகரமான பாதையை நோக்கி என் ஆர்கலி இன்சினியரிங்க அன் கன்ஸ்ரக்ஷன் குடும்பத்தினரின் உழைப்பினால் எடுத்துச் செல்லக்கூடியவாறு காணப்படுகின்றது.

புதிதாக ஆரம்பித்தவுடன் கை தருவதற்கு பதிலாக பலர் காலைவாறிய போதிலும் என் தற்துணிவும் விடாமுயற்சியும் சமயோசித புத்தியும் எப்பிரச்சனைகளையும் தயங்காது முன்னின்று எதிர்கொள்ளும் மனப்பான்மையும் மேலும் எனக்கு வலுச் சேர்ப்பதாகவே காணப்பட்டது.

Q7: நீங்கள் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர் என்று அறிந்தோம். கவிதைகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போதிலிருந்து ஏற்பட்டது?

Ans:- இவ்வுலகை இரசித்து என் கண்களால் பார்க்கத்தொடங்கியது முதல் மழலை கவியிலிருந்து இன்று வரை கவிதை எழுதி வருகிறேன். அநேகமான கவிதைகள் பாடசாலை முடிந்ததன் பிற்பாடே எழுதினேன். கற்றல் செயல்பாட்டிற்கான இடையூறு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்று கவிதை எழுதுவதற்கு நேரம் ஒதுக்குவதில் சற்று சிரமம் இருந்தது. இருப்பின் பல காகித துணுக்குகள் என் புத்தக இடுக்குகளில் கவிதைகளை சுமந்தபடி இன்றும் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

Q8:- நீங்கள் எவ்வாறான கவிதைகளை அதிகம் எழுதியுள்ளீர்கள்?

Ans: அநேகமாக மனித மனநிலைகளை நகல் செய்யும் முகமாகவே என் கவிதைகள் காணப்படுவதுடன் சமூகவியலினை உள்ளடக்கியதாகவும் எழுதுவதுண்டு. அத்துடன் எந்தவொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் என் திறன் காரணமாக முகநூல் போன்ற அனைத்து சமூகவலையத்தளங்களிலும் கவிதைகளை பதிவேற்றுவதுடன் அதை குரல் வடிவிலும் வடிவமைப்பு செய்து பதிவிடுவது வழமை.

அத்துடன் மீள் உருவாக்கத்தில் ஓர் பாடலும் மேலும் மூன்று பாடல்கள் தற்போது இசை வடிவமைப்பு வேலைத்திட்டத்திலும் உள்ளது. மற்றும் ஆர்கலி என்னும் பெயரில் சமூகவலைத்தளத்தில் கவிதைகள் வெளிவருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் கவிதை தொடர்பான “ஆர்கலி கவிதைகள்” என்னும் Youtube Channel ஒன்றையும் செயற்படுத்தி வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

Q9: அண்மையில் ஒரு Cover Song பாடல்வரிகள் எழுதியுள்ளீர்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன?

Ans : சமூகவலைதளங்களில் வெளியாகும் என் கவிதை வரிகளினால் ஈர்க்கப்பட்டு “வசீகரா” என்னும் இந்திய பாடலினை மீளுருவாக்கமான “வெண்மேகமே” என்னும் பாடலினை Jaffna Music குழுவினரால் மயூசன் அவர்களின் குரலில் எனது வரிகளில் பாடலை அண்மையில் வெளியீடு செய்திருந்தோம். மேலும் மூன்று பாடல்களும் தற்போது இசை வடிவமைப்பு வேலைத்திட்டத்தில் உள்ளது. அவற்றையும் குழு விரைவில் வெளியிட உள்ளோம்.

Q10: உங்களது தொழில் நிறுவனத்திற்கு ஆர்கலி என்று பெயர் வைத்ததன் காரணம் என்னவென்று கூறுங்கள்?

Ans : தமிழ் மீதான பற்றுக் காரணத்தினால் எனது பெயரினை ஆர்கலி என பெயர் சூட்டி அழைத்து வந்தனர். இப்பெயர் மீதான பற்றும் வேட்கையும் எனது நிறுவனத்திற்கான பெயர் சூட்டலிலும் செல்வாக்குச் செலுத்தியது. மற்றும் எனது பெயருக்கான அடையாளத்தை நான் கொடுக்க விரும்பியதால் அப்பெயரினையே தெரிவு செய்து கொண்டேன்.

Q11: நீங்கள் உங்களிடம் பெருமையடைந்த அல்லது மகிழ்ச்சி அடையும் விடயம் என்ன?

Ans: இன்றும் பெண்கள் சமூகத்தில் தனித்து செய்யப்படமாட்டார்கள் என்னும் கண்ணோட்டத்தில் அடக்குமுறைகளை உறவுமுறை குறித்து அன்பாகவும் சிலவேளைகளில் அதிகாரமாகவும் இடம்பெற்று வருகின்றது என்பதை நம் கண்ணூடு பார்த்தே வருகிறோம். ஆரம்பத்தில் இந்நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது ஓர் பெண்ணால் எப்படி நிர்மாணத்துறையில் ஈடுபட முடியும்? எப்படி தனியாக இதனை கையாளுவீர்? ஒரு பெண் முதலாளியா? நீ சிறுபிள்ளை ஆகவே ஏமாற்றிவிடுவார்கள்? நட்டம் வரும் உனக்கு தெரியுமா? நானே வேறு தொழில்துறைக்கு செல்லப்போகிறேன் நீ இதற்குள் நுழைகிறாயே? இது உனக்கு வேண்டாத வேலை தெரியுமா? என்று ஆயிரம் கேள்விகள் கூற்றுகள் என்மீது தொடுக்கப்பட்டது.

இருப்பினும் என் தனித்துப் போராடும் ஆற்றலும் , உன்னால் முடியாது என்று சொல்பவருக்கு “என்னால் முடியும் பாருங்கள்” என்று என் வெற்றியை பரிசளிக்கும் கர்வமும் , “நீ சாதிப்பாய்” என்று என் அம்மா கூறும் உந்தமும் என்னை மிக குறுகிய காலத்திற்குள் ஓர் சாதனையாளராக மாற்றி இரசிக்கிறது. உண்மையில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அத்துடன் மிகவும் சந்தோசமாகவும் உள்ளது. அத்துடன் என் கடின உழைப்பும் தலைமைத்துவ பண்பும் என் சீரிய இலட்சியத்திற்கு பக்கதுணையாக இருப்பதும் தனிப்பட்ட ரீதியில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ஓர் குழந்தை தனக்கான இலட்சியப்பாதை எது என்பதை அதுவாகவே உணரும் வரை எந்தவொரு செல்வாக்கையும் அதன் முடிவுகள் மீது செலுத்தாவிடின் சிறந்த வெற்றியாளராக சமூகத்தில் மிளிருவார் என்பதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம். பெண் பிள்ளை நீ உன்னால் இது முடியாது உனக்கு இது வேண்டாம் என்ற கருத்துக்களையும் அவர்களின் இலட்சியம் மீது திணிக்காதீர்கள். உண்மையில் பெண்கள் தைரியத்திலும் மனவுறுதியிலும் மிகவும் மேலாண்மை மிகுந்தவர்கள். பூக்கள் சுயாதீனமான மலரட்டும்.

Q12: மிக்க மகிழ்ச்சி சகோதரி.
உங்களுடைய எதிர்கால செயற்பாடுகளுக்கும் ஆர்கலி இன்ஜினியரிங் அன் கண்ஷ்ரக்ஷன் நிறுவனத்தின் முன்னோக்கிய நகர்விற்கும் மற்றும் மேலும் சிறந்த கவிதைகள் மற்றும் பாடல்களைப் படைக்க வாழ்த்துக்கள். தங்களுடைய சிறந்த எண்ணங்களும் செயற்பாடுகளும் எங்களுக்கு நிச்சயம் வலுவூட்டும். உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவிட்டு சிறந்த ஒரு உரையாடலை அளித்ததற்கு நன்றிகள்.

Ans: நன்றிகள் சகோதரி….

--

--