கத்தரிக்கோல்

அவனை நான் சிறுவனாக இருந்தகாலத்தில் இருந்தே இரசித்திருக்கின்றேன். ஒருவேளை நான் என்னை முழுமையாக அவனுக்கு அடையாளப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் அவன் வளர்ச்சியை இரசிக்கத் தவறியதில்லை. என்றும் அவனது முன்னேற்றத்தில் எனக்கு ஓர் கவனமும் அக்கறையும் இருந்துகொண்டே இருந்திருக்கிறது.

1988 அல்லது 1989 கள் இருக்கும் என்று நினைக்கின்றேன். அவனுக்கு ஒன்றோ ஒன்றறையோ வயசிருக்கும். அப்போதெல்லாம் முடிவெட்டும் தொழிலாழி எங்கள் வீட்டுக்கு வந்து முடிவெட்டுவதை வழக்கமாகக் கொண்டவர். அன்றும் அது போல தான், அவனுக்கு முடிவெட்டும் போது, அவனோ கத்திக் குளறி ஊரைக் கூப்பிட, முடிவெட்டுபவருக்கு உதவும் முகமாக நானும் எங்கள் வீட்டு அல்ஷேஷன் நாயை கூட்டிவந்து அவனுக்கு விளையாட்டுக்காட்டினேன்.

பொறிமுறை முடிதிருத்தி

பின்னைய காலங்களில், நாங்கள் எப்போதுமே ஒரே நாளில் முடிதிருத்தும் கடைக்குச் சென்று, ஒவ்வொருவராக முடிவெட்டுவது வழக்கம். 90 களின் ஆரம்பம் என்டு நினைக்கின்றேன். அப்போது அவனுக்கு ஒரு 6, 7 வயது இருக்கும். என்னுடைய முறை முடிந்து நான் கதிரையில் இருக்கிறேன். அவனுக்கு முடிவெட்டும் நேரம் வந்து திருத்துநர் கத்தரிக்கோலால் அவனது முடியை செதுக்கிக்கொண்டிருக்கிறார். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் பொறிமுறையில் அமைக்கப்பட்ட trimmer கள் மாத்திரமே பயன்படுத்தப் பட்டகாலத்தில், அவனுடைய பிரடி முடியை சரிசெய்யும் போது அவனுக்கு ஏற்பட்ட கூச்சத்தால் முடிவெட்டுநருடன் முறண்டுபிடித்து அவரை ஒழுங்காக வேலைசெய்யவிடாமல் அப்பாவிடம் நெக்குப் பெற்று அழுதுகொண்டே முடிவெட்டினான்.

அதற்குப்பின்னைய காலத்தில் கூட,நாம் எல்லாம் தனித்தனியே கடைக்குச் சென்று முடிவெட்ட ஆரம்பித்த பின்னர், ஒரு முறை தானாக கடைக்குச் சென்று முடிவெட்டிய பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்க முன்பக்கத்தால் கொஞ்சம் அதிகமாக முடி வெட்டாமல் விட்டிருப்பதைக் கண்டு ஐயையோ அப்பா திட்டப்போகிறாரே என்ற பயத்தால் தானே கத்தரிக்கோல் எடுத்து தன் முன்பக்கத்து முடியைக் கத்தரிக்கத் தெரியாமல் கத்தரித்து விட, அது முன்பக்கத்து தலையை அசிங்கப்படுத்தி எலி அரித்தது போல் ஆகி எங்கள் எல்லோராலும் நகைப்புக்குள்ளான போதும் நான் அவனை கவனித்துக்கொண்டே இருந்தேன்.

காலங்கள் பல ஓட, அவனும் வளர்ந்து, இன்று அவன் மாதத்துக்கு இரு தடவையோ மூன்று தடவையோ முடிவெட்டச் செல்கின்றான். புதிதாக வரும் எல்லா நாகரீக மாற்றங்க்களையும் தன் தலையில் வைத்து அழகு பார்க்கின்றா. இப்போதும் நான் இரசித்துக் கொண்டிருக்கிறேன் அவனை.

மாற்றங்களும் மாறுதல்களும் எவ்வாறெல்லாம் தங்கள் வழியில் நடைபயில்கின்றன என்று எண்ணிப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது. எம் வாழ்க்கைச் சக்கரம் எப்படியெல்லாம் சுழன்றுகொண்டிருக்கிறது என்று எண்ணும் போது முன்னைய சில நிகழ்வுகள் கண்முன்னே நிழலாடிச் சேல்கின்றது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிங்கபூரில் உள்ள ஒரு முடிவெட்டும் கடைக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தாய், தனது குழந்தைக்கு முடிவெட்ட வந்திருந்தார்; கூடவே தந்தையும் முடிவெட்ட வந்திருந்தார். கிட்டத்தட்ட ஏழுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முடிவெட்டிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் எல்லோரையும் நெறிப்படுத்தி வரிசையாக வந்த வாடிக்கையாளர்களை ஒவ்வொருவரிடமும் அனுப்பிக்கொண்டிருந்தார். வரிசைப் பிரகாரம் அந்தக் குழந்தையின் முறை வர, குறித்த முடி திருத்தினரோ நான் குழந்தைக்கு முடி வெட்டமாட்டேன், குழந்தை அழும் என்றார். உடனே நெறிப்படுத்திக்கொண்டிருந்தவரும், அடுத்ததாக வரிசையில் இருந்தவரை அந்த முடிதிருத்துபவரிடம் அனுப்பினார். அடுத்து குழந்தையின் தந்தையின் முறை வர அவரும் ஒரு முடி திருத்தினரிடம் அனுப்பப்பட்டார். உடனே அந்தக் குழந்தையும் தனது இருக்கையில் இருந்து எழுந்து தந்தைக்கு அருகே சென்று விளையாட ஆரம்பித்தது. தாய் தடுக்க முயலவும், தடுக்க வேண்டாம்… அவனை விளையாட விடச்சொல்லியும் அப்போது தான் குழந்தையின் பயன் தெளியும் எனவும் சொன்னார்கள்……

இந்த நிகழ்வு என்னை சிலகாலம் பின்னால் கொண்டு சென்றது.

--

--