“நாம் எது நினைத்தாலும் அது சரியானது என்றால் அடுத்தவர்களுக்குத் தீங்கில்லை என்றால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நமக்குக் கொடுத்தே தீரும்.”

Kheerthy
Digital Storytelling & Content Creation
6 min readDec 22, 2021

பல்கலைக்கழக மாணவனும் அகதி வலையொளியமைப்பின் ஸ்தாபகரும் ஆன பொன்குணரத்தினம் இன்னிசைத்தமிழன் அவர்களுடன் ஓர் நேர்காணல்

Q1: வணக்கம் பொன்குணரத்தினம் இன்னிசைத்தமிழன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள்?
Ans: வணக்கம். நான் நலமாக உள்ளேன். முதலில் என்னை இந்த நேர்காணலுக்கு தெரிவு செய்தமைக்கு நன்றிகள்.

Q2: ஆரோக்கியமிக்க சிறந்த பிரஜையை உருவாக்குவதில் சிறுபராயமும் பாடசாலைக்கல்வியும் முக்கியத்துவம் மிக்கவை. அவர்களது குடும்பம், சமூகம், பாடசாலை சமூகம், சுற்றுப்புறச்சூழல், நண்பர்கள் வட்டாரம் என்று அவர்களைச் சுற்றி இருக்கும் விடயங்களின் பிரதிபலிப்பாக நம் வளர்ச்சி மற்றும் உளவியலில் தாக்கம் செலுத்தும் என்று பொதுவாக சொல்வார்கள். அந்த வகையில் முதலில் உங்கள் சிறுபராயம் பற்றிக் கூறுங்கள்?

Innisaithamilan

Ans: 2000ஆம் ஆண்டு பிறந்தேன். சிறுபராயத்தில் வன்னிப்பகுதியில் தான் வாழக்கூடியதாக இருந்ததது.அதனால் தரம் 04 களில் எல்லாம் சரியான கல்வியைப் பெறமுடியவில்லை. யுத்தமென்பது எனது சிறுபராயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதானால் சிறிய வயதில் கல்வியை சரியான முறையில் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

பின்னர் யுத்தம் முடிந்து முகாம் சென்று, பின்னர் முகாம் வாழ்க்கை முடிவுற்று யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் கல்வியை சரியாகத் தொடரக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த காலகட்டம் வித்தியாசமான சூழல் மகிழ்ச்சியாக இருந்தது.

Q3: பள்ளிவாழ்க்கை என்பது வசந்தகாலம் போன்றது என்று பலரும் சொல்லும் அதே நேரம் சிலருக்கு அது விருப்பமற்ற நினைவுகளாகவும் இருக்கும். அந்த வகையில் உங்களுடைய பள்ளிக்காலம் எவ்வாறாய் அமைந்தது? உங்களுடைய பாடசாலை நாட்கள் பற்றிக் கூறுங்கள்?

Ans: ஆம், பாடசாலை வாழ்க்கை என்பது என்னைப் பொறுத்தவரையில் இதுவரை என் வாழ்க்கைக் காலத்தில் மிக முக்கியமானதொன்றாகும். என்னை ஒரு தனித்துவமான ஒருவனாக உருவாக்குவதிலும் என் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றது.

அந்த ரீதியில் ஆரம்பக்கல்வியை முதல் குறிப்பிட்டது போன்று சரியாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் யுத்த சூழல் காரணமாக மூன்று நான்கு பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டிய நிலைமை வந்தாலும் கூட பின்னர் இரண்டாம் நிலை கல்விக்காக யாழ்.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியை தெரிவு செய்து கொண்டேன். அது உண்மையில் என் வாழ்க்கையில் முக்கியமான ஆசிர்வதிக்கப்பட்ட தெரிவாக இருந்தது.

தரம் 05 படித்து விட்டு தரம் 06 இற்கு செல்லும் போது இரண்டு தெரிவு இருந்தது. ஒன்று விக்ரோறியாக் கல்லூரி அல்லது தரம் 07 , 08 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இணையலாம் என்று. தரம் 06 இற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இணைவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை காரணம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரிதாகப் புள்ளிகள் பெறமுடியவில்லை அத்தோடு யாழ் இந்துக் கல்லூரி தூரமாக இருந்ததால் பேரூந்தில் செல்ல வேண்டும் அது எனக்கு சரியாக வராது என்ற காரணங்களினால் நான் விக்ரோறியாக் கல்லூரியினைத் தெரிவு செய்தேன்.

பின்னர் விளையாட்டாக இருக்கட்டும் கல்வி கலையாக இருக்கட்டும் எல்லாவற்றிலுமே தனித்துவமாக எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இங்கிருந்து நகர்ப்புறப் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் போது நாங்களும் பத்தோடு பதினொன்றாகவே தெரிவோம். ஆனால் எங்களுடைய கிராமப்புறப் பாடசாலைகளில் எங்களை ஒவ்வொரு விடயத்திலும் தனித்துவமாகக் காட்டக்கூடியதாக இருந்தது.

மிகமுக்கியமாக இல்லமெய்வல்லுனர் போட்டிகளில் எல்லாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படக்கூடியவாறு இருந்தது. அத்துடன் ஒவ்வொரு செயற்பாடும் அங்கு கிடைத்த ஒவ்வொரு நண்பர்களும் பாடசாலை அன்னை தந்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் எங்களுடன் ஒற்றுமையாக இணங்கி அனைத்து செயற்பாடுகளும் செய்யக்கூடியவாறு இருந்தது. உதாரணமாக உயர்தரத்தில் நான் சிரேஷ்ட மாணவத் தலைவனாக இருந்தேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு செயற்பாட்டைச் செய்யும் பொழுதும் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

அத்தோடு எமது ஆசிரியர்களும் சிறந்த வழிகாட்டலுடன் எங்களை வழிநடத்தினார்கள். அந்த ரீதியில் பாடசாலைக் கல்வி என்பது எனக்கு மிக முக்கியமானதொன்றாகும். இன்னுமொன்றைக் குறிப்பிடவேண்டும் என்னவென்றால் உயர்தரத்தில் நான் கல்வியில் ஒரு சராசரியாகப் படிக்கும் மாணவன் தான். மீத்திறன் கூடியவன் என்றல்ல. அந்த ரீதியில் சராசரியாகப் படிக்கும் என்னைப் பொறுத்த வரையில் நான் பரீட்சைக்கு அண்மித்த நேரங்களில் பாடசாலை கல்விவிடுமுறையில் எல்லோரும் நகர்ப்புறத்தில் இருக்கும் தனியார் கல்வி நிலையங்களில் மட்டும் சென்று கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியார் கல்விநிலையத்தை விடுத்துப் பாடசாலையில் மட்டுமே படித்தேன்.

ஒவ்வொரு பாடத்திற்கும் எங்களுக்கு கல்விகற்றுத் தந்த ஆசிரியர்களிடமும் எனது பாடசாலையின் வேறு ஆசிரியர்களிடமும் பாடசாலை நேரத்தில் சென்று படித்தேன். அதை வைத்துக் கொண்டு தான் உயர்தரத்தில் பெறுபேற்றைப் பெற்று இப்போது பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளேன்.

Q4: ஆரம்பகாலத்தில் உங்களுடைய இலட்சியம் என்ன? அது இப்பொழுது எவ்வாறு மாற்றமடைந்தது ?

Ans: ஆரம்பகாலத்தில் இலட்சியம் என்று பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. பொதுவாக சின்ன பிள்ளைகள் வைத்தியராக வேண்டும் பொறியியலாளராக வேண்டும் என்று கூறுவார்கள். நான் தரம் நான்கில் இந்தியா சென்றுவந்தேன் அப்போது விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பின்னர் அது எனக்கு சரியாக வராது என்று சரியான விளக்கம் வந்தபின்னர் உணர்ந்து கொண்டேன்.

சரியான விளக்கம் வந்த பின்னர் சாதாரணதரம் படித்துக் கொண்டிருக்கும் போது சாதாரணதரப் பரீட்சையில் சராசரியாக ஒரு பெறுபேற்றைப் பெற்றேன். உயர்தரத்திற்கு கணிதம் அல்லது உயிரியல் பிரிவைத் தெரிவு செய்து கொள்ள முடியும். ஆனாலும் உயிரியல் பாடம் எனக்கு சரியாக வராது என்ற காரணத்தினாலும், எல்லோரும் கணிதம் செய்யக்கூடியவர்கள் எல்லோரும் கணிதப்பிரிவைத் தெரிவு செய்கிறார்கள் என்று கணிதப்பிரிவைத் தெரிவு செய்தேன்.

ஆனாலும் படிக்க ஆரம்பித்த பின்னர்தான் யோசித்தேன் அதில் எனக்கு சரியாகப் பிரகாசிக்க முடியவில்லை. அத்தோடு கணிதம் படித்து பொறியியலாளனாக வந்து அதில் என்ன செய்யப் போகின்றேன் என்று அதில் சரியான விளக்கமும் எனக்கு இருக்கவில்லை. அப்போதுதான் இந்த விவாதங்கள் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் போது தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்கின்ற ஆசை வந்தது.

அப்போது தான் சட்டத்தரணியாக வேண்டும் என்றால் அதற்கு என்ன வழி என்று முதலில் எல்லோரிடமும் தேடி கேட்டு அறியும் போது தான் இலங்கை சட்டக்கல்லூரியில் உயர்தரம் முழுமையான சித்தியுடன் அதன் நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்தால் சட்டக்கல்லூரியில் கல்வி பயிலலாம் அதுவும் அரசாங்கம் சார்ந்தது மற்றும் பெறுமதிமிக்கது என்று தெரிந்தபின் அதை இலக்காக வைத்து செயற்படுவோம் என்று செயல்பட்டேன். அத்துடன் நான் பல்கலைக்கழகம் செல்வேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை ஏனென்றால் நான் அந்த அளவுக்குப் படிக்கவுமில்லை.

இப்பொழுது இலட்சியம் என்று சொல்லும் போது ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்பதுவே. தொழில் முனைவோராகிப் பல தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி 95% Comfort Zone என்று சொல்லப்படும் இலகுவான வாழ்க்கை ஏதாவது வேலை கிடைத்தால் சரி என்று ஓடிக்கொண்டிருக்காமல் செயற்பட வேண்டும்.

தொழில்முனைவோராகுவதற்கு முதலில் பெரிய ஒரு முதலினை சேமிக்க வேண்டும், மனிதர்களின் தொடர்பாடல் தேவை. என்னைப் பொறுத்த வரையில் நான் மிகவும் பிரதானம் என்று நினைப்பது மனிதர்களுடைய தொடர்பாடல். எவ்வளவு சம்பாதிக்கின்றோம் என்பதை விட எவ்வளவு மனிதர்களை நாங்கள் சேர்த்து வைத்திருக்குறோமோ அவர்களுடன் சரியாகப் பழகி வைத்திருக்கிறோமோ அது எங்களுக்கு மிகப்பெரிய சொத்து. அந்த ரீதியில் இப்பொழுது எல்லோரும் சொல்வது போன்று இலட்சியம் என்று இருப்பது தொழில் முனைவோர் ஆகவேண்டும்.

Q5: நீங்கள் சட்டக்கல்வி கற்பதில் மிக ஆர்வமாக உள்ளீர்கள் என கூறியிருந்தீர்கள். உங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படுவதற்கான காரணம் ?

Ans: ஆம், சட்டம் சார்ந்து எனக்கு அதில் ஆசையோ அல்லது ஈர்ப்போ ஏற்பட முதலாவது காரணம் விவாதம் போன்றவற்றில் ஈடுபடவதனால் விவாதத்தில் அளவுகடந்த ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதன் அடிப்படையில் சட்டத்துறையில் எனக்கொரு ஈர்ப்பு வந்திருக்கலாம்.

மற்றது நான் சட்டத்தரணியாகத்தான் ஆகவேண்டும் என்று தெரிவு செய்தது ஏனென்றால், இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு சிறுபான்மை இனமாகத் தமிழர் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் எங்களுடைய எல்லைகள் அதாவது நாங்கள் எவற்றை செய்வது சரி அல்லது எவற்றை செய்தால் தவறு என்பது பற்றி அறிந்து வைத்திருக்கும் போது தான் நாம் எதையும் பயப்படாமல் தைரியமாகச் செய்து கொள்ள முடியும் முன்னின்று செயற்படுத்த முடியும் என்ற ரீதியில் இங்கு வாழ்வதற்கு இது கட்டாயத் தேவை என்பதனை உணர்ந்து கொண்டேன்.

மற்றது ஒரு தொழில்முனைவோர் என்ற ரீதியில் நான் சிந்திக்கும் போது ஒரு தொழில்முனைவோராவதற்கு ஒவ்வொரு வணிகம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் ஒரு தொழில் பேட்டை ஒன்றை நிறுவும் போது சட்டம் சார்ந்த விடயங்களும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால் தான் இலகுவாக நாம் அவற்றைச் செயற்ப்படுத்த முடியும் என்ற இரண்டு காரணங்களினால் தான் சட்டத்தரணியாக வேண்டும் என்ற ஆசையோ எண்ணமோ எனக்கு ஏற்பட்டது.

Q6: இன்றைய இளைஞர்கள் பலரும் உங்களைப்போல ஆரோக்கியம் மிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் சிலர் வழிதவறி செல்லவே செய்கின்றனர். அந்த வகையில் நீங்கள் உங்களிடம் பெருமையடைந்த அல்லது மகிழ்ச்சி அடையும் விடயம் என்ன?

Ans: பெருமையடைந்த அல்லது மகிழ்ச்சி அடைந்த என்று சொல்லக்கூடிய விடயமென்றால் ஒவ்வொருவருடனும் பழகும் போதும் இலகுவாக அவர்களுடன் நெருங்கிய நட்புவட்டாரத்துக்குள் செல்லகூடியதாக இருக்கும். அதற்கு உதாரணம் ஒருமுறை கொழும்பிலிருந்து வரும் போது ஒரு அண்ணா ஒருவர் அப்போது தான் கதைத்து புதிதாக ஒரு நட்பு உருவானது. ஆனால் இன்று வரை பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் இடையிடையேயான தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பும் அளவிற்கு நெருக்கமான ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பாடல் திறன் என்னிடம் அதிகம் இருக்கிறது. அதில் நான் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

Q7: அகதி எனும் பயன்மிக்க வலையொளியினை செயற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அகதி என்று பெயரிடுவதற்கான காரணம் என்ன ? அதில் ஆளுமைத்தேடல்,பனுவற்பகிர்வு,நிதர்சனங்கள் என மூன்று நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்கினீர்கள் மற்றும் அவ்வாறு பெயரிட காரணம் என்ன?

Ans : ஆம்,அது எப்படி நடந்தது என்பதே எனக்கு நினைத்துப் பார்க்கவே புரியாத விடயம்.

ஆரம்பத்தில் இந்திய வலையொளி பேசு தமிழா பேசு மற்றும் பயணி என்கிற கல்யாணசுந்தரம், இப்பொழுது அவர் நாம் தமிழர் என்ற கட்சியிலிருந்து விலகி அவர் வேறொரு பாதையில் போய்விட்டார், அந்த வலையொளிகளைப் பார்த்துத் தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியலைத் தாங்கி தமிழர்களுக்கான ஒரு சரியான ஊடகம் ஒன்றை வளர்த்தெடுக்கும் ஆசை தோன்றியது. அதனது ஆரம்பக்கட்டமாகத் தான் ஒரு வலையொளியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.

இருந்தாலும் ஒரு கையடக்கத் தொலைபேசி மூலம் ஒரு கறுப்புத்துணி பின்னணியில் அமைத்து செய்யக்கூடிய இயலுமையில்தான் இதனை ஆரம்பித்தேன். அதற்குப்பின் எவ்வாறு அந்தப் பெயர் வைத்தேன் எவ்வாறு இலச்சினை தயாரித்தேன் எவ்வாறு சரியான ஒரு குழு அமைந்தது அவையெல்லாம் இந்தப் பிரபஞ்சம் எனக்கு வழங்கியது என்றே சொல்ல வேண்டும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு. ஆனாலும் Law of Attraction என்கிற விடயத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். “நாங்கள் என்ன நினைத்தாலும் அது சரியானது என்றால் அடுத்தவர்களுக்குத் தீங்கில்லை என்றால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நமக்குக் கொடுத்தே தீரும்”.

சின்ன வயதில் இருந்தே எங்களுடைய கிரிக்கெட் சிவரூபன் மாஸ்டர் சொல்வார், இதை நான் பல இடங்களிலும் கூறியுள்ளேன். நாங்கள் 2015 கிரிக்கெட் அணி தயார்ப்படுத்தும் போது நான்தான் அணித்தலைவர். அப்போதும் சரி உயர்தரம் வந்து மாகாணமட்ட கிரிக்கெட், எல்லே பயிற்சிகளில் மிகுந்த கடின உழைப்பை மேற்கொள்வோம் ஆனாலும் கூட இறுதிப் போட்டிகளில் மட்டும் வெற்றி கிடைப்பதில்லை. அபபொழுதெல்லாம் மாஸ்டர் சொல்வதொன்று ‘நீங்கள் ஒன்றில் கொடுக்கும் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் எப்போதும் வீணாகாது இன்னொன்றில் பிரதிபலிப்பாகும்’’ என்று. அதன் பிறகு நான் “The Secret’’ என்ற நூல் வாசித்து அது சம்மந்தமான காணொளிகளைப் பார்த்த பின்பு Law of Attraction என்பதில் எனக்கு சரியானதொரு நம்பிக்கை வந்தது.

அதனடிப்படையில் தான் நான் ஒன்றை யோசித்துக் கொண்டேன், நாங்கள் என்ன நினைத்தாலும் அது சரியானது என்றால் அடுத்தவர்களுக்குத் தீங்கில்லை என்றால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நமக்குக் கொடுத்தே தீரும் நாம் அதற்கு சரியாக செயற்படுவோமேயானால்.

அந்த வகையில் தான் இப்படி ஒரு அகதி என்கிற வலையொளியை உருவாக்கியதாக இருக்கட்டும் அதற்கான சரியான குழு அமைந்ததாக இருக்கட்டும் அதற்குள் மூன்று பகுதிகளாகப் பெயரிட்டதாக இருக்கட்டும் இவையெல்லாம் எப்படி யோசித்தேன் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. அவையெல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட சிந்தனையாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

Q8: அகதி வலையொளியில் எவ்வாறான விடயங்களைப் பதிவு செய்து கொள்வீர்கள்?

Ans:- அகதி வலையொளியில் மாதம் மூன்று காணொளிகள். அதாவது 4,14 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணொளிகள் பதிவிடப்படும்.

4 ஆம் திகதி பனுவற்பகிர்வு ஒவ்வொரு நூல்கள் பற்றி அவற்றை வாசித்து அதன் கருத்துக்களை என் சார்பில் சொல்வதும், 14 ஆம் திகதி நிதர்சனங்கள் என்று சமூகத்தில் நிகழும் பிரச்சினைகள் அல்லது பேசப்பட வேண்டிய பேசு பொருட்கள் அல்லது அந்தக் காலகட்டத்தில் கதைக்கப்பட வேண்டிய விடயங்கள் அவற்றைத் தெரிவு செய்து நிதர்சனங்கள் ஊடாகவும், 24 ஆம் திகதிகளில் ஆளுமைத் தேடலினூடாக சமூகத்திலிருக்கும் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்கள் என்பதனைத் தாண்டித் தனித்துவம் மிக்க ஆளுமைகளை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சியென இவ்வாறு வலையமைப்பினைக் கொண்டு செல்கின்றேன்.மூன்று பகுதிகளினூடாக அகதி வலையமைப்பினைக் கொண்டு செல்கின்றேன்.

Q9: தங்களுக்கு இவ்வாறானதொரு வலையொளியை ஆரம்பிக்கும் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது? அகதி வலையொளியினது நோக்கம் என்ன?

Ans: ஆம், இவ்வாறானதொரு வலையொளியை ஆரம்பிப்பதற்கான எண்ணம் நான் முதலில் குறிப்பிட்டது போன்று பயணி, பேசு தமிழா பேசு போன்ற வலையொளிகளைப் பார்ப்பதனூடாகவும் மற்றும் இங்கிருக்கும் ஊடகங்களின் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டுதான் இங்கு சரியான முறையில் ஒரு ஊடகத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அது மிக முக்கியமானதொன்று.

மற்றது ஊடகம் ஏன் முக்கியம் என்றால் இங்கு தமிழ் தேசிய ஊடகம் ஒன்றை வளர்த்தெடுக்க வேண்டும் அத்துடன் தொழில் முயற்சி தொழில் முனைவராவதில் ஈடுபாடு இருப்பதன் காரணமாக நான் எனது தொழிற்துறை சார்ந்த விடயங்களைச் சந்தைப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு சரியான ஊடகம் அவசியம். அந்த ரீதியில் எல்லாம் ஒரு தொடர்பாக அமைந்தமையால் வலையொளியை ஆரம்பித்து இதனை ஒரு ஊடகமாக வளர்க்கும் எண்ணம் ஏற்பட்டது.

இதன் நோக்கம் தொடர்ந்து தமிழ்த் தேசியம் என்ற பாதையில் சரியான ரீதியில் பயணிக்க வேண்டும். எந்த ஒரு பக்கச்சார்புமற்ற ஒரு சரியான கருத்துக்களை , “Spread Positivity’’ என்பார்கள் அதாவது நேர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும். வெறுமனே எங்களுடைய வலையொளிக்கான Viewers ,Subscribersஇனைஅதிகரிப்பதற்காக செயற்படாமல் சரியானதொரு நேர்மையான ஒரு ஊடகமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

Q10: மிக்க மகிழ்ச்சி தோழரே. எதிர்கால செயற்பாடுகளுக்கும் அகதியின் முன்னோக்கிய நகர்விற்கும் வாழ்த்துக்கள். தங்களுடைய சிறந்த எண்ணங்களும் செயற்பாடுகளும் எங்களுக்கு நிச்சயம் வலுவூட்டும். உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவிட்டு சிறந்த ஒரு உரையாடலை அளித்ததற்கு நன்றிகள்.

Ans: நன்றிகள் தோழி….

--

--