நீ தோற்றுப் போவாய்!

Tharique Azeez
Tamil Writing
Published in
2 min readDec 13, 2014

அதைச் செய்தால், பிழையாகிவிடும் என்ற கற்பனைக்கு விடுப்புக் கொடுத்து, அது சரியாக நடந்தேறும் என்ற உவகையான எண்ணத்திற்கு சுவாசம் கொடு. அது உன் மனவானில் வாசம் வீசட்டும்.

அந்த அற்புதமான விடயத்தை முயற்சி செய்வதால், அதில் தோற்றுப் போய்விடுவோம் என்பதை, அதை ஒரு சொட்டும் முயற்சிக்காமல், அதனைப் பற்றி வியாக்கியானம் கூறுகின்ற பழக்கம் என்பது சாதாரண வழக்கமாகியுள்ளது.

அந்த விடயம் அற்புதமானது என்பதை அறிந்து கொண்ட, உன்னுடைய அதே மூளைதான், அதை முயற்சிப்பதால் தோற்றுப் போவாய் என்று உனக்குள் சொல்லவும் தன்னை இயல்பாக்கியிருக்கிறது. இது இயல்பான நிலைதான்.

இப்படியான மூளையின் இயல்புநிலையை அறிந்து கொள்வதன் வாயிலாக, தோற்றுப் போவது பற்றிய மாயை மனப்பாங்கு உன்னுள் குடிகொள்வதை நீ, தவிர்க்கலாம்.

மூளை, நீ முயன்றால் தோற்றுப் போவாய் என்று முந்திக் கொண்டு சொல்வதை, புறக்கணிப்பது எவ்வாறு? என்று நீ கேட்கலாம். முயற்சி பற்றிய எந்த அமைப்பும் இல்லாது, செய்யாத ஒன்று பற்றிய அனுமானத்தின் விளைவை, மூளை சொன்னால், அதை மூளையாலும் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கமல்லவா?

ஆனால், நாம் மூளை சொல்ல நினைப்பதை முந்திக் கொண்டு நம்பி, பல எண்ணங்களின் ஆக்கநிலைகள், வெறும் “தோற்றுப் போவோம் என்ற மாயையான பயத்தினால்” விலாசமிழந்து போக வழி செய்கிறோம்.

ஆக, இந்த தோற்றுவிடுவோம் என்கின்ற பயத்தை தோற்கடிப்பது எப்படி? மிக இலகுவானது. நதிபோல, ஓடிக் கொண்டேயிரு. காரியங்களைச் செய்து கொண்டேயிரு.

ஒரு அற்புதமான விடயத்தை எண்ணி, அதனைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியதும், அந்தக் காரியங்களைச் செய்யத் தொடங்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தாமதித்தாலும், மூளை உடனடியாக வந்து, அதன் தொழிலைச் செய்யத் தொடங்கும்; தோற்றுப் போவாய் என்று பயம் காட்டத் தொடங்கும்.

எந்த அற்புதமான விடயத்தை ஆற்றவேண்டுமென நீ எண்ணினாலும், அதனை அறிந்துள்ள அந்தக் கணத்திலேயே அதன் ஒரு சிறு படியையாவது, செய்து, அந்த அற்புதமான விடயத்திற்கு உயிர் கொடுக்க நீ முனைய வேண்டும்.

எப்படியெல்லாம் நீ தோற்றுப் போகலாம் என்று எண்ணி, எண்ணி — எதையுமே செய்யாமல், ஒவ்வொரு கணமும் உன்னை நீயே தோற்கடிப்பது எப்படியான குரூர நிலை என்பதை எண்ணிப்பார்.

உன் எண்ணங்கள், உன்னைச் சுற்றியுள்ளவர்களின் அறிவுரை என்ற பெயர் கொண்ட எண்ணங்கள் என எல்லாமுமே, தோற்றுப் போவது பற்றியதான பயத்தை உனக்குள் பல மடங்காக்கப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்.

அதனாலேயே, நனவாகாத கனவுகளையும் தொடங்கப்படாத வணி நிலைகளையும் பயிரிடப்படாத காணிகளையும் எழுதப்படாத புத்தகங்களையும் பற்றி நீ தொடர்ச்சியாக கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறாய்.

“கனவுகளை நனவாக்க, தொடர்ச்சியாய் தொழிற்பட்டுக் கொண்டேயிரு.” — கோபாலு சொல்லச் சொன்னான்.

— உதய தாரகை (தாரிக் அஸீஸ்)

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். ☺ நான் இங்கே — Follow @enathu

Originally published at niram.wordpress.com on December 13, 2014.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.