மொழிபெயர்க்க முடியாத மௌனம்

இங்கு உன்னைத் தவிர, எல்லாமுமே இரைச்சலாக இருக்கின்றன.

Tharique Azeez
Tamil Writing

--

காரணங்கள் எதுவுமே இல்லாமல் வலிகள் தரும் வேதனையை நாம் தனிமையில் மட்டும் தான் உணர முடியும். தனிமைக்கு அழகு உண்டு. வலிகளை வலிமைகளாக்கும் திறனும் உண்டு. வாழ்க்கையின் அர்த்தங்களை ஆழ்மனதின் விருப்புக்களுடன் சேர்த்து அறிந்து கொள்ளச் செய்யும் ஊடகம் தான் தனிமை என நான் சொல்வேன்.

“கூட்டமாக இருக்கும் நிலையில் உன் பேச்சிலும், தனிமையாக இருக்கும் நிலையில் உன் சிந்தனையிலும் கவனமாக இரு” என பிரபல்யமான கூற்றொன்று உள்ளது. தனிமையின் வலிமையைச் சொல்ல இந்தக் கூற்று ஒன்றே போதும். தனிமை எப்போதும் வலிகளை வழங்குவதற்காக வருவதில்லை. அது வலிமைகளை பெற்றுக்கொள்வதற்காய் தொடர்கிறது.

அதிகமானோர் தனிமையில் இருப்பதை விரும்புவதேயில்லை. அது தரும் வலிகளை தாங்க அவர்களுக்கு விருப்பமில்லை. ஆனால், இந்த வலிகள் தரும் அர்த்தங்கள், வாழ்க்கையின் பாடங்கள் என்பனவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அவர்கள் இழந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் இருக்கும் நிலைக்குள் வந்து விடுகிறான். தனிமை அர்த்தமுள்ளது. அர்த்தப்படுத்தப் பட வேண்டியது.
அண்மையில் எனது Facebook நண்பர்களில் பலரும் “தனிமையின் கொடூரம்” என்று தங்கள் Status இல் செய்தி தெரிவித்திருந்தார்கள். தனிமை அப்படி கொடுமையானது தானா? என நான் எண்ணலானேன். தோன்றியது இப்பதிவு.

தனிமையில் விருப்பம்

நீங்கள் தனிமையாக இருக்க விரும்புவீர்களா? உங்கள் மனதின் நீளம் புரிவதற்கு நீங்கள் தனிமையை சில நேரம் தேடிக்கூடச் சென்றிருக்கலாம். காரணம், நீங்கள் மெளனத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ஆத்மாவுடன் ஆறுதலாகக் கதைக்கும் நேரத்தை தேடியிருப்பீர்கள். தனிமை — அதுவொரு இனிமை.

“தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்று தொடர்ந்து செல்லும் அற்புதமான பாடலொன்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அந்தப்பாடலில் வரும் வரிகள் அர்த்தமானவை.

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

அதுபோலத்தான் தனிமையிருந்தால் அங்கு மெளனமிருக்கும், ஆகவது தனிமையில்லை. மெளனமே மகத்துவம். தனிமைக்கு அர்த்தம் கொடுக்க தேவையில்லை. தனிமை எமது வாழ்விற்கு அர்த்தத்தை வழங்க நிற்கிறது.
மெளனம் என்பது தனிமையால் பெற்றுக் கொண்ட பேறாகவே இருக்கிறது. மெளனம் தான் மகிழ்ச்சிக்கான ஊக்கி. செளக்கியத்திற்கான வேர். அனுபவிக்கப்பட வேண்டியது. வாழ்க்கையில் நாம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் பல உன்னதமான விடயங்களுக்குள் மெளனமும் அடங்கும். ஆனாலும், சத்தமே எமக்குத் துணை என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டவர்கள் பற்றி என்ன சொல்வது? மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு.

மெளனம் — பிரபஞ்ச மொழி

மொழிகள் தான் எண்ணங்களின் வலிமை பற்றி இன்னொருவருக்குச் சொல்லும் ஊடகம். எண்ணங்களின் அழகிய கோணங்கள் மொழியின் தயவில் தான் தோற்றம் பெறுகின்றன. மெளனமென்ற நிலைக்கு வேறொரு மொழியும் வேண்டாம். அதுவே மொழியாகும். அதுவொரு பிரபஞ்ச பாஷை.

மெளனம், தன்னகம் கொண்டுள்ள அலாதியான சக்தி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்தி மாலைப் பொழுதில் கதிரவன் மறைந்து பின்னர், மறு நாள் காலை கதிரவன் உதிக்கும் காட்சிக்கு அழகிருப்பது போன்றே அந்தத் தருணத்திற்கு மெளனம் வலிமை சேர்க்கிறது.

இருண்ட இரவொன்றில் பனிவிழும் அழகு அற்புதம். மெளனம் தான் அதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது. பனிவிழும் நிலையில் சத்தம் கேட்பதில்லை. கேட்டிருந்தால், காற்றிற்கு அதன் மெளனம் பிடிக்கவில்லை என்றே அர்த்தம். மெளனம் அழகே!

ஆனால், மெளனம் அழகாக இருந்தாலும், அளவோடு இருக்க வேண்டும். பனிவிழும் நிலையை நாம் கற்பனை செய்து கொள்வோம். கொஞ்சம் பனிவிழுந்தால், அந்தப் பரப்பில் அழகிய பரவசமான தோற்றம் காட்சியாகும். ஆனால், அளவுக்கதிகமாய் மெளனமாக பனிவிழுமானால், அழிவைத்தான் கொண்டு வரும். அளவோடு செய்வதில் தான் அற்புதம் உண்டு. அழகு அதன் உறவு.

மெளனத்தை யாரும் மொழிபெயர்க்க முடியுமென்றால் அது கடலுக்குள் உப்பைக் கலப்பது போன்று அமையுமென்றே நான் சொல்வேன். மெளனம் — மொழிபெயர்க்க முடியாததொன்று. அவ்வாறு முடிந்தாலும் முற்றுப் பெறாததொன்று.

மெளனம் கொண்ட நிலையில் நாம் தனிமையை எதிர்பார்க்கலாம். அது போலவே, தனிமையும் மெளனத்தின் இணை பிரியா தோழன் தான். எமது எண்ணங்களில் அழகிய நிலை, தனிமையில் நாம் கொள்ளும் மெளனத்தின் அர்த்தத்தில் தான் வலிமை கொள்கிறது.

நிம்மதியாக எண்ணங்களை நாம் எம்மகம் கொண்டால் மாத்திரமே, நிம்மதியாக வாழ்வதற்கான வழி பிறக்கும். எமது பலவீனங்கள் பற்றியதான விடயங்களில் மெளனம் என்ற வலிமையோடு எண்ணத் தொடங்கினால், பலமாக்கிவிட வழி தோன்றும்.

மெளனம், சங்கையான எண்ணங்களின் கோயில். தினமும் கொஞ்ச நேரமாவது, மெளனமெனும் கோயில் சென்று இயற்கையின் முணுமுணுப்புகளையும் மகிழ்ச்சியின் வருடலையும் உணர முயற்சிக்க வேண்டும்.

இயற்கையை வாசிப்பதும், அதன் காரணமாய் சுவாசிப்பதும் மகிழ்ச்சியான நிமிடங்களைப் பெற்றுத் தரும் வழிகள்.

மெளனத்தின் ஒலி புதுமை! அது சொல்லும் அர்த்தம் வலிமை! தனிமைக்கு மெளனமே இனிமை!

இன்னும் பதிவுகள் நிறத்தில் இருக்கின்றன.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.