இந்தியாவின் செவ்வாய்ப் பயணம் — மங்கள்யான்


இந்தியா செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் விண்வெளிக்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ‘மங்கள்யான்’ (வடமொழியில் ‘செவ்வாய்க் கிரகம் செல்லும் வாகனம்’) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் அடுத்த 300 நாள்களில் 78 கோடி கிலோமீட்டர்களைக் கடந்து செவ்வாய்க் கிரகத்தை நெருங்கி ஆய்வுகளை நிகழ்த்தும்.

செவ்வாய்க் கிரகத்தின் வானிலை, அங்குள்ள தண்ணீரின் அளவு, அங்கே மீத்தேன் கிடைக்கிறதா போன்ற பல விஷயங்களை இந்த விண்கலம் கண்டுபிடிக்கும், இதன்மூலம் புதிய கிரகங்கள் எப்படி உருவாகின்றன, உயிர்கள் எப்படி வாழ்கின்றன, பிரபஞ்சத்தில் வேறு எங்கெல்லாம் அவை இருக்கலாம் என்று ஏராளமானவற்றை நாம் ஆராய்ந்து அறியலாம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த விண்கலம் ஏவப்பட்டபோது, பல நூறு மக்கள் இந்தியாவின் இந்த விண்வெளித்துறை முன்னேற்றத்தை நேரில் பார்த்தார்கள். லட்சக்கணக்கானோர் இதனைத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின்வழியே கண்டு மகிழ்ந்தார்கள்.

இந்தியாவின் செவ்வாய்ப் பயணம் வெற்றியடைந்தால், உலகிலேயே இதைச் சாதிக்கும் நான்காவது நாடு என்கிற பெருமை கிடைக்கும். ‘இந்தியாவின் இளம் தலைமுறைக்கு இது ஒரு மிகப் பெரிய ஊக்கமாக அமையும்’ என்றார் இதன் தலைவர் பி. குன்ஹிகிருஷ்ணன். ‘இது எங்கள் குழுவின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி’ என்றார் விண்வெளி ஆய்வகத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன்.

ஏவப்பட்ட 44வது நிமிடத்தில், ராக்கெட்டிலிருந்து விண்கலம் பிரிந்து பூமியைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையில் இணைந்தது. அடுத்த இருபது முதல் இருபத்தைந்து நாள்களுக்கு இந்த விண்கலம் படிப்படியாக மேலேறி, செவ்வாய்க் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும்.

’இந்த விண்கலத்தைக் கச்சிதமாகச் செலுத்துவது மிகப் பெரிய தொழில்நுட்ப சவால். படிப்படியாக முன்னேறிச் செல்லவேண்டும், முழு வெற்றிக்குப் பல மாதங்கள் ஆகும்’ என்றார் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன். ‘நாங்கள் இந்தப் பரீட்சையில் தேறுவோமா என்பது 2014 செப்டம்பர் 24ம் தேதி தெரியும்!’

அது சரி, இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டுக்கு இதுமாதிரி காஸ்ட்லி (72 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பயணமெல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்களே!

நியாயமான கேள்விதான். ஆனால், இதன்மூலம் நம் நாட்டுக்கும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பல நன்மைகள் உண்டு. இதுவரை நாம் செய்துள்ள விண்வெளி ஆராய்ச்சிகளின் பலனைக் கண்ணெதிரே பார்க்கிறோமே!

‘அதுமட்டுமில்லை, இது ஒரு பெருமைக்குரிய விஷயம்’ என்கிறார் டெல்லியில் உள்ள Amateur Astronomers Associationனைச் சேர்ந்த ரகு கல்ரா, ‘இன்னொரு கிரகத்துக்கு விண்கலம் செலுத்துமளவு நம் நாடு தொழில்நுட்ப அளவில் முன்னேறியுள்ளது என்று தெரியும்போது, எல்லாரும் பெருமிதமாக உணர்வார்கள். இதை இன்னும் மேம்படுத்தவேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்!’

Email me when Tamil News publishes stories