“பகைவனுக்கருள்வாய்”

Kheerthy
Digital Storytelling & Content Creation
2 min readDec 22, 2021
Bharathiyar, Anand’s Blog-WordPress.com

முண்டாசுக்கவி..! யாரிந்த முண்டாசுக்கவி? ஆம்; எட்டையபுரத்திலே பற்றிய தீ; அவன் பாட்டுத்தீ; கவி ஏட்டுத்தீ; காலத்தின் காட்டுத்தீ; மகாகவி பாரதி. நிமிர்ந்த நடை , செருக்குடை மீசை, நெற்றியிலே வீரத்திலகம், கம்பீரமான தலைப்பாகை, வீட்டிலே முடங்கிக்கிடக்கும் முள்ளந்தண்டிலிகள் ஆகிவிடாமல் கால் போன போக்கெல்லாம் பாடித்திரிந்தவன் பாரதி.

சாதிச்சாக்கடையிலும் சறுக்கிவிடாமல், பேதம் கொண்டு புதைந்துவிடாமல் போதையிலும் திடமாக நின்று தமிழ்ப்போதையிலே கிறுக்கம் கொண்டு பேதமை பழித்து வரிகள் சொரிந்தவன். அவன் பாடாமல் விட்டது தான் என்ன? அவன் பாடல் கூறாதது தான் என்ன ?கண்ணம்மா, அவன் காதலிக்காகக் காத்திருந்தவன், அறியாமை எனும் இருள் காட்டிடை சிறுபொறியொன்று இட்டவன், நாட்டின் பெருமையைப் பாடித்திரிந்தவன் தூற்றிடும் சிறுமையைப் பாட்டினில் வைத்தவன்.

அக்னிக்குஞ்சொன்றும் கண்டான் அடுப்படிப் பூச்சிகளும் கண்டான்கோத்திரம் இகழ்வோரையும் கண்டான் பொய்ச்சாத்திரக் கூண்டினுள் அடைபட்டு நிற்போரையும் கண்டான். வஞ்சனைப்பேய்களும் சூனியப் பொம்மைகளும் கண்டவன் அவற்றை சகமாந்தரிடை கண்டு மனம் பொங்கி எழுந்தவன்.

பாலர் மனதிற்கும் பாடல்கள் பாடினான். தூங்கும் போதும் பாடல் துயரும் போதொரு பாடல் இறைவன் இறைவிக்கும் பாடல் குடும்பத்தலைவிக்கும் பாடல் என்று அத்தனையும் அற்புதமாக பாட்டினில் பதித்தவன். இன்று ஏட்டினில் காண்கின்றோம். “பகைவனுக்கருள்வாய்” என்றும் பாடினான்.

“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்” வருத்தமும் துன்பமும் வாட்டிடும் தருணமதில் “என் துன்பம் என் பகைவனுக்கும் வந்திடல் கூடாது” என்று எண்ணாத மனமும் உண்டோ? கோவமும் விட்டுக்கொடுக்காமையும் பகைமையை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போகமாட்டாம். மன்னிப்புக் கொடுத்தால் மதிப்பிழக்க மாட்டோம்.

பகைமை ஒரு தீ. அது யாரெனப் பார்க்காது சுட்டெரிக்கும். பகைமை ஒரு காட்டாறு. பகைமை நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் குழி. பகைமை ஒரு மாயை. அன்பினால் இந்த அகிலத்தை ஆழ வேண்டும். அன்பினால் பகைவனையும் ஆழ வேண்டும். பகைமை எரிந்திடும் மனதினை அணைத்திடத் துணிந்திட வேண்டும். விரோதம் பற்றிடும் எண்ணத்தைக் களைந்து விட வேண்டும்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்ற தின்ன வரும் புலிக்கும் அன்பு செலுத்திடு என்று பகைவனுக்கும் அன்பு செலுத்துங்கள் என்பதை மகாகவி பாடினான்.

பகைவனுக்கருள்வாய் என்று பாட்டிலே பிறர் மனமளந்த மகாகவியொடு ஈரடியில் உலகளந்த வள்ளுவனும் மொழிந்தான். ”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னையும் செய்திடல் வேண்டும்” என்றார். அதனோடு நின்றுவிடாமல் எண்ணீராம் அதிகாரத்தில் “பொறையுடைமை” என்று ஐவீர் குறள்களையும் அருளிச்சென்றார். ஒருவர் நமக்குத் தீங்கே செயினும் எம்மைக் காயப்படுத்தினும் தீய சொற்களையே பேசினும் பொறுமையுடன் அவர்களுக்கு மன்னிப்பருளி அவர்கள் தம் செயலை மறந்து நன்மைகளை செய்பவனே உயர்ந்த மனிதன் என்றார் வள்ளுவர் பெருந்தகைகள்.

தன்னை அகழ்வாரையே தாங்கிக்கொள்ளும் பூமி போல நம்மை இகழ்வாரைப் பொறுத்து அவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுவே அறம் என்கிறார் வள்ளுவர். பகைவனைப் போர்க்களத்தில் தாக்குவது பேராண்மை எனில் அதனிலும் பெருமை அவனுக்கு இன்னல் ஏற்படின் அவனுக்கு உதவிடலே என்றருளினார் வள்ளுவர்.

வீரனென்பவன் யாரெனில் பழிதீர்க்க வந்தவனுக்கும் நல்வழி காட்டி அன்பு செலுத்தி தோழமை கொள்பவனே. அதைவிடுத்து பழிதீர்க்க வந்தவன் தானடங்கி பயந்தாலும் அவனிடம் பழிதீர்த்துக் கொள்பவன் கோழையிலும் கோழை.

தான் கைப்பிடித்த காதல் மனையாளை சிறைப்பிடித்த இலங்கையர் கோன் இராவணேசன் போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற பொழுது “இன்று போய் நாளை வா” என்றருளிய இராமபிரான் போன்று, முகத்தில் உமிழ்ந்ததைக்கூட துடைத்து விட்டுப் புன்னகை செய்த அன்னை தெரேசா போன்று, கல்லெறிந்தும் காயம் கண்டும் எஐமானிற்கு வால் குளைக்கும் நாய் போன்று, கல்லெறிபட்டும் வெட்டுண்டு குருதி சிந்திடினும் வெப்பம் உமிழாமல் தண்மையும் நன்மையும் மட்டுமே வழங்கிடும் மரம் போன்று, தன்னைக் கொல்ல வந்தவன் காயம்பட்டதும் மருத்துவம் செய்யும் மருத்துவன் போன்று பகைவனுக்கு மன்னிப்பருளி அன்பு செலுத்த வேண்டும்.

துன்பத்தில் வீழ்பவன் நண்பனென்றும் பகைவனென்றும் பாராமல் கைகொடுங்கள். பகைவனும் ஒருநாள் நண்பனாகலாம். உயிர் நண்பனும் ஒருநாள் பகைமை கொள்ளலாம்.

ஆதலால்,

கர்வம் அழித்து
வஞ்சனை துரத்தி
அன்பினை இருத்தி
மன்னிப்பெனும் ஈகையுடன்
துர்குணம் துரத்தி
நற்குணம் இருத்தி
பகைவனுக்கும் அருள்வோமாக.

வாழ்க்கை சிறிது
வாழ்தல் பெரிது
இதில் பகைமை எதற்கு…!!!

--

--