தமிழக அரசியலில் சகாயம்… சாத்தியமா? — வாசகர் பதிவு

‪#‎சகாயம்‬ சகாயம் சகாயம்… இது தான் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படும் விஷயம். கடந்த ஞாயிற்று கிழமை திரு.சகாயம் அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்தது பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தற்பொழுது உள்ள எந்த அரசியல் கட்சியும் தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. சகாயம் தலைமையில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு அது ஆட்சியில் அமர்ந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு தேவையான மாற்றம் சாத்தியம் என்பது இந்த பேரணிக்கு வந்திருந்தவர்களின் நம்பிக்கை. என்ன மாற்றம் வேண்டும்? எப்படி அந்த மாற்றம் சாத்தியம் என்பதை பற்றி இவர்கள் யோசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே. அவர்களை பொறுத்தவரை சகாயம் என்பவர் இவை அனைத்தையும் யோசித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். நாம் அதன் படி நடந்தால் மக்கள் நமக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திவிடுவார்கள். அதன் பின் சகாயம் அவர்கள் ஆட்சியில் நாம் விரும்பிய மாற்றம் வரும். இது தான் அவர்களது எண்ண ஓட்டமாக இருக்கும். ஆனால் இதே எண்ண ஓட்டம் தான் இன்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களிடமும் இருக்கிறது. ஒரு சமயத்தில் ரஜினி ரசிகர்கள் கூட இதே எண்ணத்தில் தான் அரசியல் கனவு கண்டனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அசுர வெற்றிக்கு பின் கேஜ்ரிவால் என்ற தனி மனிதன் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். பிஜேபி கட்சி அதிக இடங்களுடன் ஆட்சியை பிடிக்க மோடி என்ற தனி மனிதனின் மீது இருந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் காரணம். டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வளர முடியாமல் போனதற்கு அந்த மாநிலங்களில் மக்கள் முன் நிறுத்த ஒரு நம்பிக்கை நட்சத்திரம் இல்லாதது ஒரு முக்கிய காரணம். இன்று கூட ஒரு வேளை சகாயம் கட்சி ஆரம்பித்தால் தமிழக ஆம் ஆத்மி கட்சியில் மீதம் உள்ள 200 பேரும் கடையை காலி செய்து விடுவார்கள் என்பதே உண்மை. ஆகவே தனி மனித நம்பிக்கை என்பது இந்திய மக்களின் அரசியல் நோய். இந்த கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது. எனவே சகாயம் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று களம் இறங்கியவர்களை மட்டும் இதில் குற்றம் சுமத்துவது சரியில்லை.

சகாயம் அரசியல் பிரவேசம் தொடர்பாக சில நண்பர்களுடன் விவாதிதத்தில் அருமையான பல கருத்துக்கள், யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

1. 2016 தேர்தலுக்கு முன் சகாயம் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்து நிறுத்துவது சாத்தியமா? அவ்வாறு செய்யும் போது நேரமின்மை காரணமாக வேட்பாளர்கள் தேர்வில் குறைகள் வரும். தேர்தலில் கவனம் செலுத்தினால் கட்சி கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் வகுப்பதில் சிக்கல் வரும். தவறான ஆட்கள் கட்சியில் நுழைய இது வழி வகுக்கும். இதனால் தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றால் கூட அதன் பின் கட்சியை நடத்துவதில் பல சிக்கல்கள் வரும்.

2. சட்டசபை தேர்தலை பற்றி கவலைப்படாமல் சென்னையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் சகாயம் கவனம் செலுத்தி 200 இளைஞர்களை களம் இறக்கி மேயர் வேட்பாளராக களம் இறங்கலாம். இதன் மூலம் அவருடைய நிர்வாக திறமையை முழுமையாக செயல்படுத்த நல்ல வாய்ப்பு. சமூக வலைத்தளங்கள் பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் அவருடைய வெற்றி வாய்ப்பும் அதிகம். சென்னையில் செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் கவனிக்கப்படும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இது நல்ல களத்தை அமைத்துக் கொடுக்கும்.

3. சகாயம் சுயேச்சை வேட்பாளராக மதுரையில் களம் இறங்க வேண்டும். அவருக்கு ஆதரவாக அனைவரும் பிரச்சாரம் செய்தால் எதிர்க்கும் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வாய்ப்புகள் அதிகம். மேலும் அவர் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும் போது தங்கள் கட்சிக்கு நல்ல பெயர் வாங்க அவரை ஆதரித்து மற்ற கட்சிகள் அந்த தொகுதியில் போட்டியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பின் ஒரு எம்.எல்.ஏ வாக அடுத்த 5 வருடங்களுக்கு தனது கட்சியை பொறுமையாக கட்டமைக்கலாம். 2021 தேர்தலில் ஒரு சிறப்பான கட்சியுடன் நிதானமாக தேர்தலை சந்திக்கலாம். கட்சியின் நலனும் பாதுகாக்கப்படும். வெற்றி வாய்ப்பும் அதிகமாகும். ஏனெனில் 2016ல் எந்த ஆட்சி அமைந்தாலும் அவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

4. சகாயம் ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். பல்வேறு பிரச்சனைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் அமைத்து தமிழகம் முழுவதும் போராடும் அனைவரையும் ஒரு இயக்கத்தின் கீழ் திரட்ட வேண்டும். அரசாங்கம் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால் இந்த இயக்கம் மக்களுக்காக களம் இறங்கும் என்ற பயத்தை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். சட்ட ரீதியான பல்வேறு சவால்களை அரசின் மீது வீசி அவர்களை பாதை விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்த பணியும் அரசாங்கம் செய்யக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் உரிமைகளை மக்கள் உணர்ந்து அந்த உரிமைக்காக வலுவான குரல் கொடுக்கும் சமுதாயமாக அவர்களை மாற்ற வேண்டும். இந்த சமுதாய மாற்றம் ஏற்பட்டால் எந்த அரசியல் கட்சியாலும் மக்களை ஏமாற்ற முடியாது. முன்னேறிய பல நாடுகளில் அவர்கள் முன்னேற்றத்திற்கு மாபெரும் காரணம் விழிப்புடன் இருக்கும் அந்த நாட்டு மக்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை தானே.

இதே போல உங்களுக்கும் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்தும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.