Straight outta ‘டவரா செட்’

Pranaesh Kumaresan
Ezhumeen
Published in
1 min readJan 23, 2018

ஆஹா ! அந்தக் குடுவையினுள் மூழ்கி என் உதடுகள் முத்தமிடுகையில் இவ்வுலகம் சுழல்வதை ஒரு நொடி மறந்ததாகக் கொண்டேன். பத்தாம் நூற்றாண்டு முதல் இன்று வரை உலகெங்கும் நறுமணம் வீசும் குளம்பியில் (காப்பியில்) பலவகை இருந்தாலும்,தமிழ்நாட்டில் காபி பிரியர்களின் முகத்தில் புன்சிரிப்பை படரச் செய்வது தான் கும்பகோணம் (குடந்தை) புகழ் டிகிரி காபி. குடந்தையைக் காண வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் மகாமகக் குளத்தில் முங்கி எழுந்த பின் முங்குவது ஒரு டம்ளர் டிகிரி காபியில் தான்.முங்கியவர் எழுவது கடினம்,காரணம் அந்தச் சிறிய கோப்பையிலேயே குடியிருக்க எத்தனிப்பர். திரும்பிய திக்கெங்கும் கோவில்கள் கொண்ட இவ்வூரில் காபியை வழிபடும் ஆட்களிடம் என்ன தான் இந்தக் காபியின் ரகசியம் என்று கேட்டால் பாலின் தூய்மை அளவு தான் என ஒரு வரியில் முடித்தார்கள். பல்வேறு கருத்துக்கள் காபியின் மணத்தோடு சேர்ந்தே பரவினாலும் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வதோடு மடத்துத் தெருவில் சுமார் பத்து ஆண்டுகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் ‘முரளி’ஸ் கபே’ வில் நுழைந்து அவ்விடத்தின் உரிமையாளர் திரு.முரளியிடம் உரையாடுகையில், அவர் பகிர்ந்ததாவது பால்மானியில் (Lactometer) பாலின் தூய்மை அளவு சரியாக 23 டிகிரி இருக்க வேண்டும். மேலும், காபி விதைகள் எண்பது விழுக்காடு,சிக்கரி (chicory) இருபது விழுக்காடு் அளந்து அரைக்க வேண்டும். இவ்விரு பொருட்களின் ஊடலில் பிறக்கிறது இந்த உலகப்புகழ் பெற்ற டிகிரி காபி. நாள்தோறும் சுமார் அறுநூறு காபிகள் விற்கும் இவ்வுணவகத்தில் அமர்ந்து டவராவிலிருந்து டம்ளரில் காபியை ஊற்றிக் குடிக்கையில் ஒவ்வொருவருக்கும் தன் இதயத்தில் அந்த பத்து நிமிடங்கள் மேலும் தொடர வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும், என் மனதில் தோன்றியது போல !

--

--