என்ட ராசாத்தி!

1/31 

Tharique Azeez
Tamil Writing
2 min readMay 1, 2014

--

அந்த மனிதனுக்கு, எண்பது வயதையும் தாண்டியிருந்தது. ஆனாலும், தோற்றம் என்னமோ, அவரின் அறுபதுகளில் இருப்பது போன்றே இருந்தது.

கோபாலு வாழுகின்ற இடத்திற்கு கொஞ்சம் தொலைவில் வாழ்ந்து வந்தார் அந்த வயோதிபர். இந்த வயோதிபரின் செயற்பாடுகளில் வினோதம் விதைக்கப்பட்டிருப்பதாக கோபாலு எப்போதும் உணர்ந்து கொண்டான்.

பின்னேரங்களில், உடற்பயிற்சி செய்யும் நிமித்தம், பாதை வழியாக நடந்து அந்த வயோதிபரின் வீடிருக்கும் பிரதேசம் வரை கோபாலு செல்வான்.

வயோதிபர் எப்போதும் அந்த வீட்டின் முற்றத்திலேயே இருந்து கொண்டிருப்பார். அங்கு அவர் இல்லாவிட்டால், பூக்களின் வாசனையை நுகர்ந்து கொண்டிருப்பார்.

பூக்கள் என்கின்ற போதுதான், அந்த வயோதிபரின் வீட்டின் அழகை விபரிக்க வேண்டுமென்கின்ற நினைவே வருகிறது. அவர் வளவின் நடுவே வீடு — வீட்டைச் சுற்றி பூக்களின் சோலையொன்று. அங்கு ரோஜாச் செடிகள் யாவும் பூத்துக் குலுங்கின. அதன் வனப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

அந்த வயோதிபருக்கு, மனிதர்களைக் கண்டு கதைப்பதிலும் பார்க்க, மலர்களோடு வசித்திருப்பது பிடித்துப் போயிருந்தது என்றே கோபாலுவுக்கு தோன்றியது. அவர் யாரோடும் கதைப்பதை அவன் இவ்வளவு காலத்திற்கும் கண்டதேயில்லை.

அந்த மனிதனின் வாழ்க்கை முறை, அவனை அதிசயத்தில் ஆழ்த்தியிருந்தது. யாருடனுமே கதைக்காத அவரிடம், தான் எப்படிக் கதைக்க முடியுமென்கின்ற சாமான்ய மனிதனின் சிந்தனை ஓட்டம் கோபாலுக்குள்ளும் குடிகொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளும், அந்தப் பாதையில் நடந்து கொண்டு, அந்த வயோதிபரின் வீட்டைக் கடக்கும் போதெல்லாம், அவரோடு சென்று கதைக்க வேண்டுமென்று எண்ணியும், கோபாலுவால், அவன் சிந்தனைக்கு “சீல்” வைத்து, அந்த வினோத மனிதனைச் சந்திக்க வாய்ப்பை உண்டு பண்ண முடியவில்லை.

காலமும் ஓடியது. ஓடிய காலத்தோடும் கூட, அவர் தோட்ட ரோஜாக்களை வாடாமல் பராமரித்துக் கொண்டிருந்தார்.

அன்று செவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும். கோபாலு, முதன் முதலாக தன் காதலியைச் சந்திக்கப் போகின்றான். அவளிடம் கொடுப்பதற்காக கொஞ்சம் ரோஜாவை அந்த வயோதிபரின் அழகிய தோட்டத்திலிருந்து பெற வேண்டும் என நினைத்தான். அந்த வயோதிபரைச் சந்திக்கும் வாய்ப்பும் அதில் உண்டாகும் என்பதே இந்தத் தெரிவுக்குக் காரணமாகவிருக்கலாம்.

மெல்ல, அவரின் வீட்டுப்படலையை நீக்கிக் கொண்டு, ரோஜாக்களை தரிசித்து கொண்டிருந்த வயோதிபருக்கு முன்னே சென்று நின்றான் கோபாலு.

“என்னப்பன், என்ன விசயம்?” என்றார் அந்த வயோதிபத் தாத்தா இயல்பாகவே!

தான் ஒரு அழகிய பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளுக்கு கொடுப்பதற்கு, இந்தத் தோட்டத்தின் ரோஜாக்கள் மிகப் பொருத்தமானவை. கொஞ்சம் ரோஜா மலர்களை பெற்றுச் செல்ல வந்ததாக சொன்னான் கோபாலு. அவன் காதலி பற்றிய வர்ணனைகளையும் அவனின் வேண்டுகோளில் சேர்த்துக் கொண்டான்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா, அவன் சொல்லி முடித்ததும் கொஞ்சம் நேரம் மெளனம் காத்தார்.

“அப்பன், நானென்ட கதையச் சொல்றன். கேட்பயா?” — கேள்வியிலே வலி தோய்ந்திருந்தது.

கோபாலுவின் ஆர்வத்தின் அவதியே அதுவாகவே இருந்ததால், “சொல்லுங்க தாத்தா!” என்றான்.

“இந்தப் பூவெல்லாம் என் ராசாத்திர நெனப்புகள் தான். என்ட ராசாத்தி நாங்க கல்யாணம் முடிச்சி, கொஞ்ச காலத்திலயே வானத்துக்கு போயிட்டா” என்ற தாத்தாவின் கண்கள் நனைவதை கோபாலு கண்டிருக்க வேண்டும்.

“என்ட ராசாத்திதான் எனக்கு சூரியன். ராசாத்தி போனதும் எல்லாமே இருட்டிப்போச்சு” — தாத்தாவின் வெறுமையின் வலி குரலில் கனத்தது.

“ஒரு நாள் நான் இந்த வூட்ல இருக்கக்கோல, வாசல்ல ஒரு ரோசாப்பூ பூத்திருந்திச்சு. அதப்பார்த்ததும் என்ட ராசாத்தியின் நெனப்புத்தான் வந்துச்சு!, அவ நெனப்பை இந்த வளவு முழுக்க வெதக்க நெனச்சித்தான் வூட்டைச் சுத்தி ரோஸா வெச்சிருக்கேன்” — கோபாலுவின் கண்கள் நனைவதை யாரால்தான் தடுக்க முடியும்.

“ராசாத்திர நெனப்பு வந்ததும், ரோசாத் தோட்டத்தை சுத்தி நடப்பன். அதுதான் என்ன இன்னைக்கு வரைக்கும் உசிரோட இருக்கச் செய்யுது.”

கோபாலு மௌனமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“செரி.. செரி.. என்ட கதையச் சொல்லி ஒனக்கு பூவத் தர மறந்துட்டன்” — பூக்களை கொய்து எடுக்குமாறு கோபாலுவை சைகை செய்தார் தாத்தா.

ஒரு சில பூக்களைப் பறித்துக் கொண்டான் கோபாலு, போகும் போது, “அப்பன், நீ ஒன்ட வாழ்க்கட ஒவ்வொரு நிமிசத்தையும் ரசிச்சி வாழணும். உன்ட சோக்கான நெனப்பை எல்லாம் ஒனக்கு மறக்காதபடி பாத்துக் கொள். அவளோட ரொம்ப அன்பாயிரு. இரக்கமாயிரு”

உணர்வுகளின் கலவை நிலையைக் மனத்தில் கண்ட கோபாலுவால், தாத்தாவோடு கதைத்த ஒவ்வொரு வார்த்தைகளினதும் கனதி பாரிக்கத் தொடங்கியது.

வாழ்க்கை பற்றிய புரிதலை அந்தக் கொஞ்ச நேரம் கோபாலுக்கு சொல்லிக் கொடுத்தது.

மீண்டும் காலம் ஓடியது. காட்சிக் கோலம் மாறியது. கோபாலுவின் திருமண நாளில் தாத்தாவும் வந்து வாழ்த்தினார். அன்றுதான் தாத்தா பல காலங்களுக்குப் பின் அவர் வீடு விட்டு இன்னொரு வீட்டிற்கு சென்றார்.

(யாவும் கற்பனை தான்)

நிழற்பட மூலம்: https://flic.kr/p/bC1EmW

--

--

Tharique Azeez
Tamil Writing

Type Designer & Font Engineer #typedesign #lettering #graphicdesign Creator @tamiltypography — Docendo discimus · TEDster.