"வைக்கம் போராட்டம்" பழ அதியமான் புத்தக அறிமுகம்
‘வைக்கம்’ ஓர் ஊர் பெயராக மட்டுமே இங்கு இல்லை. ஒன்று, ஒரு போராட்டத்துடன் இணைத்து பேசப்படும் அல்லது இலக்கியவாதிகளால் பேப்பூர் சுல்தான் பஷீரோடு இணைத்து எழுதப்படும். வைக்கம் போராட்டமாக பேசப்படும் போது ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியுடன் பெரியாருடன் தொடர்புபடுத்தியே அப்போராட்டம் பார்க்கப்படுகிறது. சற்று கூடுதலாக காந்தியின் பங்களிப்பும் இங்கு பேசப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு பக்கம் வைக்கம் போராட்டத்தில் இருந்து பெரியாரை விலக்கிவைக்கும் பேச்சுகளும் இங்கு அதிகம்.
வைக்கத்தில் உள்ள சத்தியாகிரக அருங்காட்சியகத்தில் போராட்டத்தலைவர்களின் படங்களின் வரிசையில் உள்ளீடற்று வெற்றுப் படச்சட்டகம் ஒன்று மாட்டிவைக்கப்பட்டிருக்கும். முகந்தெரியாத பல போராட்டக்காரர்களை கௌரவிக்கும் குறியீடு அது. ‘வைக்கம் போராட்டம்’ பற்றிய பழ.அதியமானின் ஆய்வுப் புத்தகம் வைக்கம் போரட்டத்தின் பல முகங்களையும் இதுவரை முகம் காட்டாமல் இருந்த பல சான்றுகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது புத்தகம். முதல் பகுதி, போராட்டத்தின் காலவரிசையை விளக்கும் ஒரு நேரக்கோடு போன்ற சித்தரிப்பாக சான்றுகளுடன் விளக்குகிறது. இரண்டாம் பகுதி வைக்கம் போராட்டம் ஏன் நடந்தது, அங்கு இருந்த சமூகச்சூழல் என்ன, போராட்டத்திற்கு விதையாக இருந்த சீர்திருத்தவாதிகள் மற்றும் தலைவர்கள், இப்படி ஒரு போராட்டத்திற்கு அவர்கள் ஏன் உந்தப்பட்டார்கள் என்பதை இரண்டாம் பகுதி விளக்குகிறது. மூன்றாம் பகுதி காந்தியின் பங்களிப்பையும் அடுத்த பகுதி பெரியாரின் பங்களிப்பையும் விளக்குகிறது. இறுதிப்பகுதி, போராட்டத்தின் காலத்திற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் முறையையும் பதிவு செய்கிறது. இந்த விளக்கங்கள் அனைத்தும் நிகழ்ந்த சம்பவத்தை விளக்குவதாக சாதாரணமாக கடந்து செல்லவில்லை. வெவ்வேறு மொழிகளில் வெளியான பத்திரிகை குறிப்புகளில் இருந்தும், அரசு ஆவணங்களில் இருந்தும், போராட்டத்தலைவர்களின் கடிதங்கள், பதிவுகள் வழியாகவும், அரசாங்கப் பதிவுகள், காவல்துறை அதிகாரிகளின் குறிப்புகள் வழியாகவுமே விவரிக்கப்பட்டிருக்கிறது.
காந்தி பற்றிய அத்தியாயம், “வைக்கம் போராட்டம் காந்தி உருவாக்கியதல்ல, அது அவர் மீது திணிக்கப்பட்டது” என்ற மேற்கோளுடன் துவங்குகிறது. ஆனாலும், போராட்டம் துவங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே போராட்டத்தின் முக்கியத் தலைவர் டி.கே.மாதவன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்ற காந்தியுடனான உரையாடலை அவர் கைகளாலேயே எழுதி வாங்கிய சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
போராட்டத்தின் வழிமுறைகள், வடிவம் குறித்து தொடர்ந்து போராட்டத்தலைவர்களுடன் கடிதங்கள் வழி அவர் உரையாடிக்கொண்டே இருக்கிறார். அப்படி போராட்டத்தின் துவக்கம் முதல் போராட்டத்தின் இறுதியில் காந்தி நடத்திய அற்புதமான பேச்சுவார்த்தை வரைக்குமாக ஒரு முழுசித்திரமும் நமக்கு புத்தகத்தில் கிடைக்கிறது. அதேசமயம் தீண்டாமை, நெருங்காமைக்கு எதிரான போராட்டமாக அவர் பார்க்காமல் கோவில் நுழைவுப்போராட்டமாக அவர் பார்த்ததையும், அதனால், இந்து அல்லாத பிற தலைவர்களை போராட்டக்களத்தில் இருந்து அவர் விலக்கியதையும், இந்தச் சத்தியாகிரகத்தை அகில இந்தியப் போராட்டமாக அவர் கருதாதையும் உரிய சான்றுகளுடன் விவரிக்கவும் புத்தகம் தவறவில்லை.
தொண்டர்கள் இங்கு இருக்கிறார்கள். தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு இங்கு தலைமையேற்க ஒரு தலைவர் வேண்டுமென வைக்கத்திலிருந்து அழைக்கிறார்கள். பெரியார் வைக்கத்துக்குச் செல்கிறார். போராட்டத்திற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகள் ஊர் ஊராக அவர் சென்று பேசியதைப் போலவே வைக்கத்தை அடுத்துள்ள பகுதிகளில் மக்களிடையே பேசுகிறார். போராட்டத்துக்கான மக்கள் ஆதரவைத் திரட்டுகிறார். இந்தப் பகுதிகளில் பெரியாரின் பேச்சுகளுக்கான ஆதாரங்களில் அதிகம் இடம்பெறுவது காவல்துறையினரின் குறிப்புகள். வைக்கத்தில் அவர் மக்களைத் திரட்டிய, போராடிய நாள்களை விடவும் அதிகமான நாள்களை அவரை சிறைக்குள் இருக்க வைக்க இதுவும் ஒரு காரணம். மக்களிடையே பேசும் போது அவர் பயன்படுத்திய தர்க்கங்களும் கருத்துகளும் பிற்காலப் பேச்சுகள் எழுத்துகளுக்கான முன்னோட்டம்தான். போராட்டத்தின் காலத்திற்குப் பிறகு பெரியார் மீது வைக்கப்படும் போராட்டம் குறித்த அவதூறுகளுக்கும் திரிபுவாதங்களுக்குமான விளக்கங்களை களத்தில் இருந்தவர்களின் எழுத்துகள் வாயிலாகவுமே புத்தகம் விவரிக்கிறது.
இப்பகுதிகளை அடுத்து, பின்னிணைப்புகளாகவும் காந்தி, பெரியார் இருவர் தொடர்புடைய பல சான்றுகள் விரிகின்றன. இந்த காரணத்தினால், கூறியது கூறல் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிடுகிறது. ஒரு வரலாற்று ஆய்வில் அதனை ஒரு குறையாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேசமயம், இந்த கூறியது கூறல் புத்தகம் முடியும் போது ஒரு முழுமையை நமக்குத்தருகிறது.
வரலாற்றில் ஓராண்டு காலம் மட்டும் நடைபெற்ற ஒரு போராட்டத்தைப் பற்றிய ஆய்வை எழுதிமுடிப்பதற்கு பழ.அதியமானுக்கு பத்தாண்டுகளுக்கும் மேல் தேவைப்பட்டிருக்கிறது. அவருடைய நண்பர்களும் சக ஆய்வாளர்களும் வற்புறுத்தலும் கிண்டலுமாக புத்தகத்தை வெளியிட வைத்திருக்கிறார்கள். இந்த ஆய்வை முடிப்பதற்கு அவர் ஏன் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்? புத்தகத்தின் பக்கங்கள் புரளும் போது உங்களுக்கே விடை விளங்கத் தொடங்கியிருக்கும்.
இக்கட்டுரையின் வேறு வடிவம் ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது. அக்கட்டுரையை விகடன் தளத்தில் படிக்கலாம்.