எப்போது எழுதுவது?

Tharique Azeez
Tamil Writing
Published in
2 min readMar 26, 2015

எழுவது எனக்குப் பிடிக்கும். “முட்களுக்கு முத்தம் கொடுத்து, ரத்தம் சிந்துகின்ற சுவை அது” என்று எழுதுவதைப் பற்றி எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதை ஒரு தியானமென எண்ணுபவன். அது தியானமானதாக இருப்பதை எழுதும் போதெல்லாம் உணர்பவன்.

சிந்தனையை ஒருநிலைப்படுத்துகின்ற ஆற்றலும், தொடர்ச்சியான சொற்சங்கிலி கொண்டு, அர்த்தம் கொண்ட வாக்கியங்களை உருவாக்கின்ற சக்தியும், இந்த எழுத்துக்களால் சாத்தியமாகிறது.

ஆனால், எழுதத் தொடங்குகின்ற தருணங்களை வரவழைத்துக் கொள்வது பற்றி, எழுத்துலகில் பலரும் பலவாறான அபிப்பிராயங்களை கொண்டுள்ளனர். “என்னை நீ கொண்டால், உன்னால் எழுத முடியும்” என்றவாறான மாயஜால அமைப்புநிலை என்பது எங்கும் இருப்பதாக நானறியேன். அப்படியிருக்கவும் முடியாது.

ஆக, நான் எழுதினால் மாத்திரந்தான் இங்கு என் எழுத்துக்களுக்கு வடிவம் கிடைக்கிறது. அவை அர்த்தங்களையும் பூசிக் கொள்கிறது.

ஒருவனின் கற்பனை பற்றிய மதிப்பீடுகளில் குறைகள் இருப்பதாக புரிந்து கொள்ள முடியாது. இங்கு எழுதுவதைத் தொடங்குவது பற்றிய பயமே தொக்கி நிற்கிறது.

சென்ற வாரம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பற்றி எழுதுவதா? இல்லை. சூரிய கிரகணத்தை எல்லோரும் செய்திகளில் பார்த்திருப்பார்கள். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் பற்றி, எழுதுவதா? அட, அதுதானே எல்லோரும் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயங்களைப் பற்றி எழுதப் போனால், சுவாரஸ்யங்கள் வழங்கப்படாமல் போய்விடுமோ என்கின்ற எண்ணம் தோன்றுகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயங்களைப் பற்றி எமது பொதுவான அனுபவத்தைச் சொல்லப்போய், அதை யாராவது வாசிக்க ஆர்வங் காட்டுவார்களோ என்கின்ற பயம் எழுதுவதை ஒத்திவைக்கிறது.

உண்மையில் இது பற்றிக் கவலைப்படத்தான் வேண்டுமா?

நாம் எழுதுவது எடுபடுமா? என்ற சந்தேகம், எதையுமே எழுதாமல் எம்மைத் தடுக்கிறதாயின், இந்தப் பொறிமுறையில் பெரியதொரு வழு இருக்கிறது. எதையுமே எழுதாமல், எழுதவே தொடங்காமல், எடுபடுமா? என்ற கேள்வியா?

எழுதுவதெல்லாமே, இலக்கியங்களாவதுமில்லை; இதிகாசங்களாவதுமில்லை என்பது எவ்வளவு உண்மையானதோ, அதேபோலதான், எழுதப்படுகின்றவை மட்டுந்தான் இலக்கியங்களாகவோ, இதிகாசங்களாகவே உருவெடுக்க முடியும் என்பதும் மிகப் பெரிய உண்மையாகும்.

நாம் தொடங்குவதில்லை என்பதுதான் இங்குள்ள பிரச்சனை. அதன் இன்னொரு வடிவம், தொடங்கிய எழுத்தை முடிப்பதில்லை என்பதாய் தோற்றமும் கொள்கிறது. முதலில் எழுதத் தொடங்க வேண்டும் — நாம் எழுதுவதெல்லாம் அங்கீகாரம் பெறுமோ, அல்லது யாராவது வாசிப்பார்களோ, என்ற கேள்விகளெல்லாம் எதற்கு, முதலில் எழுத வேண்டும் என்பது பிரதானமாகும். ஏனையவை யாவும் மூன்றாம் பட்சமே.

நீங்கள் இந்த எழுத்துக்களை வாசிக்கிறீர்கள் என்றால், அவை என்னால் எழுதப்பட்டவை. அவை எழுதப்படும் போது, நீங்கள் வாசிப்பீர்கள் என்று நானோ, இந்த எழுத்துக்களோ ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. ஆக, நீங்கள் அவற்றை வாசிக்கிறீர்கள். அது போலத்தான், உங்கள் எழுத்துக்களும் வாசிக்கப்படலாம்.

வெறும், இது வாசிக்கப்படுமோ, இது எடுபடுமோ என்ற பொருத்தமற்ற சந்தேகங்களின் மூலம், எமது சொற்களை மெளனிக்கச் செய்வதை எப்படி அனுமதிப்பது?

எழுதிக் கொண்டிருக்கின்ற போது, அதன் எழில் நிலைகள் அடிக்கடி எட்டிப் பார்க்கும்; பின்னர் தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து கொண்டு துணைக்கு வரும்.

கத்தரிக்காய் ஒவ்வாமை தரும் என்பதற்காக, உலகளவில் கத்தரிக்காய் விதைகளை நடக்கூடாதென சட்டமில்லை. கத்தரிக்காய் ஒரு அற்புதமான மரக்கறி. அதனை புஷிப்பவர்கள்: விரும்புவார்கள்.

கத்தரிக்காய் விதைகளை விதைப்பதனால், தோன்றப்போகும் கத்தரிகள் யாவும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. நல்ல நிலையான கத்தரிகள் விரும்பி வாங்கப்படும். ஆனாலும், விதைக்காத கத்தரி விதைகள் கொண்டு, எந்த கத்தரிச் செடியும் உருவாகப் போவதில்லை.

விதையை விதைத்தலின் பலனாகவே, விளைவுகள் தோன்றுகிறது. எழுதுவதன் பலனாகவே, இங்கே எண்ணங்கள் பகிரப்படுகிறது; சேமிக்கப்படுகிறது. எழுதினால் மாத்திரந்தான் அவை பகிரப்படலாம்; நட்டால் மாத்திரம் உருவாகின்ற கத்தரிச் செடி போல.

போய் எழுதுங்கள். வெறுமனே, சுவாரஸ்யமான விடயமொன்று இருப்பதாக எண்ணுகின்ற சந்தர்ப்பத்திலோ, இதை எழுதினால் எடுபடும் என்ற நம்பிக்கை கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்ல. இப்போதே எழுதுங்கள். போய் இப்போதே எழுதுங்கள்.

பேனாவையோ, பென்சிலையோ கொண்டு, இப்போதே எழுதுங்கள். கடதாசியில் எழுதுகின்ற நிலையில் தோன்றுகின்ற பலன்கள், கணினியில் எழுதுவதால் தோன்றுகின்ற பலன்களிலும், பலமடங்கானதென ஆய்வுகள் சொல்கிறது.

எங்கே அந்தக் கடதாசி? இப்போதே எழுதுங்கள்.

— தாரிக் அஸீஸ்

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். ☺ நான் இங்கே — Follow @enathu

Originally published at niram.me on March 26, 2015.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.