பத்தாயிரம் மணிநேர விதி

Tharique Azeez
Puthu Nool
Published in
3 min readNov 4, 2014

2011 ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwell). 2005 ஆம் ஆண்டு TIME சஞ்சிகையின் உலகில் செல்வாக்குச் செலுத்தும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர். The Tipping Point, Blink மற்றும் Outliers போன்ற பல பிரபல்யமான நூல்களின் ஆசிரியர்.

பத்தாயிரம் மணிநேர விதி என்றவுடனேயே, இவரே அனைவராலும் நினைவுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றார். தனது Outliers என்ற நூலின் மூலம் இந்த விதி தொடர்பாக சொல்லியிருப்பார்.

ஒருவர், ஒரு சிக்கலான திறனில் நிபுணத்துவம் பெற்றவராவதற்கு, அந்தத் திறனை பயிற்சி செய்வதற்காக அதனையே குறித்தான பத்தாயிரம் மணிநேர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதுதான் — அந்த விதி.

ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 மணிநேரம் தான் நிபுணத்துவம் அடைய வேண்டுமென எண்ணுகின்ற விடயத்தில் 10 வருடங்களுக்கு பயிற்சி எடுத்தால் ஒருவன் அவன் விரும்புகின்ற துறையில் நிபுணத்துவம் அடைகின்றான் என்பதே இதன் இன்னொரு வடிவம்.

பல ஆதார சம்பவங்களோடு தனது அவதானங்களை கிலாட்வெல் அந்த நூலில் விபரிப்பார்.

ஆனாலும், இந்த பத்தாயிரம் மணிநேர விதி, பலராலும் வித்தியாசமான கருத்தோடு உணரப்பட்டுள்ளதும் உண்மை. “நிபுணராவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெறும் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்வதுதான்” என்பதுதான் அந்தக் கருத்து.

வெறும் பத்தாயிரம் மணிநேரங்கள், எதைத் தரமுடியும்? வெறுமையைத் தவிர.

விரும்பிய திறனில் ஒன்றிப்போய், அதுபற்றியதாய் எமது பயிற்சிகள் பத்தாயிரம் மணிநேரமாவது இருக்க வேண்டுமென்பதையே இந்த விதி சொல்கிறது. பத்தாண்டுகள் தான் தேவைப்படும் என்றில்லை — ஒன்றித்த பயிற்சியுடனான பல மணித்தியாலங்களை ஒரு நாளில் உங்களால் பயிற்சிக்காக தர முடிந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பன்னர் ஆகிடலாம்.

நேரந்தான் எல்லாம்.

திறமை அல்லது ஆற்றல் என்பது தோன்றி விசாலமாக்கபடுவதில் பயிற்சி, பொறுமை, தொழில்நுணுக்கங்கள் என பல காரணிகள் பங்காற்றும் என்பதும் நாம் அறிந்ததே!

மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டு பயிற்சி செய்வதாலோ, நிபுணத்துவம் கிட்டாது என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது. ஒன்றித்த பயிற்சியில் மணித்தியாலக் கணக்கு தெரியாது — நாம் பயிற்சி செய்யும் விடயம் எதுவோ அது மட்டுமே கவனத்தில் நிற்கும்.

இந்த விதி வலியுறுத்துவதெல்லாம் பயிற்சி செய்வதனால் பலன்கள் கிடைக்கின்றது என்பதைத்தான்.

ஆனால், நிபுணர்கள் என்பவர்கள் யாவர்?

இசையில் விற்பன்னராக நினைத்து, இசையமைப்பாளர்கள் எவ்வாறு இசையமைக்கிறார்கள் என்றுணர்ந்து அதன்படி வெளிப்படுத்த எண்ணுதல், எழுத்தில் வித்தைகள் செய்ய எண்ணி எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறார்கள் என அதன்படி வெளியிட பயில்தல், சித்திரக் கலைஞனாகி சிகரங்கள் தொட மற்ற சித்திரக் கலைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையறிந்து முயல்தல் என்பதிலேயே பலரினதும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘முயற்சிகள்’ ஒருபோதும் நிபுணராவதற்கான வாய்ப்பை வழங்காது. அசலின் இன்னொரு நகலொன்றை மட்டுமே தரும்.

கலையையோ, திறனையோ தனக்கேயுரித்தான பாணியில் சொல்லத் தெரிந்தவன் தான் நிபுணராகின்றான்.

தன்னைத் தானாகவே காட்டிக் கொள்கின்ற வித்தைகளைத் தான் நிபுணன் பயிற்சியாகப் பெறுகிறான் என்றே உணர வேண்டியுள்ளது. இது சொல்லிவிடுவது போல் லேசானதல்ல. மனதோடு ஒருமித்த பயிற்சிகள் நிறையத் தேவைப்படுகிறது.

தனது கருதுகோள்கள் பற்றிய தெளிவை புரிகின்ற வகையில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்தான் ஒருவனை ஒரு துறைசார்பான தெளிவுள்ளவனாகக் காட்டுகிறது.

“எனக்கிட்ட இருந்து அவங்க இதைத்தான் எதிர்பாக்கிறாங்க. அதத்தான் நான் செய்யனும்” என்றவாறான தொனியில்தான் நிறைய முயற்சிகளின் தொடக்கம் இன்றளவில் இருக்கிறது. இங்கு தன்னைத் தானாக காட்டுவதற்கான தெளிவின் துவக்கம் தேவைப்படுகிறது.

மற்ற விடயங்கள், மனிதர்களின் எண்ணங்கள் சார்பான ஆதிக்கமே எமது எண்ணங்களின் வெளிப்பாட்டின் பூட்டாகவிருக்கிறது. ஆனால், சாவி எம்மிடம் இருப்பது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அனைவரும் “இது புதிசா இருக்கே!” என்றவாறான திகைப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆச்சரியங்களை உருவாக்குபவர்கள்: நேரத்தை பயிற்சிகளால் அலங்கரித்து தன்னைத் தானாகவே காட்டிக் கொண்டவர்கள்.

நேரத்தை பயிற்சியில் முதலீடு செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்கள் – அதிர்ஷ்டசாலிகள். செனகா என்ற உரோம தத்துவஞானி, “தயார்படுத்தல், வாய்ப்பைச் சந்திக்கும் நிலையைத்தான், அதிர்ஷ்டம் என்கிறோம்” என்று ஒரு தடவை சொல்லியிருப்பார்.

தன்னைத் தானாக வெளிப்படுத்தினால், வாய்ப்புகளுக்கு உங்களை வந்து சேரும் நிறைய வாய்ப்புகள் பிறக்கும். இங்கு அசலுக்கு நிறைய மௌசு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எழுத்தாளர் கிரிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் சொன்ன ஒரு விடயத்தை பகிர்தல் பலன் தரும் என நினைத்து இங்கு இணைக்கிறேன்.

“நீங்கள் பேசிக் கொண்டிருந்த ஆனால் எப்போதுமே செய்யாத அந்த விடயங்களைச் செய்யுங்கள். எப்போது விட்டுவிடுவது, எப்போது கட்டிக் காப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவசரம் வேண்டாமே! அது அதைப் போன்றுதான் இருக்கிறது என்ற சொல்லாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டாம். எடுத்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் — உங்கள் ‘முடியும்’ என்ற வார்த்தைக்கு அப்போது கவர்ச்சி கிடைக்கும்.

முன்னேற்றத்தில் பங்காயுள்ள நண்பர்களோடு பழகுங்கள், குழிதோண்டும் மற்றவர்களோடான அணுக்கம் தேவையில்லை. நீங்கள் செய்வதில் ஆர்வமாக இருங்கள். மற்றவர்களுக்கு ஆர்வமாக உங்களைத் தோற்றுவிக்கின்ற பாசாங்கு வேண்டாம். உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருங்கள். அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் இளமையாயிருங்கள். ஈற்றில், நீங்கள் யாரோ அதுவாகவே இருங்கள்.”

குறுக்கிட்ட கோபாலு இப்படிக் சொல்கிறான், “அப்படி, இப்படி என வரவேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, எதுவாக நீயாக வேண்டுமோ, அதையே முயற்சிக்காமல் – செய். நீ செய்வதில் தோற்றால்தான், செய்தது முயற்சி. முயற்சியில் தோற்றதை என்னவென்று சொல்வது? ஆக, எதைச் செய்ய எண்ணுகிறாயோ அதை முயற்சிக்காமல் உடனே செய்! – செய்வது தோற்றுப் போனால், அது தன்னாலே முயற்சியாகும்.”

- உதய தாரகை — Follow @enathu

  • பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
  • TED Global 2011 இல் மல்கம் கிலாட்வெல் வழங்கிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது. TED.com இல் காணலாம்.
  • Outliers நூலில் சொல்லப்படுகின்ற இந்த விதி பற்றிய விடயத்தை சுருக்கமாக ஒருவர் காணொளியாக உருவாக்கி இருக்கிறார். YouTube இல் அதனைக் காணலாம்.

Originally published at niram.wordpress.com on December 23, 2011.

--

--

Tharique Azeez
Puthu Nool

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.