உழவை வெல்வது எப்படி? (பகுதி 2)

Krishi Janani Admin
Krishi Janani
Published in
6 min readNov 5, 2020

(தாளாண்மை இதழில் வெளியான தொடரின் மறு பதிவு)

உழவாண்மை பண்ணையம் — பசுமை வெங்கிடாசலம்

மாசானபு ஃபுகுவோகா / Masanobu Fukuoka (image — creative commons from wikimedia; By naturalfarming.org; CC BY-SA 2.5)

மாசானபு ஃபுகுவோகா ஜப்பானின் தென்பகுதியில் உள்ள ஷிகோகு தீவில் ஒரு சிறு கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தாவர நோயியல் துறையைப் பயின்றவர். பின் தனது 25 ஆவது வயதில் துறைமுக நகரமாகிய யோகொஹாமாவில் சுங்கவரித்துறையில் (Customs Bureau) தாவர நோய் ஆய்வுப்பிரிவில் வேலை செய்து வந்தார். தாவர நோய்களைப்பற்றிய நிபுணரான அவர் தம் ஓய்வு நேரத்திலும் தாவர நோய்கள் பற்றிய ஆய்வுகளை அந்த ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டார். ஆர்வ மிகுதியால் ஓய்வு இன்றிப் பணியிலும் ஆய்வுக்கூடத்திலும் வேலை செய்துவந்த காரணத்தினால் அவர் உடல் நலம் குன்றி ஒரு நாள் ஆய்வுக்கூடத்திலேயே மயங்கி விழுகிறார். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

தனிமை அறையில் தங்கவைக்கப்பட்ட அவர் மரண பயத்தினால் அவதிப்படுகிறார். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் அவரது மனம் அல்லாடுகிறது. குணம் அடைந்து திரும்பிய பின்னும் மரண பயம், வாழ்வு இரண்டுக்கும் இடையில் உள்ள குழப்பத்தினால் இரவு, பகல் தூக்கமின்றி அலைந்து திரிகிறார். ஒரு நாள் இரவு தூக்கம் விழிப்பு இரண்டும் அற்ற நிலையில் வயல்வெளியில் படுத்துக்கிடக்கிறார். விடியல் நேரத்தில் மரண பயம் நீங்கி மனநிம்மதி அடைகிறார். அப்பொழுது அவருக்கு, தான் அதுவரை செய்த ஆய்வுகள் அனைத்தும் அர்த்தமற்றது, மதிப்பற்றது என்பது தெளிவாகிறது. இதுதான் ‘உண்மை இயல்பு நிலை’ என்பது புரிந்து இதை உலக மக்களுக்கு எடுத்துச்செல்வதற்காக வேலையில் இருந்து விடுபடுகிறார். நாடு முழுவதும் சுற்றித்திரிகிறார். நண்பர்களிடமும், சந்திப்பவர்களிடமும் ‘எதுவும் அர்த்தமற்றது, மதிப்பற்றது’ என்று கூறுகிறார். ஆனால் இதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருந்த மக்களோ இவரை விசித்திரமானவராகக் கருதி அலட்சியம் செய்கிறார்கள். அதனால் ஃபுகுவோகா ‘ஒரு நூறு விளக்கங்கள் அளிப்பதைக்காட்டிலும் இந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திக்காட்டுவது சிறந்த வழி’ என்று தீர்மானிக்கிறார். தன் தந்தையின் விவசாய நிலத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு சிறு குடிசையில் தங்குகிறார். தனது ‘பயனற்றது’ என்ற சித்தாந்தத்தை ஒரு விவசாயியாக வாழ்க்கையைத் தொடர்ந்தால் இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டலாம், இதை உலகம் புரிந்து கொள்ளும் என்று கருதுகிறார். இந்த கருத்துதான் ‘ஒன்றும் செய்யத்தேவையற்ற விவசாயம்’ (Do Nothing Farming) என்பதானது. இது நடந்தது 1938 ஆம் ஆண்டு. தன் தந்தையின் செழிப்பான பழத்தோட்டத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். அவரது தந்தை தன் தோட்டத்தில் உள்ள பழ மரங்களை, பழங்கள் பறிப்பதற்கு ஏற்றாற்போல் வெட்டி சீர் செய்து வைத்திருந்தார். அதை ஃபுகுவோகா ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட கிளைகள் வளர்ந்து ஒன்றோடொன்று முறுக்கிக்கொண்டன. பூச்சிகள் மரத்தை தாக்கின. சிறிது காலத்தில் எல்லா மரங்களுமே மறைந்து போயின.

நவீன வேளாண்மையின் கோட்பாடு ‘இதை செய்துபார்த்தாலென்ன, அதை செய்துபார்த்தாலென்ன’ என்பதாகும். ஆனால் ஃபுகுவோகா வின் கோட்பாடு இதற்கு நேர் எதிரானது. ‘இதைச் செய்யாமல் இருந்தால் என்ன?, அதைச் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்பதாகும்.

பயிர்கள் தாமாகவே வளர வேண்டுமே தவிர நாமாக அவற்றை வளர்க்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இயற்கையின் வழிக்கே அவற்றை விட்டுவிட வேண்டும் என்பது அவரது நம்பிக்கை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அவரை அழைத்து மீண்டும் சிறிது காலம் வெளியில் சென்று வேலை செய்யும்படி அறிவுறுத்துகிறார். ஃபுகுவோகாவும் கொஷிபெர்கர் என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் 8 ஆண்டுகள் பணி புரிகிறார். இந்த 8 வருட கால கட்டத்திலும் அவர் அறிவியல் வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் இடையில் உள்ள உறவு குறித்து ஆராய்வதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறார். மீண்டும் வேளாண்மையில் ஈடுபட சொந்த கிராமம் திரும்புகிறார். அதன் பின்னர் 30 வருட காலத்தை தன் பண்ணையில் எந்தவித வெளி உலகத் தொடர்புமின்றி ‘எதுவுமே செய்யத்தேவையற்ற வேளாண்மை’யை நோக்கி ஒரு நீண்ட நேர் கோட்டில் நகர்ந்து கொண்டிருந்தார். நவீன வேளாண்மையின் கோட்பாடு ‘இதை செய்துபார்த்தாலென்ன, அதை செய்துபார்த்தாலென்ன’ என்பதாகும். ஆனால் ஃபுகுவோகா வின் கோட்பாடு இதற்கு நேர் எதிரானது. ‘இதைச் செய்யாமல் இருந்தால் என்ன?, அதைச் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்பதாகும். இந்த நோக்கில் சென்ற இவரது இயற்கை முறை வேளாண்மைப் பண்ணையில் உரங்கள் தேவையற்றுப்போனது. இவரது பண்ணை தழையுரம் கூட இட வேண்டியதற்றதாகவும், பூச்சிக்கொல்லி தெளிக்கத்தேவையற்றதாகவும், களை கொத்தத்தேவையற்றதாகவும், ஏன், உழவு கூடச்செய்யத்தேவையற்றதாகவும் ஆனது. ஆக அவரது பண்ணை வெளி இடுபொருட்கள் எதையுமே சார்ந்து இருக்க வில்லை. குறைவான வேலை செய்யும் காலமும் குறைந்த மனித உழைப்பும் மட்டுமே தேவைப்பட்டது. அவர் தனது கால் ஏக்கர் நிலத்தில் (1970 களில்) எடுத்த தானியத்தின் எடை 500 முதல் 590 கிலோ ஆகும். இது ஜப்பானில் நவீன முறை வேளாண்மையில் எடுத்த அதிகபட்ச விளைச்ச‌லுக்கு இணையானதாகும்.

ஃபுகுவோகா கூறுவது போல மனிதனின் செயல்நுட்பம் இன்றும் நிலத்திற்குத் தேவைப்படுவதற்குக் காரணம் முன்பு அதே செயல்நுட்பத்தினால் இயற்கையின் சமச்சீர்மை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் அவற்றுக்கு அடிமையாகிவிட்டபடியால்தான். ஃபுகுவோகாவின் நிலம் 25 ஆண்டுகளாக உழப்படவே இல்லை என்பது மிக முக்கியமான செய்தியாகும். ஃபுகுவோகா தனது தத்துவத்தின் கருத்தை இயற்கை முறை வேளாண் பண்ணை மூலம் செயல்படுத்தி இயற்கைக்கு எதிரான அனைத்து மனித முயற்சிகளும் வீண் என்பதை நிரூபித்து விட்டார். தன் பண்ணையின் செயல்பாடுகளையும் தத்துவத்தையும் 1975ஆம் ஆண்டு ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ (One Straw Revolution) என்ற புத்தகத்தின் மூலம் வெளி உலகத்திற்கு தெள்ளத்தெளிவாக அறிவித்தார்.

ஃபுகுவோகாவின் பண்ணையில் 1 1/4 ஏக்கரில் நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்களும், மீதியுள்ள 12 1/2 ஏக்கரில் ஆரஞ்சு தோட்டமும் உள்ளது. ஆரஞ்சு தோட்டத்தினுள் காய்கறி, தீவனப்பயிர் மற்றும் தனக்கும், கால்நடைகளுக்கும், தன்னை தேடி வரும் விருந்தினருக்கும் தேவையான பயிர்களை வருடம் முழுவதும் கிடைக்கும்படி பயிர் செய்தார். ஃபுகுவோகா இயற்கை வேளாண்மைக்கு நான்கு முக்கிய அடிப்படைகளை கடைப்பிடித்தார். அவை:

  1. நிலத்தைப் பண்படுத்தல்
  2. உரங்கள்
  3. களைகள்
  4. பூச்சி கட்டுப்பாடு
ஃபுகுவோகா தோட்ட மலை / Fukuoka Hill in Iyo (image — creative commons from wikimedia; By Iyo-farm — Own work, CC BY 3.0)

நிலத்தைப் பண்படுத்தல்

முதலில் அவரது பண்ணையில் மண் பதப்படுத்துதல் கிடையாது. அதாவது உழுவதோ மண்ணை புரட்டி எடுப்பதோ கிடையாது. பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் நிலத்தை உழுவது பயிர் செய்வதற்கு இன்றியமையாதது அன்று கருதி வந்தனர். ஆனால் இயற்கை வேளாண்மைக்கு மண் உழப்படாமல் இருப்பது மிக முக்கியமான அடிப்படையாகும். நிலம் தாவரங்களின் வேர்கள் நுழைவது மூலமும் மற்றும் நுண்ணுயிரிகள், விலங்குகள், மண்புழுக்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளாலும் தன்னைத்தானே உழுதுகொள்ளும். மண் பதப்படுத்தும் போது இயற்கையான சுற்றுச்சூழல் நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலாக பாதிக்கப்படுகிறது. அதன் பின் விளைவுகள் பல விவசாயிகளை தலைமுறை தலைமுறையாக துரத்தித் தொல்லை கொடுத்து வருகின்றன. எடுத்துக்காட்டு: ஒரு இயற்கையான நிலப்பகுதி உழப்படும்போது மிகப்பலமுடைய அருகு, கோரை போன்றவை நிலத்தில் தோன்றி தொல்லை கொடுக்கும். அதை அப்புறப்படுத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிக்கு விழி பிதுங்கி விடும். பல சமயங்களில் நிலம் கைவிடப்படும். இத்தகைய பிரச்சனைகளைக் களைய அறிவு பூர்வமான அணுகுமுறை என்னவென்றால், இத்தகைய சூழலை உருவாக்கிய, இயற்கைக்கு எதிரான அச்செயல்முறைகளை நிறுத்துவதுதான். மேலும் தான் ஏற்படுத்திய பாதிப்பைச் சீர் செய்ய வேண்டிய கடமை விவசாயிக்கு உள்ளது. உழுதல், மண் புரட்டிக்கொடுத்தல் ஆகியவை நிறுத்தப்படவேண்டும். வைக்கோலைப் பரப்புதல், தீவனப்பயிரை, (எ.கா. சோளம், கம்பு, கொள்ளு, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகியவற்றை) வளர்த்தல் போன்ற முறைகளைப் பின்பற்றினால் சுற்றுச்சூழல் மிக விரைவில் தனது முந்தைய நிலையை அடையும். தொல்லை தரும் களைகள் கட்டுக்குள் அடங்கும்.

உரங்கள்

இரண்டாவது உர நிர்வாகம். உரம் இடவில்லை என்றால் மகசூல் மிகவும் குறைந்துவிடும் நிலை வரலாம். உழப்பட்டு, நீர் தேக்கிவைக்கப்பட்டு பயிரிடப்படும் வயல்களில்தான் இத்தகைய பாதிப்பு வரும். இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அதன் வளம் பெருகத்தான் செய்யும். தாவரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கரிம எச்சங்கள் சேகரிக்கப்பட்டு நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்களால் சத்துக்களாக மாற்றப்படுகின்றன‌. மழை நீர் மூலமாக இவைகள் நிலத்தின் உட்புறத்தை அடைந்து மண்புழுக்கள், நுண்ணுயிர்கள் மற்றும் இதர சிறு விலங்கினங்களுக்கு உணவாகின்றன. தாவரங்களின் வேர்கள் இங்கு நுழைந்து இச்சத்துக்களை மீண்டும் மேல்மட்டத்திற்குக் கொண்டு வருகின்றன.

பூமியின் இயற்கை வளம் குறித்து உங்களுக்குப் புரியவேண்டுமெனில் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பிரம்மாண்டமான மரங்களைப்பாருங்கள். அவைகள் உரமிடப்படாமலும், உழப்படாமலும் வளர்ந்தவையே. இயற்கையின் வளத்தின் அளவு நமது கற்பனைக்கு மிஞ்சியது. வைக்கோல், பசுந்தாள் மற்றும் பறவைகளின் எச்சங்களைக்கொண்டே அவற்றை உரம் மற்றும் வேதியுரங்களுக்கு மாற்றாகப்பயன்படுத்தி அதிக மகசூலைப்பெறலாம். பல ஆண்டுகளாக இயற்கையின் மண் பதப்படுத்தல் மற்றும் வளப்படுத்தல் முறையை கவனமாக கவனித்து வந்ததற்குப் பரிசாக இயற்கை அன்னையும் காய்கறிகள், நெல், ஆரஞ்சு மற்றும் மாரிக்காலப்பயிர்களை அமோகமாக அளித்து வந்துள்ளதாக ஃபுகுவோகா கூறுகிறார்.

களைக் கட்டுப்பாடு

மூன்றாவதாக களைக் கட்டுப்பாடு. உழுவதை நிறுத்தியதும் களைகளின் எண்ணிக்கை கணிசமாகக்குறைந்துவிடும். களைகளின் வகைகளும் மாறுபடும். வயலில் ஏற்கனவே விதைத்த பயிர் முற்றிய நிலையில் இருக்கும்போதே அடுத்த பயிரை விதைத்தால் அவைகள் களைகள் வளரும் முன்னரே வளரத்துவங்கும். அறுவடை முடிந்த பின்னர் வைக்கோலை அந்த நிலத்திலேயே இடும்போது களைகள் மிகவும் கட்டுப்படும். ஆக ஃபுகுவோகா சொல்கிறார் களைகள் ஒடுக்கப்படுவதற்கேயன்றி அழிக்கப்படுவதற்கல்ல என்று.

பூச்சிக் கட்டுப்பாடு

நான்காவது பூச்சிக் கட்டுப்பாடு. வேதியியல் பொருட்களைத் தெளிப்பதன் மூலம் தற்காலிகமாக பாதிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்பதற்காக நாம் மகிழ்ந்துவிட முடியாது. வேதிப்பொருட்களை கையாள்வது மிகவும் அபாயகரமான செயல்களை உருவாக்கும். இது வரும் காலத்தில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளை உருவாக்க வழி வகுக்கும்.

இந்த நான்கு அடிப்படை விதிகளும் இயற்கையின் போக்கோடு ஒத்துப்போகிறது. மேலும் இயற்கையின் வளத்தை அது போற்றிப்பாதுகாக்கிறது. “என்னுடைய தடுமாற்றங்கள் எல்லாம் இந்த சிந்தனைப்போக்கோடுதான் உள்ளன‌. காய்கறிகள், தானியங்கள் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை வளர்க்கும் என் முறைகளின் அடித்தளம் இதுதான்” என்கிறார் ஃபுகுவோகா.

“என்னை பின்பற்றி தான் செய்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். சூழலுக்கு ஏற்றவாறு செயல்முறைகளை மாற்றிக்கொள்ளுங்கள் “

~ மாசானபு ஃபுகுவோகா

ஆக நாம் ஒட்டுமொத்தமாக ஃபுகுவோகாவின் பண்ணையின் செயல்முறைகளை நோக்கும்போது அவரது பண்ணைக்கு வெளியில் இருந்து எந்த விதமான இடுபொருட்களும் உள்ளே கொண்டுவரப்படவில்ல என்பது தெளிவாகிறது. விதைகளும் அங்கேயே சேகரிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன‌. கால்நடைகளுக்கும் தீவனம் வெளியில் இருந்து கொண்டுவரப்படவில்லை. பண்ணைக்குள் ஆடு, கோழி, வாத்து, தேன், மீன் வகைகளை வளர்க்கிறார். ஃபுகுவோகாவின் தேவைகளுக்கும், பண்ணையில் பயிற்சி எடுக்க வந்து தாங்கும் நபர்களின் தேவைகளுக்குமான 90 சதவிகித நுகர்பொருட்கள் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன‌. மிகவும் இன்றியமையாத‌ எரிபொருட்களும், கையால் கையாளப்படும் சில கருவிகளும், துணிகளும் மட்டுமே வெளியில் இருந்து வாங்கப்படுகிறன‌.. இதற்காக அவர் மாதம் ரூபாய் 1000 மட்டுமே (ஜ‌ப்பானிய நாணய மதிப்பில் 10000 யென்) செலவழிப்பதாகக் கூறுகிறார்.

விளைச்சலும் நவீன மற்றும் பாரம்பரிய விவசாயத்தில் எடுக்கப்படும் உச்ச விளைச்சலுக்கு நிகராக உள்ளது. அதுவும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிலையாக உள்ளது. ஆக பண்ணையில் இருந்து வெளிக்கொண்டு செல்லப்படும் அத்தனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருவாய் கிடைக்கிறது. ஆக ஃபுகுவோகா தன்னிடம் வருபவர்களிடம் கூறுவது ‘என்னை பின்பற்றி தான் செய்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். சூழலுக்கு ஏற்றவாறு செயல்முறைகளை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். ஏனென்றால் ஜப்பானில் வருடம் முழுவதும் ஒரே சீராக 52 வாரங்களும் மழை பொழியும் இடமாக உள்ளது. உலகில் மற்ற பகுதிகளில் இந்த சூழல் இல்லை. அதனால் அவர் செயல்பாட்டில் உள்ள மூலக்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நமது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் எதுவுமே செய்யத்தேவையற்ற வேளாண்மை குறித்துப் பேசுவதால் படுக்கையில் இருந்துகூட எழாமல் வாழ்க்கையை நடத்தும் ஒரு மாய உலகத்தைக் காணலாம் என்ற நினைப்பில் அங்கு பலரும் போகின்றனர். அவர்களுக்கு ஒரு மாபெரும் வியப்பு காத்திருக்கிறது. இங்கு விவாதம் உழைப்பை எதிர்த்தல்ல, தேவையற்ற உழைப்பை எதிர்த்தே. மக்கள் பல நேரங்களில் தாங்கள் விரும்பும் பொருட்களைப்பெற தேவைக்கதிகமான உழைப்பையும், தங்களுக்கு தேவையற்ற பொருட்களைப்பெற சில வேலைகளையும் செய்துவருவதாகக்கூறுகிறார். மனிதன் என்கிற முழுமையான உணர்வை நமக்கு கொடுப்பது அறிவு அல்ல ஆனந்தமே என்பது ஃபுகுவோகாவின் கருத்து. ஒன்றை தனதாக்கிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதை புரிந்துகொண்டுவிட்டால் இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்து விடும் என்று கூறுகிறார். ஆக ஃபுகுவோகா கூறுவது போல வேளாண்மையின் ‘இறுதி லட்சியம்’ பயிர்களை வளர்ப்பதல்ல, மனிதர்களை வளர்த்து முழுமை பெறச்செய்வதுதான். மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்வதுதான்.

(கட்டுரை வடிவாக்க உதவி — பாபுஜி)

(மேலும் வரும்…)

உழவை வெல்வது எப்படி? / தாளாண்மை இதழில் வெளியான தொடரின் மறு பதிவு
பகுதி 1 | பகுதி 2

--

--

Krishi Janani Admin
Krishi Janani

Trading platform for farmers to aggregate their purchasing power. For-profit social enterprise in India.