கடதாசிப் பெண்

Tharique Azeez
Tamil Writing
Published in
2 min readJan 20, 2015

அதுவொரு காலம், அங்கு எல்லாமுமே இருக்கவில்லை. ஆனால் இருந்த எல்லாமுமே வாழ்ந்து கொண்டிருந்தன. அங்கு எல்லோருக்கும் முகவரி இருந்தது. யாரும் மற்றவரின் முகவரியைக் கண்டு குழம்பவுமில்லை, அந்த முகவரியாக தான் மாற வேண்டுமென்ற பேதமையை கொண்டிருக்கவுமில்லை.

அங்குதான் அவள் வாழ்ந்தாள். அவள் கடதாசியால் உருவானவள். அவளின் வாழ்விடங்கள் எல்லாமே, வசந்தமாயிருக்கக் கனவு காண்பவள். கடதாசியின் மடிப்புகளாய், முதுகெலும்பு தோன்றி, அவளின் தோற்றத்திற்கு எழில் சேர்த்தது.

தனது தோல்களெல்லாம், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பாள். அவளின் மென்மையின் வசீகரத்தை அந்தத் தோல்களில் பூத்த சொற்கள் சொல்லிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவளுக்கு, மழை பற்றிய அதீத பயம் இருந்தது.

மழையே வரக்கூடாது, என்று ஏங்குமவள், மழைக்குப் பயந்து, தன்னை சின்னச் சின்ன இடங்களுக்குள் மறைத்து வைத்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.

மழையால் தன் தேகம் கரைந்து, சிதைந்து தொலைந்து போய்விடும் என்றும், தன் தோலில் சேமித்த சொற்கள் யாவும் மறைந்து போய்விடும் என்றும் அவள் மனதிற்குள் பயத்தை மூட்டை கட்டி வைத்திருந்தாள். ஆதலால், அவளின் கைகளை மடித்து, உடம்பையும் முறித்து, தன்னை மழை காணாத இடத்தில் ஒழித்து வைத்திருந்தாள்.

மழை வராக்கூடாது என்ற ஆசையின் தொடக்கத்தில், மேகங்களின் ஆதிக்கத்தின் முடிவே முதன்மை என்பதை உணர்ந்தவள், மேகத்தோடு பேசுவதாய் தன் உடம்பெல்லாம் எழுதிக் கொள்வாள். ஒளித்திருந்து, அவள் எழுதும் மேகப்பாடலைக் கேட்க மேகத்தால் எப்படி முடியும்?

ஆனாலும், ஒரு நாள், அவளை மரங்களை வாசிப்பவனும், கடல்களை நேசிப்பவனுமாகிய ஒரு இளைஞன் சந்திந்தான். அவனின், வாழ்க்கை பற்றிய வசீகரமான அமைவுகளில் கடதாசிப் பெண் தொலைந்து போனாள்.

அவன், கடல்களை நேசித்துச் சொல்லும் கவிதைகளை, ஒவ்வொரு சொல்லாக தன் தோலில் சேகரிக்கத் தொடங்கினாள், கனவுகளை ஆராதிக்கும் அந்தக் கடதாசிப் பெண். மரங்களை வாசிக்கின்ற அவனின் ஆர்வத்தின் தொடக்கம் தான், தனது தொடக்கத்தின் ஆர்வமென நம்பியிருந்தாள் அவள்.

அவனில் ஈர்க்கப்பட்டவள், அவனே எல்லாம் என நினைக்கத் தொடங்கினாள். அவனும் அவளால் வசீகரிக்கப்பட்டான்.

அவள், மழைக்குப் பயந்து ஒளித்திருந்த இடம்விட்டு, அவனோடு சேர்ந்து காணாத உலகத்தைக் காணப்புறப்பட்டாள். செல்லும் வழியில், புற்களின் பசுமை அவளின் பாதங்களோடு தோழமை பேசியது. வானமும் இருட்டியது, மழையும் பெய்யத் தொடங்கியது.

அப்போது, அவள் மழைக்குப் பயந்து ஓடவில்லை. மழையின் தாரைகள், அவள் முகத்தில் விழ, விழ அவள் கண்களிலிருந்து சொற்கள் கரைந்து ஆனந்தக் கண்ணீராய் வடிந்து கொண்டிருந்தது.

அவள் ஒரு துளியேனும் வருத்தப்படவில்லை. மழையின் வருகையால், ஈரமாய் நொருங்கிப் போன தன் உடலின் நிலை கண்டு அவளுக்கு, கவலையும் தோன்றவில்லை. அவளோடு, கடலை நேசித்து, மரங்களை வாசிக்கின்றவன் இருக்கின்றான் என்ற ஆறுதல் அவளுக்கு இருந்தது.

தோல்களெல்லாம் அவள் எழுதிய சொற்கள் சொன்ன செய்திகளை விட, மழையின் வருகையால், இப்போது அனுபவிக்கின்ற வாழ்வின் அனுபவம் அவளை ஈர்த்திருந்தது. மழை பற்றிய பயம் அவளிடம் அகன்றிருப்பதை கண்டிருந்தாள்.

நிறைவில், அவள் கதையின் கதாநாயகன், மரங்களை வாசிக்கின்ற கதாநாயகன் அல்ல — துணிச்சலோடு வாழ்வை சந்திக்கத் துணிந்த கதாநாயகி தான், அவளின் கதையின் கதாநாயகன்.

(யாவும் கற்பனையே)

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். ☺ நான் இங்கே — Follow @enathu

Originally published at niram.wordpress.com on July 20, 2014.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.