நீ மட்டுந்தான்!

Tharique Azeez
Tamil Writing
Published in
2 min readJan 26, 2015

தன்நம்பிக்கை என்பது ஒரு வகையில் விசித்திரமானது. நீ, உன்னைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணங்களினதும் உணர்வுகளினதும் சேர்மானத்தை தன்நம்பிக்கை எனச் சொல்லலாம்.

நீ, உன் மீது வைத்துள்ள பெறுமதிதான் தன்நம்பிக்கை என்ற மகுடம் சூடிக் கொள்கிறது.

இன்னும் சொன்னால், ஒருவன் ஒரு விடயம் சார்பாக, அல்லது ஒரு சந்தர்ப்பம் சார்பாக அல்லது ஒரு திறமை சார்பாக மிக்க நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால், அவனே, இன்னும் இதர திறமை அல்லது சந்தர்ப்பம் அல்லது விடயம் சார்பாக நம்பிக்கை அற்றிருக்கலாம்.

ஆக, தன்நம்பிக்கை என்பது எல்லாமே சுபமாக நடந்தேறும் என்ற எண்ணத்தைக் மனத்தில் கொண்டிருப்பதுதான் என்று புரிந்து கொள்ளலாம். எந்தச் சூழ்நிலையையும் அற்புதமாகக் கையாள்வேன் என்று நீ உன் மனத்தில் எண்ணுகின்ற நிலையில், உனக்குள் உச்ச நம்பிக்கை பிறக்கிறது.

http://flic.kr/p/fqZTP3

ஒரு விடயத்தை கையாள முடியாது என்று மனத்தில் எண்ணுகின்ற கனத்திலேயே, உனக்கான நம்பிக்கை என்பது மறைந்து போகத் தொடங்குகிறது.

ஒரு விடயத்தை நீ முதன் முதலாகச் செய்த சந்தர்ப்பத்தை உன் மனத்தின் வெளியில் கொண்டு வந்து எண்ணிப்பார். அந்தப் பொழுதுகள், கிலி கொண்ட மனத்தைக் கொண்ட பொழுதுகளாய் அமைந்திருந்ததை உன்னால் இன்றும் மறக்க முடியாமலிருக்கும்.

ஆக, உன் சௌகரிய வலயம் என்பது கூட, உன் மனத்தில் நீ நம்பிக்கை என விதைத்த விடயங்கள் சார்பாகவே கட்டியெழுப்பப்படுகிறது. சௌகரிய வலயத்தை விட்டு, விலகும் போதே, உன் தன்நம்பிக்கைக்கு வானம் கிடைக்கிறது.

சௌகரிய வலயத்திலிருந்து வெளியே வருவது எப்படி என்பதான அறிவுரைகளும் அழகிய நூல்களும் உன் பார்வைப் புலத்தில் பட்டுக் கொண்டேயிருக்கும். நீயும் அந்த நிலையில் உன்னை இணைத்துக் கொண்டு, செளகரிய வலயம் விட்டுச் செல்ல முனைந்து வெற்றி காண்பாய்.

ஆனால், நீ காண்கின்ற வெற்றி என்பது, ஒரு விடயம் சார்பாக அல்லது ஒரு நிகழ்வு சார்பாக அல்லது ஒரு திறமை சார்பாக மட்டுமே இருக்கும். அது உன் மொத்த தன்நம்பிக்கையையும் கூட்டி விடப் போவதில்லை. நீ, உன்னை எதுவாகக் கண்டாயோ அப்படியே காண்பாய்.

உன்னைப் பற்றிய, உனது மதிப்பீடுகள் தான், உன் நம்பிக்கையை உயர்த்துவதில் உரமாகி நிற்கின்றன. நீ, உன்னை எதுவாக எண்ணுகிறாயோ, ஆக்குகிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்.

திறமையற்றவன், பைத்தியக்காரன், புத்திசாலி, முட்டாள், உன்னதமானவன் என எதுவாகவும் நீ உன்னை தெரிவு செய்யலாம். நீ என்பது, உன்னால், உனக்குத் தெரிவு செய்யப்படும் நிலைதான் — ஏற்கனவே அது உனக்கு யாரோலோ தெரிவு செய்யப்பட்ட முடிவு அல்ல.

நீ, உன்னை இப்போது சோம்பேறி எனச் சொல்லலாம். ஆனால், உன் தெரிவால் அதனை ஒரு இறந்தகால நிலையாக மாற்றிவிடலாம். நீ தொடர்ச்சியாக சோம்பேறியாக இருப்பதுவும், அதனை விட்டு அகன்று சுறுசுறுப்பாய் காரியங்கள் செய்வதுவும் உன் தெரிவில்தான் விலாசம் கொள்கிறது.

நீ எதுவென்பது பற்றிச் சொல்வது, உன் நம்பிக்கையும் உன் விம்பமும் பற்றி நீ செய்துள்ள தெரிவு தான்.

இந்த நிமிடத்தில் நீ, யாரென்பதையும் நீ கொண்டுள்ள தன்நம்பிக்கை என்பதையும் தீர்மானிப்பதும் தெரிவுசெய்வதும் நீ மட்டுந்தான் — வேறு யாருமல்ல.

— தாரிக் அஸீஸ் (உதய தாரகை)

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். ☺ நான் இங்கே — Follow @enathu

Originally published at niram.wordpress.com on January 26, 2015.

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.