வாழத் தெரிதல்

Tharique Azeez
Tamil Writing
Published in
2 min readDec 11, 2014

நீ வாழ்க்கையை ஒரு பிரசினமாகவும், அதனைத் தீர்ப்பதில்தான் வாழ்க்கை உயிர்ப்புக் கொள்கிறது எனவும் எண்ணிக் கொண்டு, காரியங்கள் செய்கிறாய். வாழ்க்கை உண்மையில், பிரசினங்களைத் தீர்க்கும் அமைப்பா? கொஞ்சம் யோசி.

பிரசினங்களைத் தீர்ப்பதான வாழ்வின் ஏற்பாடு எல்லாம், நீ, உன் மனத்தை தொலைத்து நடந்து கொள்கின்றதான விடயமாகும். நீ பிரசினம் என நம்பி, அதனைத் தீர்க்க நினைக்கின்ற போது, வாழ்க்கை கடந்து போயிருக்கும்.

வாழ்க்கை ரம்மியமானது. அனுபவங்களின் மூலம் ஆக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பாதையில் தோன்றும் அனுபவங்களை அரவணைத்துக் கொண்டு, அதன் மூலம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதுதான், உன் பணியாக இருக்க வேண்டும்.

ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாமே, உனக்குக் காட்டுவது, வாழ்க்கையின் நெறியாள்கை செய்யப்பட்ட, ஒரு பகுதியை மாத்திரம்தான். அந்த ஊடக ஏற்பாட்டின் மூச்சு, வணிகத்தின் வாசமாகும்.

நீ, அவற்றைக் கண்டு, வாழ்க்கையை இலகுவானதென்றோ, கடினமானதென்றோ நம்பிவிடக்கூடாது. செளகரியம் தரும் விடயங்கள், சௌகரியம் தரும் தருணங்கள், குழப்பம் தரும் மனநிலை, சந்தோசம் மிகும் உள்ளத்தின் எல்லை என வாழ்க்கைக்கு முகங்கள், பல.

அந்த வாழ்க்கையை அப்படியே, அனுபவிப்பதுதான், உன் வாழ்க்கையின் முகவரி. நீ காண்கின்ற, உனக்கு காண்பிக்கப்படுகின்ற வாழ்க்கை பற்றியதான படங்கள் யாவும் வெறும் படங்களே, அதில் எந்த மெய்யுமில்லை.

நீ கண்ட உலகம் பற்றிய விடயங்களுக்காக, ஏங்கி நிகழ்கால நிம்மதிகளை நீ ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது.

இந்தத் தருணம் வரையும், நீ வாழ்க்கையில் பிழைத்திருக்கிறாய், அந்த உச்சபட்ச சாதனை பற்றி நீ உணர வேண்டும். வெறும் போலியான, வாழ்க்கை பற்றிய கற்பிதங்களை நீ, உன் மனவானில் தோற்கடிக்க வேண்டும்.

உன் தோற்றத்திலிருந்து, இன்று வரை தொடர்கின்ற உன் பிழைத்தல் என்பது, நாளையும் சாத்தியமாகும், வாழ்க்கை தருகின்ற அனுபவங்களை அப்படியே ஏற்று, அதன் மூலம் பாடங்கள் கற்று, வாழ்வை ரசிக்கத் தெரிவதுதான், உன் மூச்சாய் தொடர வேண்டும்.

வாழ்க்கை என்பது, நீ உருவாக்கும் அனுபவங்களின் கோர்வை. உன்னால் மட்டுந்தான், உன் வாழ்க்கையை உருவாக்கிட முடியும். உன்னைப் போல், நீ மட்டுந்தான் இருக்க முடியும். அதேபோல், உன்னால், இன்னொன்றாக இருக்கவும் முடியாது. அப்படியிருக்க முயல்கின்ற தருணத்தில், உன் முகவரி தொலைந்து போகும்.

ஆக, வாழ்க்கை பற்றியும், அது தருகின்ற சந்தர்ப்பங்கள் பற்றியும் முறைப்பாடு செய்வதை இப்போதே, நிறுத்திவிடு. உன் மனத்தில் மகிழ்ச்சி தோன்ற வைக்கும், எதுவோ அதனைத் இப்போதே, செய்திடு.

உன் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்பது உனது தெரிவு மட்டுந்தான். எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?

— உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். ☺ நான் இங்கே — Follow @enathu

Originally published at niram.wordpress.com on December 11, 2014.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.