என் 2013

2013ல் நான் வாசித்தவை

Vijay
3 min readJan 1, 2014

ஜனவரி 1, 2014. நேரம் 12.20. நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஆகிவிட்டது. என் மற்ற நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட சென்றிருக்கலாம். செல்லவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், என் நண்பர் ஒருவர் 2013ல் தான் வாசித்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருந்ததை பார்க்க நேர்ந்தது. இதை நாமும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற முடிவுடன், நான் சென்ற வருடம் வாங்கி வாசித்த புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.

வாசித்த புத்தகங்களில் மிகவும் பிடித்து போனவை — ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் மற்றும் ஷண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு வித்தியாசனமான — ஒரு unusual நாவல். காமம், விரோதம், வன்முறை — இவை எதுவும் இல்லாத, வாழ்க்கையின் நல்ல பக்கங்களை, வாழ்க்கையை இப்படியும் வாழலாம் என்ற புரிதலை உணர்த்தும் படைப்பு. இதில் வரும் ஹென்றி, இன்றைய உலகம் மறந்துபோன பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற குணங்களைக் கொண்ட, குழந்தை மனம் பொருந்திய கதாப்பாத்திரம். கதையில் சொத்து பிரிவினையின் போது ஹென்றி நடந்து கொள்ளும் விதம், அவன் மேல் பொறாமை பட வைத்தது. ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த நாவல்.

நாகம்மாள். தன் கணவனை இழந்த நாகம்மாள் என்கிற விதவைப் பெண், மண்ணாசையால் ஒரு கொலைக்கு காரணமாகிறாள் என்பது ஒரு வரி கதை. இந்தப் புத்தகத்தை நான் வாங்கிய போது இது ஒரு வட்டார வழக்கு நாவல் என்பதைத் தவிர வேறு தெரியாது. ஆனால் இந்தச் சிறிய நாவலில் - கதைமாந்தர்களை அவர்கள் போக்கில் ஒரு உரையாடலில் அறிமுகப்படுத்துவது, ஒரு நிகழ்ச்சியை கதை மாந்தர்கள் பேச்சின் வழியாக நமக்கு சொல்வது என பல சிறப்பு அம்சங்கள் பொதிந்துக் கிடக்கின்றன.

இவற்றைத் தவிர நான் படித்தது — ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் - அவருக்கு சாகித்ய அகாதமி விருது பெற்று தந்த நாவல். கங்கா என்னும் பிராமணப் பெண் முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் கற்பை இழக்கிறாள். சில வருடங்களுக்குப் பிறகு, அவருக்கு இப்படி ஒன்று நடந்ததே மறந்து போய் கல்யாணம் - குழந்தை என்றாகிய பிறகு, இவள் அவரை தேடிப்பிடித்து பழகி காதலில் விழுகிறாள் என்று செல்கிறது கதை. 1970யில் வெளிவந்த இந்த நாவலை ஒரு துணிச்சலான முயற்சி என்றெ சொல்ல வேண்டும். மேலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள் பகலில் ஒரு வேஷம், இன்னும் ஒரு பெண்ணின் கதை, கையில் ஒரு விளக்கு, கோகிலா என்ன செய்துவிட்டாள்? -படித்தேன். (வாசித்த போது நான் செய்த tweet :D ) இன்னும் ஒரு பெண்ணின் கதை - ஒரு மேம்பாலம் கட்டுவதால் பாதிக்கப் படும் சிறுகடை வியாபாரம், அந்தக் குடும்பத்தை வறுமையில் தள்ளி தற்கொலைக்குத் தூண்டுகிறது - என் மனதை பாதித்த கதைகளில் ஒன்று.

பின், சுஜாதா எழுதிய சில புத்தகங்களை வாசித்தேன். கனவுத் தொழிற்சாலை - (இந்தப் புத்தகம் 'to-read'ல் இல்லை. தலைப்பை பார்த்து இது ஒரு விஞ்ஞானக் கதை - கனவு சம்பந்தப்பட்டக் கதை என்று வாங்கி ஏமாந்து போனேன். :D ) இது சினிமா நாயகர்கள் வாழ்வில் நடக்கும் கதை - சினிமாவின் மற்றுமொரு முகம். மூன்று மாந்தர்கள் - சினிமாவின் உச்சியில் உள்ள ஒருவன், சிறு பாத்திரங்கள் செய்யும் பெண், சினிமா பாடல்கள் எழுதத் துடிக்கும் மற்றொருவன் - இவர்களின் கதைகள். இந்தப் புத்தகமே ஒரு திரைப்படம் போன்று, ஒரே அத்தியாயத்தில் இவர்களின் கதைகள் ஒன்றன் பின் வேறாக மாறி மாறி வரும். என் இனிய இயந்திரா 2022. எல்லாம் இயந்திர மயம். சர்வாதிகார ஆட்சி. குழந்தைப் பெற்றுக் கொள்ளக் கூட அனுமதி பெற வேண்டும் என நிறைய கட்டுப்பாடுகள். இப்படி ஒரு கதைக் களத்தை அமைத்து அதில் இயந்திர நாய், ரோபோக்கள், Holography என அறிவியலைப் புகுத்தி எழுதப்பட்டக் கற்பனைக் கதை.

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு எழுதிய 35 சிறுகதைகளின் தொகுப்பு. பல கதைகள் நகைச்சுவை உணர்வோடு ரசிக்கும் படியாக இருந்தன. அதிலும் எதிர் வீடு(கிராமபோன் கதை), பெண் வேஷம், காதல் கடிதம், ஓலைப் பட்டாசு, பிசாசு வந்த தினம் - இவையெல்லாம் நான் வாய் விட்டு சிரித்து ரசித்து படித்தக் கதைகள். ஒவ்வொன்றும் குறும்படங்களாக எடுக்கக் கூடிய கதைகள்.

நாளை மற்றுமொரு நாளே - G நாகராஜன் எழுதியது. நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த மற்றுமொரு குறுநாவல். எந்த வேலையும் செய்யாமல், குடித்துக் கொண்டும் அலைந்துத் திரிந்துக் கொண்டும், பிறரின் காமப் பசிக்கு பெண்களை ஏற்பாடு செய்யும் கந்தன் என்பவனின் ஒரு நாள் நிகழ்வுகளின் தொகுப்பு. இவன் தன் மனனவியையே விற்று வாழ்க்கை நடத்துபவன். விடிந்ததும் குடிக்க நினைப்பவன். இவ்வளவு பெரிய முரடனா என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கந்தன் தன் மனனவியிடம் காட்டும் காதல், அந்தக் கர்ப்பமான சிறுமியிடம் பதட்டத்துடன் கேட்குமிடம் -இவை நம் எண்ணத்தை மாற்றி விடும். திரும்பப் படிக்கத் தூண்டும் நாவல்.

நான் என் கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் பெரிதாக படித்ததே இல்லை. வாசிக்க வைத்தது அம்மா வீட்டில் வைத்திருந்த பொன்னியின் செல்வன் புத்தகங்கள். தன் சின்ன வயதில் கல்கி என்னும் வார இதழில் இது தொடர் கதையாக வந்தபோது, அவற்றை வாசித்து, சேகரித்து வந்ததாக சொல்வாள். வாசித்தேன். பிடித்திருந்தது. பொன்னியின் செல்வன் வரலாற்று புதினம். சோழ அரசர்களின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கல்வெட்டை வைத்து 2000 பக்கங்கள் எழுதி, அதற்கு இப்படி ஒரு ரசிகப் பட்டாளம் ஏற்படுத்தியுள்ளார் கல்கி. எளிய நடையில், உண்மை கதாப்பாத்திரங்களில் கதையை ஏற்றி ரசிக்கும் படியே சொல்லி இருப்பார். வாசிக்க வாசிக்க ஆர்வத்தை தூண்டும் படைப்பு. இதனாலேயே கல்கியின் மற்ற புத்தகங்கள் - சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு வாங்கிப் படித்தேன்.

2013ல் வாசித்த புத்தகங்களில் பல அம்மா, நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள் பரிந்துரை செய்தவை. இந்த வருடமும் நிறைய வாசித்து அவற்றை பகிர்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

--

--