Supa Thamiziniyan
Page Number 51
Published in
3 min readApr 1, 2020

--

"பெரியவர்களுக்கு எதையும் விளக்கமாக சொல்ல வேண்டும்" அல்லது "The Little Prince – புத்தக அறிமுகம்"

குட்டி இளவரசனும் புத்தனும்

“இந்த உலகின் ஆகச்சிறந்த அழகானப் பொருட்களை நம்மால் காணவும் முடியாது, கைகளால் தொடவும் முடியாது”

என்று சொல்லும் இந்த உலகின் ஆகச்சிறந்த அழகிய புத்தகத்தை நம்மால் கைகளால் தொட்டும் கண்டும் வாசிக்க முடியும் என்றால் அந்தப் புத்தகம் சொல்வது பொய்யாகத்தானே இருக்க முடியும்.

இப்படி எதற்கெடுத்தாலும் தர்க்கம் பேசி எளிமையான வாழ்வை சிக்கல் நிறைந்ததாக மாற்றிவிடும் இந்தப் பெரிய மனுஷ புத்தியை தன் குட்டிக்கரங்களால் உடைத்து நொறுக்குகிறான் குட்டி இளவரசன்.

இந்த குட்டி இளவரசனின் கதைசொல்லி, தன் சட்டைப்பைக்குள் எப்போதும் ஓர் ஓவியத்தை வைத்திருப்பார். அவருடைய சிறு வயதில் அவர் வரைந்த ஓவியம் அது. வயதால் வளர்ந்த பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது அந்த ஓவியத்தைக் காட்டி உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கேட்பார்.

ஓவியம் 1

உங்களுக்கு இந்த ஓவியத்தில் என்ன தெரிகிறது?

இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது உங்களுக்குப் பயமாக இருக்கிறதா?

"இது என்ன ஓவியம்னே எனக்கு புரியலை..."

"ஒரு தொப்பியின் ஓவியத்தைப் பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்..." என கேட்கிறீர்களா

இந்தப் பதில்களை சொல்பவர்களிடம் அந்தக் கதைசொல்லி அதற்கு மேல் பேச்சு கொடுக்காமல் நகர்ந்துவிடுவாராம்... பெரியவர்களுக்கு எதையும் விளக்கமாகச் சொல்வதில் அவருக்கு ஒரு சலிப்பு...

சரி உண்மையில் இந்த ஓவியத்தை கண்டு ஏன் பயப்பட வேண்டும் தெரியுமா? அடுத்த ஓவியத்தைப் பாருங்கள்

பெரியவர்களுக்கு விளக்குவதற்காக வரையப்பட்ட ஓவியம். ஓவியம் 2

என்ன... இந்த ஓவியத்தை விளக்க வேண்டுமா?

"பெரியவர்களுக்கு எப்போதுமே விளக்கங்கள் தேவை..."

சிறு வயதிலேயே இந்தப் பெரியவர்களால் காயப்படுத்தப்பட்ட ஒரு கதை சொல்லி அறிவியலும் பூகோளமும் படித்து விமானியாகி தன்னந்தனியாக மனிதர்களை விட்டு விலகி பறந்துகொண்டிருக்கிறார். மனித நடமாட்டமே இல்லாத ஒரு பாலைவனத்தில் விமானம் பழுதாகி விபத்தில் சிக்கி விழுந்துவிடுகிறார்.

மனித நடமாட்டமே இல்லாத அந்த பாலைவனத்தில் அந்த கதைசொல்லியை ஒரு குரல் அழைக்கிறது.

The Museum of The Little Prince in Hakone | MarieM1FLERéunion / CC BY-SA

ஒரு குட்டியான அயல் கிரகத்துக்குச் சொந்தக்காரன் நமது 'குட்டி இளவரசன்'. அந்தக் கிரகத்தில் வசிப்பது அவன் ஒருவன் மட்டுமே. சூரிய அஸ்தமனங்களைக் காதலிப்பவன். அவனைத்தவிர அந்தக் கிரகத்தில் இருக்கும் ஒன்றை அவன் காதலித்தான். நொந்துபோகிறான். அதனால், அவன் கிரகத்தை விட்டு வெளியேறுகிறான்.

வெவ்வேறு மனிதர்களைத் தேடி வெவ்வேறு கிரகங்களுக்குப் பயணிக்கிறான் குட்டி இளவரசன். வழியெங்கும் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறான், உயிரினங்களை சந்திக்கிறான். வித்தியாசமான கேள்விகளையும் விளக்கங்களையும் சந்திக்கிறான்.

ஒரு புதிய கிரகத்தை வந்து அடைகிறான். அங்கு எந்த உயிரினங்களின் நடமாட்டமும் இல்லாமல் இருக்கிறது. தூரத்தில் ஒரு பழுதடைந்த விமானம். ஒருகே ஒரு மனிதன். குட்டி இளவரசன் அந்த மனிதனை அழைக்கிறான்.

மனிதர்களை விட்டு விலகி வந்த ஒருவனும், மனிதர்களைத் தேடி வந்த ஒரு சிறுவனும் சந்தித்துக்கொள்கிறார்கள்.

அவர்களுடைய முதல் உரையாடல் ஓர் ஓவியத்தை வைத்து இருக்கிறது. கதை சொல்லி சிறுவனாக இருந்தபோது அவனைச் சுற்றியிருந்த பெரியவர்களால் ஓவியம் வரைவதை விட்டுவிட்ட கதை சொல்லி குட்டி இளவரசனுக்காக ஓர் ஓவியம் வரைகிறான்.

குட்டி இளவரசன் கேட்ட ஓவியத்தை அவன் வரைந்திருக்கவில்லை. மீண்டும் திருத்தி வரைகிறான். மீண்டும் குட்டி இளவரசன் அதை ஏற்கவில்லை. கதை சொல்லிக்குள் இருந்த சிறுவன் விழித்துக்கொண்டு ஓர் ஓவியத்தை வரைகிறான். குட்டி இளவரசன் சிரிக்கிறான்.

குட்டி இளவரசன்கள் அல்லது சிறுவர்கள் அல்லது வயதானாலும் சிறுவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும் ஓவியம்.

கதை சொல்லி எப்படி பெரியவர்களை சோதிக்க ஓர் ஓவியத்தை வைத்திருப்பானோ, அப்படி கதை சொல்லியை சோதிக்க குட்டி இளவரசன் கேட்ட ஓவியம் இதுவாக இருந்திருக்கும்.

இந்த ஓவியம் என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா?

உங்களுக்குப் புரியவில்லை என்றால் பிரச்னையில்லை. உங்களுக்காகத்தான் குட்டி இளவரசன் இதைச் சொல்கிறான்.

“நேராக மட்டுமே பார்த்துக்கொண்டு செல்பவர்கள் நீண்ட தூரம் போக முடியாது.”

பல கிரகங்களுக்குச் சென்று மனிதர்களைப் புரிந்துகொள்ள விரும்பிய குட்டி இளவரசன் பூமியில் இந்தக் கதைசொல்லியை சந்தித்து நமக்காக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறான்.

அது “குட்டி இளவரசனை படியுங்கள்”

Nicholas Wang, derivative work by Bhutajata / CC BY-SA

குட்டி இளவரசனைப் போன்ற உங்கள் குழந்தைகள் இந்தக் கதையைப் படிக்கும் போது அவர்களை இந்த புத்தகத்தை வேறு விதமாக புரிந்துகொள்வார்கள். நீங்களும் சேர்ந்து படிக்கும் போது நீங்கள் வேறு விதமாக இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால், இந்தப் பெரியவர்களுக்கு எதையுமே விளக்கமாக சொல்ல வேண்டும். விளங்காத இடங்களில் தங்கள் தர்க்கங்களையும், தங்களது குழப்பமான புரிதல்களையும் ஏற்படுத்தி வேறு விதமான கதையைப் புரிந்துகொள்வார்கள். ஏனென்றால்,

மொழியானது தவறாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி.

என் பிரியத்துக்குரிய இந்த குட்டி இளவரசன் சொல்லுவான் “எது மிகவும் அத்தியாவசியத் தேவையோ அது நம்முடன் கண்ணாமூச்சிதான் விளையாடும்.” ஆமாம், இன்ட்ரோவர்ட்டுகளின் வாழ்க்கை முறையை இந்த உலகமே வாழ விதிக்கப்பட்ட இந்நேரத்தில் உங்களுக்குத் தேவைப்படும் இந்தக் குட்டிப்புத்தகம் உங்களுடன் கண்ணாமூச்சியாட்டம் ஆடாது. E-book ஆகவாவது நீங்கள் வாசிக்கலாம்.

e-book -> https://amzn.to/2R4o8To , https://amzn.to/3dLuBww

Audible -> https://bit.ly/39Dlx9w

--

--

Supa Thamiziniyan
Page Number 51

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. Previously @vikatan now @tamilnadunow