இலங்கையில் தட்டுப்பாடு, இந்தியாவில் அதிக உற்பத்தி! — கொரோனா கற்றுத்தந்த விவசாயப் பாடம்!

Suthaharan
Sparkwinn Research
Published in
4 min readJun 12, 2020

பசுமை விகடன் டீம்

கொரோனா கற்றுத்தந்த விவசாயப் பாடம்!

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற விவசாயப் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உலக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலைமை இலங்கை போன்ற நாடுகளில் உணவுத் தட்டுப்பாட்டையும் இந்தியாவில் அதிக உற்பத்தியால் உணவுகள் வீணாக்கப்படும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உணவு சமனற்ற சூழ்நிலை (Food Imbalance) உருவாகி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையே பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்குத்து விவசாயம்

இலங்கை தற்காலிகமாக இறக்குமதியைக் குறைத்து, உள்ளூரிலேயே உணவு தானியங்களை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளும்கூட ‘செங்குத்து விவசாயம்’ (Vertical Farming) முறை சார்ந்த தொழில்நுட்பத்தின் ஊடாக உற்பத்தியைப் பெருக்க வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான இறக்குமதி செய்யும் நாடுகள் இப்படியான நடைமுறை களையே கையாளுகின்றன. இதனால் ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பெருமளவிலான முதலீட்டினையும் தொழிலாளர் வளங்களையும் வைத்திருக்கும் இந்தியாவுக்கு, கொரோனா நோய்த்தொற்றும் ஏற்றுமதிக்கான மந்தநிலைமையும் மிகப் பெரிய நெருக்கடியாகவே இருக்கும்.

வீணாக்கப்படும் உணவு

உலக உணவு உற்பத்தி ஏற்கெனவே அதிகமாகத்தான் இருக்கிறது. ஏழு பில்லியன் மக்களுக்குத் தேவையான உணவுக்குப் பதிலாக 10 பில்லியன் (1.5 மடங்கு அதிகமாக) மக்களுக்குத் தேவையான உணவை உலகம் உற்பத்தி செய்கிறது. இதனால், ஏராளமான உணவு வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில்கூட 30–40% உணவு வியாபாரிகளிடம் சரியாகச் சேமித்து வைக்கக்கூடிய (Storage) வசதி இல்லாமையாலும் முறையான விநியோகம் இல்லாமையாலும் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன. இப்போது கொரோனா காரணமாகச் சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டு உணவுக்கான தேவை குறையும்போது, அதிக உற்பத்தி ஏற்பட்டு உணவுப் பொருள்கள் வீணாகும் நிலைமை அதிகரித்திருக்கிறது.

இறக்குமதியைக் குறைக்கும் நாடுகள்

இலங்கையில் விவசாயம் பெருமளவில் இறக்குமதியையே நம்பியிருக்கிறது. தேயிலை, ரப்பர், தெங்கு பொருள்கள், ஆடைத் தொழில் போன்ற ஏற்றுமதி வருமானம் தரும் அனைத்துத் தொழில் துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைந்திருக்கிறது. அது மேலும் சரிவடைந்தால், வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட இலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தைக் கொண்டுவரும். அதனால் இலங்கை அரசாங்கம் அத்தியாவசியமான பொருள்கள், மருந்துப் பொருள்கள் தவிர்த்த அனைத்துப் பொருள்களின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்துள்ளது.

ஒப்பீட்டு நன்மை கோட்பாடு

சர்வதேச வர்த்தகத்தில் ‘ஒப்பீட்டு நன்மை கோட்பாடு’ ஒன்று உண்டு. அதாவது, நமக்கு உற்பத்தி செய்வதற்கு எது வாய்ப்பானதோ, குறைந்த வளங்களுடன் எதை உற்பத்தி செய்ய முடியுமோ, அதை உற்பத்தி செய்துவிட்டு, மற்ற பொருள்களை உற்பத்தி செய்வதைவிட இறக்குமதி செய்வதே மலிவு என்றால், அதை இறக்குமதி செய்வதாகும்.

இலங்கையில் உளுந்து, பருப்பு, பயறு, கடலை, சிறுதானியங்கள் போன்ற பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சில தானியங்களை முந்தைய காலங்களில் உள்ளூரில் உற்பத்தி செய்த சூழல் இருந்தபோதும், இப்போது பெரும்பாலும் மலிவு என்ற காரணத்தால் இறக்குமதியே செய்யப்படுகிறது.

இப்போது இறக்குமதி தடைப்பட்ட காரணத்தால் இலங்கையில் 1 கிலோ உளுந்து 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலை, பயறு, மிளகாய் போன்ற பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலையும் அதிகரித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் தானியங்களையும், மிளகாய், இஞ்சி, மஞ்சள் போன்ற பொருள்களையும் உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே, கொரோனா வைரஸும் அதன் பின்விளைவுகளும் உலகமயமாக்கல் என்ற மையப்படுத்தப்பட்ட பொருளாதார முறைமையிலிருந்து நாடுகளை, உள்ளூர் உற்பத்தியை நோக்கி நகரச் செய்துள்ளது.

உள்ளூர் சந்தையிலிருந்து உலகச் சந்தைக்கு…

கணேஷ் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட ஒரு விவசாயி. கத்திரிக்காய், புடலங்காய், பாகற்காய் போன்ற விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார். அவரது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். முன்னர் எல்லாம் விளைவிக்கப்படும் பொருள்கள் பெரும்பாலும் உள்ளூர் சந்தையிலோ, பிற மாவட்ட சந்தையிலோதான் விற்பனையாகும். கடந்த பத்து பதினைந்து வருடங்களில் நடந்த மிகப் பெரிய மாற்றம், உள்ளூர் விவசாயப் பொருள்கள் உலகச் சந்தையில் விற்கக்கூடியதாக இருந்தது. இன்னொரு வகையில் சொல்வதென்றால், கிராமங்களின் தனிநபர் விவசாயம் உலகச் சந்தையின் கேள்விக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து முதலீட்டுடன்கூடிய பெரிய தொழில் முயற்சியாக மாறிவிட்டது.

கணேஷ், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான், ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட விவசாயியாக மாறினார். நன்முறை விவசாய உற்பத்தி (Good Agricultural Practise — GAP) என்ற முறை மூலமாக மரக்கறிகளை உற்பத்தி செய்து, அவற்றை வகைப் பிரித்து, வாங்குபவர்கள் கொடுக்கிற விலைக்கு ஏற்ப பொருள்களை உற்பத்தி செய்து கொடுப்பது என்பது, பெரிய முதலீட்டுடன் கவனமாகச் செய்ய வேண்டிய தொழில். அதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தையும் இயந்திரங்களையும், பயிற்சி பெற்ற தொழிலாளர்களையும் கொண்டு உற்பத்தி செய்வதற்கு பல வருடங்கள் ஆகின்றன. .கணேஷின் தோட்டத்தில் இப்போதெல்லாம் குறைந்தளவு நிலத்தில், குறைவான நீர்த்தேவையுடனே உற்பத்தி நடைபெறுகிறது. அதற்கேற்ற மாதிரி விளைதிறனும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இருந்தும் கடந்த ஒரு மாத காலமாக நிலவுகின்ற சூழல் காரணமாக எந்த ஏற்றுமதி நிறுவனமும் அவருடைய பொருள்களை வாங்கத் தயாராக இல்லை. அவருடைய உற்பத்தியில் ஒரு பகுதியை மிகக் குறைந்த விலைக்குத் தான் விற்க முடிகிறது. தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாததால் அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்யப்பட்டதை விநியோகம் செய்ய முடியாமலும் தேங்கி, வீணாகிக்கொண்டு இருக்கிறது. பொருளுக்கான தேவை தடைப்பட்ட நிலையில், ஏற்கெனவே விதைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுக்கு மட்டும் தேவை இருக்கும்போது, அதிக உற்பத்தியைக் குறைந்த விலைக்காவது சந்தைப்படுத்தக்கூடிய சூழ்நிலை உள்ளூர் சந்தையிலும் இல்லை என்னும் போது விவசாயிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

கணேஷ் மாதிரியே ஏற்றுமதியை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நினைத்த மாத்திரத்தில் உள்ளூர் சந்தைகளுக்காக உற்பத்தி செய்யவும் முடியாது. அவர்களது முதலீடுகளும் வளங்களும் ஏற்றுமதிக் காகவே தயார் செய்யப்பட்டு இருக்கிறது. திடீரென நிறுத்துவதோ, வேறு உற்பத்திக்கு மாறுவதோ மிகப்பெரிய சவால்தான்.

என்னதான் தீர்வு?

ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட விவசாயிகளும் நிறுவனங்களும், தேவை மற்றும் விநியோகத்தைச் சரியாகத் திட்டமிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். உலகச் சந்தையில் இருக்கும் தேவை என்ன, என்ன பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும், எவ்வளவு தொகையை ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்கும் என்பது போன்ற உடனுக்குடன் சந்தை பற்றிய தகவல்கள் அவர்களுக்குப் போய்ச் சேர்தல் வேண்டும். எல்லா விவசாயிகளும் சரியான தகவல் பொறிமுறையுடன் இயங்குவது கிடையாது. எனவே, அவர்கள் அடுத்த உற்பத்தி வட்டத்துக்குள் செல்வதற்குமுன்பே தகவல்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும். தவிரவும், உள்ளூர் உணவுப் பதப்படுத்தல் (ஊறுகாய், ஜாம் உற்பத்தி) போன்ற தொழில் துறைகளுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருள்களை நோக்கி தமது உற்பத்தியை மாற்றி அமைக்கலாம்.

இப்படியான நேரங்களில்தான் களஞ்சியப்படுத்தல் (storage) வசதிகளை அதிகப்படுத்துவது அவசியமானது. நீண்டகாலம் கிடங்குகளில் சேமித்து வைக்கக்கூடிய தானிய வகைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்தால், பின்னர் தேவை வரும்போது அதை விற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்

இந்தியா மிகப் பெரிய விவசாய நாடு. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். இந்தியாவின் தேசிய உற்பத்தியில் 16% விவசாயத் துறையிலிருந்து கிடைக்கிறது. அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி, காய்கறி, பால் போன்றவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்கிறது இந்தியா. அதில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு, நாட்டுக்கு வருமானமும் ஈட்டப்படுகிறது. தற்போது உலகம் சந்தித்திருக்கும் கொரோனா தொற்றால் உற்பத்தி தடைப்பட்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகமே தடைப்பட்டுச் சந்தைப்படுத்த முடியாதபோது விவசாயத் துறை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, உலகின் உணவுப் பாதுகாப்பே (Food Security) ஒரு கேள்விக்குறியாக மாறும்.

(கட்டுரையாளர் சுதாகரன் பேரம்பலம் சமூக பொருளாதார ஆய்வாளர். 10 வருடங்களுக்கும் மேல் உலகின் முன்னணி ஆய்வு நிறுவங்களின் பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்தவர். தற்போது கொழும்பில் ஸ்பார்க்வின் ரிசர்ச் (Sparkwinn Research) என்ற ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.)

Published in Pasumai Vikatan on: 10th June 2o20 https://www.vikatan.com/news/agriculture/how-corona-affected-farming-in-india

--

--