பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பிற்கான பயணமும்

பிரிந்தா

Queer Chennai Chronicles
Oct 2 · 3 min read

15. 09. 2019, ஞாயிற்றுக்கிழமை, யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற “நாங்களும் இருக்கிறம்” ஆவணப்பட வெளியீட்டில் பிரிந்தாவினால் ஆற்றப்பட்ட ஆரம்ப உரை

பட உதவி — வினிசாந், பிரசாந்

பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பும், நம்காலத்திற்கு மிகவும் அவசியமானது. அவை உண்டாக்கும் குடும்பம், உறவு முறைகள் பற்றிய பொதுப்புத்தி, பாலியல் தேர்வு, பாலியல் விருப்பம், அடையாளத்தைத் தேர்ந்துகொள்ளும் சுதந்திரம், மற்றமையை ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்றவை பற்றிய உரையாடல்கள் நமது சமூகத்தில் இருக்கும் ஆதிக்க ஒழுங்கைக், குலைத்துப்போடுபவை.

நமது கல்வி நிறுவனங்கள், வேலைத்தளங்கள், பொதுவெளிகள் போன்றவை உண்டாக்கியிருக்கும் பாலியல் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து பெரும்பான்மையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் நமது சமூகங்கள் கடந்த காலங்களில் நோய் என்றும் விநோதமென்றும், மூடநம்பிக்கையென்றும் நம்பப்பட்டு வந்தவற்றை மீள் விசாரணைக்குட்படுத்தி அவற்றில் பொருத்தமானவற்றை ஏற்று, தேவையற்றதை விலத்தி, புதிய அறிதல் முறைகளை உள்வாங்கி வித்தியாசங்களை ஏற்று, பன்மைத்துவமான சனநாயக வெளிக்குள் நகர வேண்டியதை பாற்புதுமையினர் பற்றிய உரையாடல் கோருகிறது.

இந்த விளக்கத்தின் பின்னணியில் இன்று நாம் பார்வையிட இருக்கும் ஆவணப்படம், யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பால்நிலையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் சந்திப்புகளின் மூலமாகவும் உரையாடல்களினூடாகவும் ”நாங்களும் இருக்கிறம்” என்கிற ஆவணப்படமாக தொகுப்பாக்கியிருக்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா.

இலங்கைத் தீவில் வாழ்கின்ற மாற்றுப் பால்நிலையினர் பற்றிய அறிதலும் அவர்கள் பற்றிய அக்கறையும் நமது சமூகங்களிடம் குறைவாகவே இருக்கின்றது. அவர்களது இருப்புக் குறித்தும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் அறிவதற்கான எதுவிதமான எத்தனமும் செய்யாமல் அசட்டையீனமாகவே பெரும்பான்மை மக்கள் இருக்கின்றார்கள் அல்லது தவறான புரிதல்களுடனும் முன்முடிவுகளுடனும் தொடர்ந்தும் இருந்துவிடுகின்றார்கள். ஊடகச் சித்தரிப்புகள் தொடங்கி சினிமா வரை மாற்றுப் பால்நிலையினரை கேலியுடனும் எதிர்மனோநிலையுடனும் அணுகும் போக்கே பரவலாக உள்ளது. பாலியல் குறித்தோ அல்லது பாலினம் குறித்தோ நமது பாடசாலைகள் என்ன கற்பிக்கின்றன? பாடசாலைகளில் மாற்றுப்பால்நிலையினர் எப்படி நடத்தப்படுகின்றனர்? பொதுவெளிகள், குடும்ப உறவுகள் போன்றவை மாற்றுப்பால் நிலையினரை எப்படி எதிர்கொள்கின்றனர்? மாற்றுப்பால் நிலையினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது? போன்றவற்றை அறிந்துகொள்ளவும் அதிலிருந்து உரையாடல் ஒன்றைத் தொடக்குவதற்குமான சீரியதோர் முயற்சியாகவும் செயற்றிட்டமாகவும் இந்த ஆவணப்படத்தினை பிறைநிலா கிருஷ்ணராஜா உருவாக்கியிருக்கின்றார்.

நமது கல்வி நிறுவனங்கள், வேலைத்தளங்கள் மற்றும் இன்னபிற நிறுவனங்களும்ப் உருவாக்கியிருக்கும் பொதுவான அறிதல் மற்றும் நடைமுறைகள், வித்தியாசங்களை உள்ளெடுக்கத் தயங்குபவையாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, இரண்டு வருடங்களிற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற வாரப்பத்திரிகையொன்று மாற்றுப்பால் நிலையினர் ஒருவரின் நேர்காணலை வெளியிட்டிருந்தது. சினிமாவை, போரை, பாலியல் சீண்டல்களை, தொடர்ந்தும் கவர்ச்சிக்குரியதாகச் சந்தைப்படுத்தும் தமிழ் ஊடகவெளியில், பாற்புதுமையினர் குறித்த பிரச்சினைகளைச் சரிவர விளங்கிக்கொள்ளாத குறித்த வாரப்பத்திரிகை, குறித்த மாற்றுப்பால் நிலையினரின் நேர்காணலைக்கூடச் சந்தைப்பொருளாகவே மாற்ற விரும்பியிருந்ததைப்போல் தெரிகிறது. ஏனெனில் குறித்த நேர்காணல் கொண்டிருந்த விளக்கப்பற்றாக்குறைகளை பெரும்பாலான வெகுசனம் இது தான் பிரச்சினை என்பதாக விளங்கிக்கொண்டது, நமது ஊடக வெளி பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளாமல் தவறான சித்தரிப்புக்களைத் தொடர்ந்து வழங்குவதையே இது காட்டுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

பாற்புதுமையினரின் உரிமைகளுக்கான பயணத்தில் ஆவணமாக்கற் செயற்பாடுகள், பதிப்பு முற்சிகள், எழுத்து மற்றும் பிற கலைவடிவச்செயற்பாடுகள், அமைப்பாய் திரள்வதற்கான முயற்சிகள், பொதுசமூக ஏற்பை நோக்கிய பயணத்தைத்தொடருதல் என்பன முக்கியமான வழித்தடங்கள். எனவே ஊடகங்களோ கொள்கை வகுப்பாளர்களோ கல்வி நிறுவனங்களோ தாங்கள் கொண்டியங்கும் அறிவு மற்றும் நடை முறைகளை மீளப்பரிசீலிப்பது மிகவும் அவசியமானது. பாற்புதுமையினருக்கான உரிமைகளை வென்றெடுப்பதும், பொது வெளியில் நடமாடும் பொழுது பாதுகாப்பு, கல்வி நிறுவனங்கள், வேலைத்தளங்கள் போன்ற பொது வெளிகளில் சமமாக நடத்தப்படும் சமூக ஏற்பு போன்றவற்றை முதற்கட்டக் களவேலையாக பாற்புதுமையினர் குறித்துச் சிந்திக்கும் மற்றும் செயற்படும் செயற்பாட்டாளர்களை நோக்கி முன் வைக்கிறோம். ஏற்கனவே பாற்புதுமையினர் குறித்துச் செயற்படுபவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாகவும், கருத்துக்களைப் பரப்புவதிலும் ஆழப்படுத்துவதிலும் உதவியாக இருப்பதும் கூட நம்மால் இயலக்கூடியதே.

ஆண் — பெண், கணவன் — மனைவி போன்ற இருமை நிலையான சித்தரிப்புக்களே நமது பார்வை வெளியெங்கும் நிறைந்துள்ளன. இவை உண்டாக்கும் மனப்பதிவுகளே பாடசாலைகளிலும், பொதுவெளிகளிலும் மாற்றுப் பால்நிலையினரைக் கேலியுடனும் எதிர் மனோநிலையிலும் அணுகத்தூண்டுகிறன. நமது சமூகம் பெருமளவிற்குச் சினிமாவினால் ஆதிக்கம் செலுத்தப்படுவது ; தென்னிந்தியத் தமிழ்ச் சினிமா உருவாக்கியிருக்கும் பாற்புதுமையினர் பற்றிய சித்தரிப்புக்கள், கதாபாத்திர உருவாக்கங்கள், திருடர்களாகவும் பாலியல் தொழிலைச்செய்பவர்களாகவும் சமூகத்தில் இழி நிலையான காதாப்பாத்திரங்களாகவுமே பெரும்பான்மையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். வெகுசிலர் அதிலிருந்து மாற்றான கதாப்பாத்திரங்களை உருவாக்க முயற்சித்தாலும் பொது மனநிலையில் அவை மாற்றங்களை உருவாக்குவதில் பெரியளவு பங்களிப்பைச் செலுத்த முடியவில்லை.

இப்படியாக, அறிதலற்ற சமூக நிறுவனங்கள், கருத்துக்களைப்பரப்பும் ஊடகங்கள் , வெகுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாரியளவு பங்களிப்பைச் செலுத்தும் சினிமாக்கள் பாற்புதுமையினர் தொடர்பில் கொண்டிருக்கும் விளக்கங்களை நாம் மாற்றவேண்டியிருக்கிறது. அந்த மாற்றங்களை உருவாக்க, எந்தவொரு நியாயமான போராட்டத்திற்கும் இருக்கக் கூடிய அதே உரிமைகளும் அதே வழிமுறைகளும் தான் பொருந்திப்போகும்.

இந்தப்பயணத்தின் வழித்தடத்தில் இவ் ஆவணப்படமும் இன்றையநாள் நாம் நிகழ்த்தப்போகும் கலந்துரையாடலும் புதியதொரு உள்ளீட்டையும் சமூக ஏற்பிற்கான மனநிலையில் வளர்ச்சியையும் உண்டாக்க உதவ வேண்டும் என விரும்புகிறோம். அமைப்பாய்த்திரளும் பாற்புதுமையினரைப் பொதுச்சமூகம் பலப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச்சிக்கல்கள், வேலைப்பிரச்சனைகள், வாழ்வதற்கான இருப்பிடம், இடப்பெயர்வைத் தடுத்தல், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றிற்காக அனைவரும் இணைந்தே பயணிக்க முடியும். இப்பயணத்தின் வழி இறுக்கமான பிற்போக்கு நடைமுறைகளைக்கொண்ட நமது சமூகங்கள் தங்களுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கும் போது முற்போக்கானதும் அனைவருக்கும் சமத்துவத்தைக்கொண்டதுமான சமூக அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவை எங்களுடைய பார்வைகள், இன்னமும் இவை விரிவாக்கப்பட்டு குறைகள் விலக்கப்பட்டு பாற்புதுமையினர் பற்றிய அறிவு பொதுச்சமூகத்தில் விதைக்கப்பட வேண்டும்.

மூலம்: விதை-vithaihttps://www.facebook.com/607026622683610/posts/2609116115807974/

“நாங்களும் இருக்கிறம்” — ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும் — விதை குழுமம்

~*~*~

QCC Blog

இந்த வலைப்பதிவிலுள்ள கருத்துகளும், பார்வைகளும் அதனை எழுதியவர்களுடையதே. QCC -ன் கருத்துகளை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. The views and opinions expressed in this blog are those of the authors and do not necessarily reflect the position of QCC.

Queer Chennai Chronicles

Written by

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்

QCC Blog

QCC Blog

இந்த வலைப்பதிவிலுள்ள கருத்துகளும், பார்வைகளும் அதனை எழுதியவர்களுடையதே. QCC -ன் கருத்துகளை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. The views and opinions expressed in this blog are those of the authors and do not necessarily reflect the position of QCC.

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade