மக்களின் மாறும் நுகர்வு கலாசாரம்! — கொரோனாவுக்குப் பிறகு..!

Suthaharan
Sparkwinn Research
Published in
3 min readMay 17, 2020

கார் வாங்குதல், வீடு வாங்குதல், வெளிநாட்டு சுற்றுப்பயணம் போன்ற பெரிய செலவுகளை மக்கள் ஒத்திப் போடுவார்கள்! |Consumer’s …

உலகமெங்கும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது.
விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருக்கும்போது அடித்து ஆடும் பேட்ஸ்மேனின் மனநிலைபோல ஒருபக்கம் கொரோனா பரவிக்கொண்டிருக்க, ‘இதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது’ என்று உணரத் தொடங்கியிருக்கின்றன பல நாடுகளின் அரசாங்கங்கள். `என்ன நடந்தாலும் நடக்கட்டும், சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை நிமிரவைப்போம்’ என்று கிளம்பியிருக்கிறார்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்.

பெரு நிறுவனங்கள் கொரோனாவின் சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டு களத்தில் மீண்டும் இறங்கத் தொடங்கியிருக்கின்றன. பொருளாதாரம் இயங்க ஆரம்பிக்கும் நிலைமையைக் காலத்தின் அடிப்படையிலும், மக்கள் காட்டும் அக்கறையின் அடிப்படையிலும் மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது கட்டம், குறுகியகாலத்துக்குள் ‘மீளத் திறத்தல்’ (reopen) . அதாவது, மூடியிருக்கும் பள்ளிகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றைத் திறந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது. கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலத்தில் இருந்த இயல்புநிலை மறுபடியும் வரும் என்று எதிர்பார்க்கின்றன எஃப்.எம்.சி.ஜி மற்றும் சில்லறை விற்பனைத்துறை சார்ந்த நிறுவனங்கள். ஆனாலும், அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஃபேஷன், ஆட்டோமொபைல், என்டர்டெயின்மென்ட் போன்ற துறைகள் மீண்டும் சூடுபிடிக்க நீண்டகாலம் எடுக்கலாம்.

அடுத்தது, ‘மீளத் தொடங்குதல்’ (rebound) அதாவது, ஒக்ரோபர் — டிசம்பர் காலாண்டுக்குள் மீண்டும் மக்களைப் பழைய வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது. இந்த ஆண்டு முடிவதற்கு முன்னரே கொரோனா பயம் ஒருபக்கம் இருந்தாலும்கூட, மக்கள் மீண்டும் அவுட்டிங் போகவும், சினிமா பார்க்கவும், ஹோட்டல் களுக்குச் சென்று சாப்பிடவும் ஆரம்பிப்பார்கள். மக்கள் வெளியில் சென்று பலவற்றையும் வாங்க ஆரம்பிக்கும்போது வேறுபட்ட வியாபாரங்களும் இயங்கும்; பொருளாதாரச் சக்கரம் மறுபடியும் சுழல ஆரம்பிக்கும்.

இந்த வருடம் முடிந்து, 2021-ல் வணிகங்கள் ஓரளவுக்கு நிலைகொள்ளத் தொடங்கினால், கொரோனாவுக்குப் பின்னரான உலகத்துக்குத் தேவையான பொருள்களையும் சேவைகளையும் தொடர்ச்சியாக சப்ளை செய்து பழைய நுகர்வு கலாசாரத்தை மீண்டும் ‘மீள் உருவாக்கம்’ (Reinvent) செய்வதற்கு முயற்சி செய்யும். கொரோனா வந்த பிறகு உலகம் பலவிதங்களிலும் மாற்றம்கண்டு புதிய நடைமுறைக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னாலும்கூட, நம்மைச் சுற்றியிருக்கும் நிறுவனங்களுக்கும் பிராண்டுகளுக்கும் முன்பு இருந்த மாதிரி பணத்தை விரயம் செய்யும் நுகர்வோர்கள் தேவை. எனவே, மனிதர்களைச் செலவு செய்யவைக்க அவர்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். விளம்பரங்களுக்கு எக்கச்சக்கமாகச் செலவு செய்வார்கள்.

மேலே சொன்ன மூன்று காலகட்டங்களிலும், பெரும்பாலான நுகர்வோர் கொரோனாவுக்கு முந்தைய நுகர்வு நடத்தைகளுக்குப் படிப்படியாகத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் சில நுகர்வு நடத்தைகள் முற்றிலுமாக மாறி, புதிதான பொருள்கள் மற்றும் சேவைகளுக்குத் தேவை அதிகரிக்கும் என்று மார்க்கெட் ரிசர்ச் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்பது நுகர்வு கலாசார மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

1. மக்கள் மூடப்பட்ட இண்டோர் இடங்களை, நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு திறந்தவெளி அவுட்டோர் இடங்களைத் தேர்வு செய்வார்கள். சினிமாக்கள், மால்கள், ஹோட்டல்களுக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டு பார்க்குகள், பீச் போன்ற இடங்களில் நேரத்தைச் செலவு செய்ய விரும்புவார்கள்.

2. நுகர்வோர்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க விரும்புவார்கள்; சமூக இடைவெளிவிட்டுச் செயல்பட வேண்டியிருப்பதால் ஜிம், பார், கிளப் போன்றவற்றின் தேவை குறையும்.

3. தொட்டுச் செய்யும் பணப் பரிமாற்றங்கள் குறையும்; செல்போன், டெபிட் கார்டு, ஆன்லைன் சேவை மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பங்கள் வளரும்.

4. பேங்க் பரிமாற்றங்கள், மருத்துவச் சிகிச்சை, ஆபீஸ் மீட்டிங்குகள் போன்றவற்றுக்கு நேரடியாகச் செல்லாமல் ஆன்லைன் தொடர்புகொள்வது அதிகரிக்கும்.

5. நுகர்வோர்கள் அதிக தூரம் பயணிப்பதைத் தவிர்ப்பார்கள். சூப்பர் மார்க்கெட் செல்வதற்கு பதிலாக வீட்டுக்கு அருகிலிருக்கும் ஸ்டோருக்கும், மார்க்கெட்டுக்கும் செல்வார்கள்.

6.அத்தியாவசியத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தேவையில்லாமல் பணத்தை விரயம் செய்ய யோசிப்பார்கள். அதிகம் சேமிப்பார்கள்; அதன் காரணமாகவே தாங்கள் செய்யும் செலவுகளைச் சுய பரிசோதனை செய்துகொள்வார்கள்

7. சர்வதேச பிராண்டுகளுக்கு பதிலாக, உள்ளூர் பிராண்டுகளுக்கான மரியாதையும் தேவையும் அதிகரிக்கும்.

8. கார் வாங்குதல், வீடு வாங்குதல், வெளிநாட்டு சுற்றுப்பயணம் போன்ற பெரிய செலவுகளை ஒத்திப் போடுவார்கள். தேவையில்லாத கடன்களைத் தவிர்ப்பார்கள்.

9. உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தரும் பிராண்டுகளையும், அவை பற்றிய தகவல்களையும் அதிகம் தேடுவார்கள். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சானிடைஸர்கள், மாஸ்க், உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் போன்ற பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும்.

கொரோனாவுக்குப் பின்னரான உலகில் மக்களின் சிந்தனையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். வாழ்க்கை முறை, நுகர்வோரின் வருமானம், பொருள்களுக்கான தேவை மாறியிருக்கும். வாழ்க்கையை இலகுவாக்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை நோக்கி நுகர்வோர்கள் செல்வார்கள். அந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மாற்றிக்கொள்ளும் நிறுவனங்களுக்கும் பிராண்டுகளுக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

--

--