உழவை வெல்வது எப்படி? (பகுதி 1)

Vishnupriya M
Krishi Janani
Published in
4 min readAug 15, 2020

(தாளாண்மை இதழில் வெளியான தொடரின் மறு பதிவு)

உழவாண்மை பண்ணையம் — பசுமை வெங்கிடாசலம்

திரு. பசுமை வெங்கடாசலம் அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி அம்மாப்பேட்டைக்காரர். 2 ஏக்கர் விவசாயப்பரப்பில் உழவாமை செய்தார். நண்பர்களோடு இணைந்தது அவர்களின் பண்ணைகளை உழவாமைக்கு மாற்றியுள்ளார். தன் சொந்தப்பண்ணையில் (முத்துப்பண்ணை என்று பெயர்) ஆர்வலர்களுக்கு களப்பணி அளித்து வந்தார். உயிரியல் கட்டுப்பாடு மையம் நடத்தி அதனை நண்பர்கள் வசம் விட்டுவிட்டு பின் முழு நேர விவசாயம் செய்து வந்தார்.

உழந்தும் உழவே தலை என்று வள்ளுவர் சொன்னது போல, உழவு என்ற சொல்லுக்கு மிகுந்த மெய்வருத்தல் என்ற பொருள் உண்டு. உழவன் உழவாது (கஷ்டப்படாது) இருக்க வேண்டும் — அதனால்தான் உழவை வெல்வது எப்படி என்று திரு.வெங்கிடாசலம் தலைப்பு இட்டுள்ளார்.

தற்சார்புப் பண்ணையம்

இன்று விவசாயம் என்பது மிகவும் துன்பமானதாக, இலாபமற்றதாக மாறி விட்டது. இந்நிலைக்கான காரணங்கள் யாதெனப் பார்ப்போமா?

  1. வேலை செய்யும் ஆட்களின் பற்றாக்குறை
  2. குறைந்து கொண்டே வரும் நீர் ஆதாரம்
  3. தரமற்ற விதைகள் — மேலதிக விலை
  4. கால்நடை தீவனப்பற்றாக்குறை
  5. உற்பத்தி அதிகரிக்கும்போது விலை வீழ்ச்சி — விளைபொருட்களுக்கு நிச்சயமற்ற விலை

உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் விவசாயத்தை ஆதரிப்பதில்லை. அவை தொழில்மயமாக்கலையே விரும்புகின்றன, ஆதரிக்கின்றன. ஆனால் விவசாய விளைச்சலோ பெரும் தொழில்களின் மூலப்பொருட்களாக உள்ளன. விவசாயம் மற்றும் அது தரும் விளைபொருட்களின்றி தொழிற்சாலைகள் உற்பத்தி செய்ய முடியாது. இதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழ்நிலையில், விவசாயி மூன்று விதமான உத்திகளை கையாள்வதன் மூலம் இலாபம் ஈட்ட முடியும். அதில் முதன்மையானது குறைந்த செலவில் உற்பத்தி செய்வது மட்டுமே!

அதாவது குறைந்த முதலீட்டில், குறைந்த உழைப்பில், குறைந்த காலத்தில் தொடர்ச்சியாக விளைபொருட்களை உற்பத்தி செய்வதால் மட்டுமே விவசாயம் இலாபகரமான, வெற்றிகரமான ஒன்றாக இருக்கும்.

ஒரு விவசாயி முதலில் தன் பண்ணைக்குத் தேவையான இடுபொருட்களை வெளியில் இருந்து வாங்குவதை நிறுத்தி, தனக்கு வேண்டிய பெரும்பான்மையான பொருட்களை தானே உற்பத்தி செய்ய வேண்டும்.

உழவு செலவு, விதைக்கான செலவு, களை நிர்வாகத்திற்கான செலவு, உரச்செலவு, பூச்சிக்கொல்லிக்காக ஆகும் செலவு மற்றும் நீர் நிர்வாகத்திற்காக செய்யும் செலவுகளை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.

அடிப்படையில் ஒரு விவசாயி தனக்குத் தேவையான விதை, உரம், பூச்சி மருந்து, குடும்ப தேவை மற்றும் கால்நடைகளுக்கான தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தியை ஆரம்பித்தாலே போதும், மீதி உள்ளவை சந்தைக்கு சென்றாலே அது இலாபகரமான விவசாயமாக இருக்கும்.

அதாவது, ஒரு விவசாயி தன் பண்ணைக்கு தேவையான விதை, உரம், மருந்து, தனது குடும்பம் மற்றும் பண்ணையை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு தேவையான தானியம், பருப்பு, எண்ணெய், காய்கறி, பழங்கள்,பழங்கள், மசாலா வகைகள், எரிபொருள், கட்டுமான பொருட்கள், கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம், மருந்து இவைகளின் தேவையை பூர்த்தி செய்வதையே முதல் வேலையாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் மீதமாகும் பொருட்கள் அருகில் உள்ள கிராமத்தின் தேவைக்கே போதுமானதாக இருக்கும். விற்பனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. விற்பனையின் மூலம் ஈட்டும் பணத்தில் சிறிதளவே விவசாயத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த முறையானது ஒரு வீட்டு தோட்டமாக இருந்தாலும் சரி, ஒரு ஏக்கர் முதல் நூற்றுக்கணக்கான ஏக்கராக இருந்தாலும் சரி அந்த பண்ணையை லாபகரமானதாக நடத்த உதவும்.

இதைத் தவிர்த்து சந்தைக்காக நம்பிக்கையின் அடிப்படையில் ஒரே பொருளை உற்பத்தி செய்யும்பொழுது விலை மற்றும் பருவச்சூழ்நிலை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

ஆக ஒரு பண்ணை சந்தைக்காக உற்பத்தி செய்வதை தவிர்த்து தேவைக்காக உற்பத்தி செய்யும்பொழுது நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

ஆக நமது நோக்கம் தற்சார்புப் பண்ணையத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்.

திட்ட வடிவமைப்பு

பண்ணைத்தேவை, குடும்பத்தேவை, கால்நடை தேவை மற்றும் பண்ணை வடிவமைப்பு, நீர் நிர்வாகம், ஆள் நிர்வாகம் பற்றி விரிவாகப் பேசுவோம்.

மாதிரிப் பண்ணை வரைபடம்

ஒரு பண்ணை நிரந்தர லாபகரமாக அமைய அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியம். எந்த அளவிற்கு வருடம் முழுவதும் பண்ணையில் இருந்து உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு அனுப்புகிறோம் என்பதே லாபத்தை தீர்மானிக்கும். அதற்கு ஏற்ப வடிவமைப்பு நமக்கு உதவி செய்யும். பண்ணையில் வேலையும் ஒரே சீராக வருடம் முழுவதும் சிரமம் இன்றி இருக்கும். உற்பத்தி நமது பண்ணைத் தேவைகள், கால்நடைத் தேவைகள், அந்த பண்ணையை சார்ந்த குடும்பத் தேவைகள் ஆகியவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.

வேலி

ஏரினும் நன்றாம் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு

என்று வள்ளுவர் சொன்னது போல வடிவமைப்பில் மிகவும் முக்கியமானது வேலி ஆகும். இன்றைய கால கட்டத்திற்கும் இது மிக பொருத்தமானது. அதுவும் உயிர் வேலி மிகவும் சிறப்பு மிக்கது. உயிர் வேலி அமைப்பதன் மூலமாக அதில் இருந்து பல விதங்களில் நமக்குத் தேவையான பொருட்களும் உதவியும் கிடைக்கும். உதாரணமாக அதில் இருந்து கிடைக்கும் இலைகள் எருவாகவும் அதில் அண்டி வாழும் ஓணான், சிலந்தி, குருவிகள் நமது பயிரில் விழும் பூசிகளை உண்டு நமக்கு உதவி செய்யும். வேலி அமைக்க அந்த அந்தப் பகுதியில் கிடைக்கும், ஆடு மாடுகள் விரும்பி உண்ணாத ஆடாதோடை, மருதாணி, முள் கிளுவை, கிளா பழச்செடி, சங்கன் மல்பெரி, மாங்கிழவை, சவுக்கு,தைல மரம், ஒதியன், சூபாபுல், கிளரிசிடியா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நமது பண்ணைக்கு அருகில் மலை, காடு, ஏரி, குளம், புறம்போக்கு நிலம், ஓடை இருந்தால் மூங்கில், பனை மரம் போன்றவற்றைப் பயிரிடலாம். வேலியே நமக்கு ஒரு நிரந்தர வருவாயை கொடுக்கக் கூடியதாக அமையும்.

உயிர் வேலி பண்ணைக்குக் காற்று தடுப்பாகவும் அமையும். உயிர் வேலி உருவாக்க சுமார் இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும். உடனடியாகத் தேவைப்படுமானால் முள் கம்பி வேலி அமைத்துக்கொள்ளலாம். முள் வேலிக்கு உட்புறம் மேற்சொன்ன உயிர் வேலிக்கு உண்டான செடிகளையும் வைத்துப் பராமரித்துப் பயன்பெறலாம்.

பாதை மற்றும் இடைவெளி

வேலி அமைத்தபின் பண்ணைக்குள் எளிதாக சென்று வர பாதை மிக முக்கியமானது. இடு பொருட்களை பண்ணையின் ஒவ்வொரு இடத்திற்கும் எடுத்துச்செல்வதற்கும், பண்ணையில் இருந்து எடுக்கும் விளை பொருட்களை வெளியில் கொண்டு செல்வதற்கும் பாதை மிக அவசியம். பாதை குறைந்தது 10 அடி முதல் 16 அடி வரை இருத்தல் நலம். பாதை அமைக்கும்போது பாதையின் மத்தியில் பாசனக்குழாய் மற்றும் மின்சார கம்பிகள் (cable) அமைக்க ஏதுவாக வடிவமைப்பு செய்வது நலம். இதனால் பிற்காலத்தில் நாமே அதை சேதாரம் செய்யும் சிரமமும், பழுது பார்க்கும்போது பயிர்களுக்கு சேதாரமும் இருக்காது. பாதை அமைக்கும்போது வேலியை சுற்றி நாம் நடந்து வர சுமார் 4 அடி அகலத்திற்கு ஒரு பாதை அமைக்க வேண்டும். அது நமது பண்ணையை சுலபமாக சுற்றி வருவதற்கு ஏதுவாக இருக்கும். பிற்காலத்தில் வேலி பராமரிப்புக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.

நீர் நிர்வாகம்

பாதை அமைத்தபின் நமது பண்ணையில் சுமார் 25 அடிக்கு ஒரு சம மட்ட வாணி (trench) எடுக்க வேண்டும். வாணியின் அகலம் 2 1/2 அடியாகவும் ஆழம் 2 அடியாகவும் இருக்க வேண்டும். வாணியானது மழை நீரை சேகரிக்கவும், மூடாக்கு கொடுப்பதற்கும், அதில் மரங்களை நடுவதற்கும், சொட்டு நீர் பாசனம் கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். இதில் கொடுக்கப்படும் சிறிதளவு நீரே பல நாட்களுக்கு இருக்கும். வாணி வெயில் மற்றும் காற்றில் இருந்து ஈரப்பதத்தைக் காக்கும். வாணி அமைத்தபின் தண்ணீர் வசதி மற்றும் பயிர் செய்யும் வசதிக்கேற்ப சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் செய்து கொள்ளலாம்.

மேட்டுப்பாத்தி

சொட்டு நீர் பாசனம் மிகவும் நீர் சிக்கனத்திற்கு உதவி செய்யும். காய்கறி பயிர் செய்யும் இடத்திற்கு மட்டும் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தலாம். பாசன வசதி செய்தபின் வாணிக்குள் நீண்ட காலங்கள் பயன் தரக்கூடிய தென்னை, பழ மரங்கள் மற்றும் தடி மரங்களை நடவு செய்யலாம். இரண்டு வாணிக்கு இடையில் உள்ள 25 அடி இடைவெளியில் தானிய பயிர், காய்கறிகள், தீவனப்பயிர் போன்றவற்றை பயிரிடலாம். அதையும் மேட்டுப் பாத்தி முறையில் பயிரிட்டால் மீண்டும் மீண்டும் உழவு செய்ய வேண்டியது இல்லை. ஒரு முறை மேட்டுப் பாத்தி அமைத்தால் போதும். பின் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து அதில் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்து கொண்டே இருக்கலாம். மேட்டுப் பாத்தி அமைக்கும்போது பயிர் செய்யும் மேடு 3 1/2 அடியாகவும், நடைபாதை 1 1/2 அடியாகவும் இருக்க வேண்டும். இது பயிர்களை பராமரிப்பதை மிகவும் சுலபமாக்கும்.

மேற்சொன்னபடி வடிவமைக்கப்பட்ட பண்ணையில் ஏர் உழவு தேவையில்லை. மூடாக்கு முறைக்கு மாறி விட்டால் களை கொத்த வேண்டிய வேலையும் இருக்காது. ஒரு விதையையோ செடியையோ நட்டு பராமரித்தாலே போதுமானது. வாணியில் நாம் மரங்களை நடவு செய்யும்போது மிகவும் நெருக்கி நடவு செய்ய வேண்டும். அதுவும் அது பிற்காலத்தில் வளர்ந்து மூன்று அடுக்கு முறையில் அமையும்படி நடவு செய்தல் நலம். இந்த மாதிரி அமையும் பண்ணையில் ஏர் உழவு தேவையில்லை, எரு இட வேண்டிய அவசியம் இருக்காது. பூச்சி மருந்து மற்றும் களைக்கொல்லி பயன்படுத்த தேவையில்லை. இரண்டு வாணிகளுக்கு இடையில் 5 மேட்டு பாத்திகள் கிடைக்கும். இதில் நமக்கு தேவையான அனைத்து பயிர்களையும் பயிர் செய்யலாம்.

(மேலும் வரும்…)

--

--