ஜனனியின் இயற்கை சான்றிதழ் தேடலும் PGS India சான்றிதழும்

Muthu Raja
Krishi Janani
Published in
4 min readFeb 12, 2020

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இயற்கை முறையில் விளைவித்த போதும் தரசான்றிதழ் பெறுவதிலுள்ள சிரமங்கள் மற்றும் சிக்கல்களால் சான்றிதழ் பெற முயற்சிப்பதில்லை. சான்றிதழ் இல்லாமையால் அவர்களின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் இயற்கை விவசாயம் லாபகரமாக இருப்பதில்லை என்றெண்ணி சில விவசாயிகள் மீண்டும் இரசாயன முறைக்கு சென்றுவிடுகின்றனர். இந்த காரணங்களினால், தர சான்றிதழ் பெறும் முறைகளை ஆராயத் தொடங்கினோம்.

பல சர்வதேச, தேசிய, மாநில சான்றிதழ் முறைகளை ஆராய்ந்து பார்த்தபின், PGS India சான்றிதழை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த குழு உத்தரவாத சான்றிதழ் முறை விவசாயிகளை ஒருங்கிணைப்பதுடன், குறைவான செலவில், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. இது குறித்து விவசாயிகளுடனும் ஆலோசித்தபின் (விளக்க கூட்ட அறிவிப்பு, விளக்க கூட்ட புகைப்படங்கள்), PGS India சான்றிதழ் பெறுவதே சிறந்தது என்று முடிவெடுக்கப்பட்டது.

இது விவசாயிகள் குழுவாக செயல்பட்டு அளிக்கும் உத்தரவாததின் பேரில் தரப்படும் சான்றிதழ். கோத்தகிரியில் உள்ள கீஸ்டோன் நிறுவனத்தை பிராந்திய சபையாகக் கொண்டு, எங்கள் ஜனனி நிறுவனத்தின் மூலம் விவசாய குழுக்கள் இயற்கை சான்றிதழ் பெற்று பயனடையலாம். தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் குழு அமைக்கவும், பண்ணையை சீரான இடைவெளியில் ஆய்வு செய்யவும், குழுவை ஒருங்கிணைக்கவும் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். மேலும் விவசாயிகளின் பண்ணையில் நடைபெற்ற செயல்பாடுகளை PGS India-வில் பதிவேற்றம் செய்யவும், விளைபொருட்களை சந்தைப்படுத்தவும் உதவுகிறோம். அங்கீகரிக்கப்பட்ட இயற்கை இடுபொருட்கள், பயிர் மேலாண்மை பொருட்கள் போன்றவைகளை வாங்கும் இடத்தை ஜனனியின் மூலம் கண்டுபிடிக்கவும், குழுவாக வாங்கவும் வழிவகை செய்கிறோம்.

விவசாயிகள் அனைவருக்கும் பயன்படும் என்பதால் PGS India தொடர்பான பின்னணி மற்றும் விபரங்கள் இதோ இங்கே.

ஜனனி அமுதம் இயற்கை விவசாயிகள் குழு தொடக்கவிழா

சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் “ஜனனி அமுதம் இயற்கை விவசாயிகள் குழு” இந்த முறையில் PGS India சான்றிதழ் பெறும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. நீங்களும் உங்கள் பகுதியில் விவசாயிகள் குழுவை தொடங்க விரும்பினால் கீழ்காணும் எண்ணில் எங்களை தொடர்புகொள்ளவும்: +91 80980 04063 // +91 80980 04061

PGS India // PGS இந்தியா சான்றிதழ் என்பது என்ன?

இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற இயற்கை தர சான்றிதழ். இது விவசாயிகளின் பங்களிப்பு, அனுபவ அறிவு, குழுவின் நம்பகத்தன்மை இவற்றை மூலாதாரமாக கொண்டு விவசாய குழுவில் உள்ள அனைவரும் தரும் உத்தரவாதத்தின் பேரில் வழங்கப்படும். சான்றிதழ் பெற செய்யவேண்டிய முறைகள் மற்றும் செயல்பாடுகள் எளிமையாக இருப்பதால் விவசாயிகள் புரிந்துகொண்டு பயனடைய வழிவகுக்கிறது.

குழுவை பதிவு செய்து, PGS India சான்றிதழ் பெறுவது எப்படி?

ஒரே ஊரில் அல்லது அருகாமையில் உள்ள 5-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் குழுவாக செயல்படலாம்.

  • இயற்கையை காப்போம், உயிர்ச்சூழல் வளர்ப்போம், உயிரினப் பன்மயத்தை அதிகரிப்போம், கால்நடைகளின் நலம் பேணுவோம், அனுபவ அறிவை பகிர்வோம் போன்ற உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • இயற்கை வழி வேளாண் முறைகளுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் தர நிர்ணயங்களை பின்பற்றுவோம் என உறுதி எடுத்துக்கொண்டு குழுவில் இணைய வேண்டும்.
  • குழுவிற்கு பெயர் வைத்து PGS India வலைத்தளத்தில் பதிவு செய்யவேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களின் பண்ணை தகவல்களை பூர்த்தி செய்து பிராந்திய சபைக்கு கொடுக்கவேண்டும்.
  • அனைவரும் இணைந்து குழுவின் தலைவர், பயிற்சி மற்றும் கூட்ட ஒருங்கிணைப்பாளர், சக மதிப்பீட்டாளர், ஆவண பொறுப்பாளர், சமூக தொடர்பாளர் ஆகியோரை தேர்தெடுக்க வேண்டும்.
  • மாதம் ஒருமுறை உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
  • உறுப்பினர்களின் விவசாய முறையை சக உற்பத்தியாளர்கள் / விவசாயிகள் ஆய்வு செய்து அதன் அறிக்கையை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தி விளக்க வேண்டும்.
  • செயல்முறை தகவல் மற்றும் சக உற்பத்தியாளர் மதிப்பீட்டு அறிக்கையை PGS India வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
  • பிராந்திய சபை விபரங்களை சரிபார்த்தபின் சான்றிதழ் வழங்கும். சான்றிதழ் அளிக்கும் தேதியிலிருந்து அடுத்த வருடம் வரை இந்த சான்றிதழ் செல்லுபடியாகும், அதன் பின்பு மீண்டும் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
  • இரண்டு வகையான சான்றிதழ்கள் உள்ளன, இரசாயன நிலமானது முற்றிலுமாக இயற்கை விவசாயத்திற்கு மாற 36 மாதங்கள் ஆகும். அதுவரை PGS Green (இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது) சான்றிதழ் வழங்கப்படும். 36 மாதங்களுக்கு பிறகு PGS Organic சான்றிதழ் வழங்கப்படும்.
  • உறுப்பினர்கள் அறிந்தோ, அறியாமலோ இயற்கை வழி வேளாண் முறைகளுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிகளை மீறினால், சக குழு உறுப்பினர்கள் அதை ஒழுங்குபடுத்தி, சரி செய்யும் பொறுப்புள்ளவர்களாகிறார்கள்.

விளைபொருள் எவரால், எங்கு, எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக பகிர்ந்துகொள்வதன் மூலம் நுகர்வோருக்கு நம்பிக்கையையும், விவசாயிகளுக்கு வருமானத்தையும் ஒரு சேர வளர்க்க PGS India ஓர் சிறந்த வழியாகும்.

இயற்கையை காக்க உறுதிமொழி

PGS India சான்றிதழின் பயன்கள் என்ன?

  • இந்தியா முழுவதும் “PGS India (அல்லது) PGS India Organic” என்ற தர முத்திரையுடன் விற்பனை செய்ய இந்த சான்றிதழ் அனுமதி வழங்குகின்றது. FSSAI அங்கீகாரம் பெற்றது. ஏற்றுமதி அனுமதி கிடையாது.
  • விவசாயிகள் விளைபொருளுக்கான சான்றிதழை எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • மதிப்பீடு செய்யும் குழு உறுப்பினர்கள் உள்ளூரில், ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக உள்ளதால் அவர்களால் சிறந்த கண்காணிப்பை வழங்க முடிகிறது.
  • குழுவாக பண்ணை பார்வையிடல், பயிற்சி நடத்த மற்றும் பங்கு கொள்ள வாய்ப்புகள் இவற்றால் விவசாயிகளிடையே ஒற்றுமை ஓங்குகிறது.
  • அனைத்து உறுப்பினர்களும் அருகாமையில் உள்ளதால் விவசாய அனுபவ அறிவையும், இடையூறுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
  • மூன்றாம் தரப்பு ஆய்வாளருக்கு பதில் குழு உறுப்பினர்களே தர ஆய்வு செய்வதால் மதிப்பீட்டு செலவு குறைவு.
  • குழுவாக இருப்பதால் உறுப்பினர்கள் ஒன்று கூடி இடைத்தரகர் இல்லாமல் சந்தைப்படுத்த வாய்ப்பு.
  • பிற குழு சான்றிதழ் போல் இல்லாமல் தனித்தனியாக ஒவ்வொரு விவசாயியும் தங்கள் விளை பொருளுக்கான சான்றிதழை பெற முடியும். இதன் மூலம் விவசாயிகளின் சான்றிதழ்கள் அவர்களிடமே இருக்கும்.
  • PGS India இயற்கை சான்றிதழுக்கான முழு கட்டுப்பாடு குழு விவசாயிகளிடம் உள்ளது. பிற மூன்றாம் தரப்பு தர சான்றிதழ் அமைப்புகளுடன் ஓப்பிடும் போது, குழு சான்றிதழின் உத்தரவாதத்தன்மை, நம்பகத்தன்மை இவை விவசாயிகளின் கைகளிலே உள்ளது.
  • உறுப்பினர்களின் விளை பொருட்களை சீரான இடைவெளியில் வெளி ஆய்வகங்களில் சோதனை செய்துகொள்வதன் மூலம் குழுவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கலாம்.
  • விவசாயத்திற்கு தேவைப்படும் இயற்கை இடுபொருட்கள் மற்றும் கரிம நுண்ணூட்டங்களை குழுவாக இணைந்து உற்பத்தி செய்யலாம். அல்லது, மொத்தமாக வாங்குவதன் மூலம் உள்ளீட்டுச்செலவை குறைக்கலாம்.
  • இவற்றிற்க்கு மேலாக, சுற்றுசூழலை பாதுகாக்கவும், இயற்கையை வளப்படுத்தவும் குழுவாக பணிசெய்ய முடியும்.

விவசாயிகளின் ஒற்றுமை, முழு பங்களிப்பு இவற்றுடன் மட்டுமே விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுசூழலையும் மலர வைக்க முடியும். அதற்கான ஒரு வழிவகையே PGS India சான்றிதழ்.

சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் “ஜனனி அமுதம் இயற்கை விவசாயிகள் குழு” இந்த முறையில் PGS India சான்றிதழ் பெறும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. நீங்களும் உங்கள் பகுதியில் விவசாயிகள் குழுவை தொடங்க விரும்பினால் கீழ்காணும் எண்ணில் எங்களை தொடர்புகொள்ளவும்: +91 80980 04063 // +91 80980 04061

கனவுகள் பலிக்கட்டும், கழனிகள் செழிக்கட்டும்.

--

--