கொலம்பியப் பல்கலைக்கழக பட்லர் நூலகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் அ ரேவதியின் பெயர்

Queer Chennai Chronicles
QCC Blog
Published in
2 min readOct 9, 2019

1989-ம் ஆண்டுவரை கொலம்பியப் பல்கலைக்கழக (columbia university) பட்லர் நூலகத்தின் (Butler Library) மதிற்சுவரில் ஆண் எழுத்தாளார்களின் பெயர்களேப் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து பிரவுன் (Brown) மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் இணைந்து எட்டு பெண் எழுத்தாளர்களின் பெயர்களைக் கொண்ட பதாகையை வைக்க முயன்றனர். ஆனால் கல்லூரிக் காவலர்களால் அப்பதாகை நீக்கப்பட்டது.

1994-ம் ஆண்டு பெண்கள் வரலாறு மாதக் கொண்டாட்டமாக (Women’s History Month) பல்கலைக்கழக மாணவர்கள் பத்து பெண் எழுத்தாளர்களின் பெயர்களைக் கொண்ட பதாகையை வைத்தனர். இம்முறை பல்கலைக்கழகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முப்பது வருடங்களுக்குப் பிறகு அக்டோபர் 2019-ல் புதிய பதாகை அமைக்கப்பட்டிருக்கிறது. பால்புதுமையினர், கறுப்பினத்தைச் சார்ந்தவர்களை உள்ளடக்கிய எட்டு பேர் இம்முறை கவுரவிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சார்ந்த திருநங்கைகளுக்கான செயல்பாட்டாளரும்,எழுத்தாளரும், நாடகக்கலைஞருமான அ ரேவதி (A Revathi) அவர்களும் அந்த எட்டு பேரில் ஒருவர்.

மாயா ஏஞ்சலோ (Maya Angelou) , டோனி மோரிசன் (Toni Morrison), குளோரியா இ அன்சால்டுவா (Gloria E Anzaldua), டயானா சாங் (Diana Chang), சோரா நீல் ஹர்ஸ்டன் (Zora Neale Hurston), என்டோசாக் ஷேஞ்ச் (Ntozake Shange) மற்றும் லெஸ்லி மார்மன் சில்கோ (Leslie Marmon Silko) ஆகியோர் பெயர்களுடன் அ ரேவதி அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

உணர்வும் உருவமும், வெள்ளை மொழி போன்ற புத்தகங்களை எழுதிய ரேவதி வெள்ளைமொழி புத்தகத்தை நாடகமாக்கி நடித்தும் வருகிறார். அவரது பெயரைப் பதாகையில் காட்சிப்படுத்தியதோடு அவரது புத்தகங்களும் பட்லர் (Butler) நூலகத்தில் வாசிக்கப்பட இருக்கிறது.

வெள்ளை மொழி, அ. ரேவதி அவர்கள் எழுதிய தன்வரலாற்று புத்தகம். திருநங்கையான இவர், தனது பாலமைவு அடையாளம் காரணமாக தான் சந்தித்த சிக்கல்களையும், தம்மைப் போன்றோர் சந்திக்கும் சிக்கல்களையும், வாழ்வியல் சமூக சூழலியல் விபரிப்புகளோடு பதிவுசெய்துள்ளார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் The Truth about Me: A Hijra Life Story என்று வ. கீதாவால் (V Geetha) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடத்திலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பாலியல் சமத்துவத்தை நோக்கிய செயலாக, பெண்ணிய உரையாடலின் அடுத்த கட்டமாக” இந்த புத்த்கம் கருதத்தக்கது என்று காலச்சுவடு மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது (காலச்சுவடு, இதழ் 149, பக்கம் 71, வருடம் 2015).

More Info: https://www.facebook.com/QueerChennaiChronicles/photos/a.2111371359074869/2111371442408194/?type=3&theater

https://www.instagram.com/p/BlPMMgQgyfc/?igshid=1af7zku94qrn1

~*~*~

--

--