Coin ஆல்-இன்–ஆல் கார்ட்!


சொந்தப் பயன்பாட்டுக்கு ஒன்று, ஆஃபீஸுக்கு ஒன்று எனத் தொடங்கி ஏழெட்டு கிரெடிட் கார்ட்களைப் பாக்கெட்டில் சுமந்துகொண்டு திரிகிற பேர்வழியா நீங்கள்? எப்போது எதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் திணறுகிறவரா? கார்ட்களைச் சேர்த்துச் சேர்த்து பர்ஸ் குண்டாகிவிட்டதே என்று தவிக்கிறவரா?

கவலை வேண்டாம். உங்களுடைய பர்ஸுக்கு ஒரு டயட் ப்ளான், ”COIN” என்கிற ஆல்-இன்–ஆல் கார்ட். வெறும் .844 மில்லிமீட்டர் தடிமனில் உங்களுடைய எல்லா கார்ட்களையும் நிரப்பிவிடலாம்.

இது எப்படி சாத்தியம்?

  • உங்களிடம் உள்ள ஒவ்வொரு கார்டையும் எடுங்கள், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், கிஃப்ட் கார்ட்… எல்லாம்!
  • ”காயின்” கார்ட் உடன் வரும் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் நிறுவிக்கொள்ளுங்கள். அதே ஃபோனில் உள்ள ஆடியோ ஜாக் வழியாக ஒரு விசேஷ கருவியைப் பொருத்துங்கள்
  • ஒவ்வொரு கார்டாக அதில் Swipe செய்யுங்கள், அந்தக் கார்டை ஒரு ஃபோட்டோ எடுங்கள், அதற்கு ஒரு பெயர் தாருங்கள்
  • இப்படி எல்லா கார்ட்களையும் Swipe செய்தபிறகு, உங்களுடைய Coin Cardஐமட்டும் பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். மற்ற கார்ட்களை ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள ஒரு கிளியின் கழுத்தில் தொங்கவிட்டுவிடலாம்!
  • ஆமாம், இனிமேல் உங்களுக்கு அந்த கார்ட்கள் தேவையில்லை. காயின் கார்ட்மட்டும் போதும்!
  • உதாரணமாக, நீங்கள் சூப்பர் மார்க்கெட் சென்று சில மளிகை சாமான்கள் வாங்குகிறீர்கள், அதற்கு உங்கள் பர்ஸனல் க்ரெடிட் கார்டில் பணம் செலுத்தவேண்டும்
  • உடனே, உங்கள் காயின் கார்டை எடுத்து, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தி “Personal Card” என்பதைத் தேர்ந்தெடுங்கள். வழக்கம்போல் அதை ஸ்வைப் செய்யுங்கள், உடனே உங்கள் பர்ஸனல் கார்டிலிருந்து பணம் செல்லும்
  • சில நிமிடங்கள் கழித்து, அலுவலக விஷயமாக ஒருவரைச் சந்தித்து காபி சாப்பிடுகிறீர்கள், அதற்கு கம்பெனி கார்டிலிருந்து பணம் செலுத்தவேண்டும்
  • மறுபடி அதே காயின் கார்ட், அதே பொத்தான், ஆனால் இப்போது “Office Card” என்பதைத் தேர்ந்தெடுங்கள். வழக்கம்போல் அதை ஸ்வைப் செய்யுங்கள், உடனே உங்கள் அலுவலகக் கார்டிலிருந்து பணம் செல்லும்
  • இப்படி ஒரு கார்டில் எத்தனை கார்ட்களையும் வைத்துக்கொள்ளலாம், பயன்படுத்தலாம், மிகவும் சவுகர்யம்!
  • ஒருவேளை நீங்கள் கார்டை எங்கேயாவது மறந்து வைத்துவிட்டால், உங்கள் மொபைல் ஃபோன் அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தும், உடனே சென்று எடுத்துக்கொள்ளாவிட்டால் கார்டைத் தானாகச் செயலிழக்கவைத்துவிடும். பாதுகாப்பு அதிகம்!

Email me when Tamil News publishes stories