சிக்கமாருவும் கெக்கமாருவும் ஒரு கொய்யாபழமும்
ஒரு காட்டுல, ஒரு புளியமரம் இருந்துச்சாம். அதுல ஒரு அணில் இருந்துச்சாம்… அந்த அணிலுக்கு இரண்டு குட்டி அணில் பிறந்துச்சாம்… ஒரு குட்டி அணில் பேரு ‘சிக்கமாரு’… இன்னொன்னோட பேரு ‘கெக்கமாரு’…
ஒருநாள், அம்மா அணில் ஒருகொய்யாப் பழம் கொண்டு வந்து ரெண்டு பேருக்கும் அந்தப் பழத்தைக் கொடுத்தாங்களாம்.
இரண்டு பேரும் பாதிப் பாதிப்பழம் சாபிட்டதும், வயிறு ரொம்பிருச்சு… அதனால மீதிப் பழத்தை அப்புறம் சாப்பிடலாம்னு ஒளிச்சு வச்சாங்களாம்.
ஒளிச்சு வச்சுட்டு சிக்கமாருவும் கெக்கமாருவும் மரத்துக்கு மரம் தாவித் தாவி விளையாடி கிட்டிருந்தாங்களாம்…
கொஞ்ச நேரம் பொறுத்து ரெண்டு பேருக்கும் திரும்ப பசி வந்துருச்சாம்… ஆனா, எங்க அந்தப் பாதி பழத்தை வைச்சோம்னு ரெண்டு பேருக்குமே மறந்து போச்சாம்…
எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் ஞாபகமே வரலையாம். நாம, அந்த ஆலமரத்துகிட்டே தான் சாப்பிட்டுகிட்டு விளையாடிகிட்டிருந்தோம்… அப்போ அந்த மரத்துல வெள்ளையா ஒரு பறவை உக்காந்திருந்துச்சே, அதுகிட்டோ கேப்போமான்னு கெக்கமாரு சொல்ல, சரி வா போவோம்னு சிக்கமாருவும் போச்சாம்.
ரெண்டு பேரும் அந்த வெள்ளைப் பறவையைப் பார்த்ததும் அதுகிட்டப் போய், மொத்தக் கதையும் சொன்னாங்களாம்… அந்தப் பறவை உட்கார்ந்த இடத்துல இருந்தே தலையை மட்டும் திருப்பிகிச்சாம். சிக்கமாருவுக்கும் கெக்கமாருவுக்கும் ஒன்னும் புரியலையாம். திரும்ப திரும்ப கேட்டிருக்காங்க.
கீச்… கீச்… கீச்…
அப்படி ஒரு சத்தம் வந்துச்சு, அந்தப் பக்கமா ரெண்டு பேரும் திரும்பி பார்த்தா…அட நம்ம பச்சைக்கிளி, “சுட்டிப் பசங்களா… பட்டப் பகல்ல ஆந்தை கிட்ட என்னடா பேசுறீங்க…”ன்னு கேட்டுச்சாம்.
நாங்க சாப்பிட்டுட்டு பாதிப் பழத்தை ஒளிச்சு வச்சோம். அது எங்கன்னு மறந்துருச்சு. அப்போ இந்த வெள்ளைப் பறவையும் இங்க இருந்துச்சு அதான், அதுகிட்ட கேட்டோம்னு சொன்னாங்க.
“நல்லா கேட்டீங்க போங்க… ஆந்தை பகல்ல தூங்கிருவான், ராத்திரில தான் முழிச்சிருப்பான். இப்போ நீங்க பேசும் போது கூட தூங்கிட்டு தான் இருக்கான். அவன் கிட்ட கேக்குறது வேஸ்ட். வேற யாராச்சும் இருந்தாங்களான்னு கேட்டுச்சாம் பச்சைக்கிளி.
“ஆமா, மரத்துல கருப்பா ஒரு பறவையும் இருந்துச்சு…” அப்படின்னு ரெண்டு பேரும் சொல்ல… அட நம்ம காக்காவா… அதுகிட்ட கேளுங்க அப்படின்னு சொல்லிட்டு கீச்… கீச்… கீச்… கத்திகிட்டே பறந்து போயிருச்சாம்.
மரத்துல இருந்த காக்கா மொத்த கதையையும் கேட்டு… “அடேய் குட்டிப் பசங்களா… நான் இப்போதான் இந்தப் பக்கம் வரேன்… ஒழுங்கா சொல்லுங்க நீங்க பாத்தா பறவை கருப்பாவா இருந்துச்சு..?”
ஆமா…
வேற எதனா அடையாளம் சொல்லுங்க…
ஆங்… அது கண்ணு உங்களை மாதிரி இல்லை. சிகப்பா இருந்துச்சு…
“அது வால் வேற கலர்ல இருந்துச்சா?” அப்படின்னு காக்கா கேட்டதும். ஆமா, எங்க வாலோட கலர்ல இருந்துச்சுன்னு ரெண்டு பேரும் சொல்ல…
அப்போ அது இந்த மரத்துல இருக்க ‘செம்போத்து’ பறவை. அதுகிட்டப் போய் கேளுங்கன்னு சொல்லிட்டு “க்கா… கா… காகா…. க்கா…” பறந்து போயிருச்சாம்.
அப்போ பாத்து, அந்த மரத்தோட பின்பக்கம் அழகா ராகம் போட்டு பாடுற சத்தம் கேட்டுச்சாம்.
மரத்தோட சந்துல ஒளிச்சுகிட்டு பாடிகிட்டிருந்த அந்த ‘செம்போத்து குயில்’ கிட்ட போய் சிக்கமாருவும் கெக்கமாருவும் கதையை சொல்லி, நாங்க பழத்தை எங்க ஒளிச்சு வச்சோம்னு கேட்டாங்களாம்…
“சுட்டிப்பசங்களா, அங்கப் பாருங்க அப்படின்னு ஒரு இடத்தைக் காமிச்சு அங்கதான் மண்ணுல புதைச்சு வச்சீங்க… ஆனா, இப்போ அதை எடுத்து சாப்பிடாதீங்க… இந்த மரத்துல இருக்க ஆலம் பழத்தை சாப்பிடுங்க… இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு நீங்க புதைச்சு வச்ச இடத்தைப் பாருங்க… அங்க ஒரு கொய்யா மரம் வளந்துருக்கும்… அதுல நிறைய கொய்யாப்பழம் இருக்கும்… தினந்தினம் அதை நீங்க சாப்பிட்டுக்கலாம்…” அப்படின்னு சொல்லுச்சாம்.
அப்படியானு ரெண்டு பேரும் ஆச்சர்யத்தோட கேட்டுகிட்டு ஆலமரத்துல இருந்த பழத்தை சாப்பிட போயிட்டாங்களாம் சிக்கமாருவும் கெக்கமாருவும்.
காலைல பழத்தை ஒளிச்சு வச்ச இடத்தையே மறந்த சிக்கமாருவும் கெக்கமாருவும் எப்படி கொஞ்ச வருஷம் கழிச்சு அதே இடத்துக்கு வந்து சாப்பிடுவாங்கன்னு யோசிக்குறீங்களா… நீங்கதான் கதை கேட்டீங்கள்ள, அவங்க திரும்ப வந்து தேடும் போது நீங்க சொல்லுங்க.
சொல்வீங்களா..?