நான் இனி மேல்


நான் இனிமேல், குறிப்பிட்ட விடயங்களின் பால் பொறுமை கொள்ளமாட்டேன். நான் திமிர் பிடித்தவள் என்பதால் இதைச் செய்கிறேன் என நீங்கள் நினைக்கக்கூடாது. என்னை அதிருப்தி அடையச் செய்கின்ற, என்னில் வெறுப்பை உண்டு பண்ணுகின்ற விடயங்களுக்காக எனது நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தந்துள்ள வாழ்வின் தருணத்தில் நான் இருக்கின்றேன்.
வெறுக்கின்ற மனப்பாங்கு, தொடர் குரூர விமர்சனங்கள், இன்னும் இவை போன்ற விடயங்கள் நிமித்தம் எனக்குப் பொறுமையே கிடையாது.
என்னை விரும்பாதவர்களை விரும்புவதற்கோ, எனக்கு அன்பு காட்டாதவர்களுக்கு அன்பு காட்டவோ அல்லது என்னோடு புன்னகைக்காதவர்களுக்கு புன்னகை செய்யவோ, எனக்குள் எந்த விருப்பமும் கிடையாது. அவ்வாறானவர்களை திருப்திப்படுத்தவும் எனக்கு ஆர்வமில்லை.
பொய் சொல்பவர்களோடும் ஒன்றை இயல்பிருப்பிலிருந்து இன்னொன்றாக மாற்ற நினைப்பவர்களோடும் ஒரு நிமிடம் தானும் நான் இனிமேல் செலவழிக்கப் போவதில்லை.
பாசாங்கு, கபடம், வஞ்சகம், போலிப்புகழ்ச்சி என எதனோடும் சேர்ந்து இனிமேல் வாழப்போவதில்லை எனத் தீர்மானம் கொண்டுள்ளேன்.
தேர்வு செய்யப்பட்ட புலமையையோ, கல்வியோடான திமிரையோ நான் பொறுத்துக் கொள்வதில்லை. பிரபலமான கிசுகிசுப்புக்களுக்குக் கூட என்னை நான் சமாளித்துக் கொள்வதில்லை. நான் முரண்பாடுகளையும் ஒப்பீடுகளையும் வெகுவாக வெறுக்கின்றேன்.
நான் காண விரும்புவது, எதிர் எண்ணங்கள் கொண்ட பல்வகைச் சமூக அமைப்பை — அதனால்தான் மாறா இயல்புள்ள, பிடிவாதப் பண்புகளைக் கொண்டவர்களை நான் தவிர்த்துவருகின்றேன்.
நட்பில், விசுவாசமின்மையையும் காட்டிக் கொடுப்பையும் நான் வெறுக்கின்றேன். ஒருவரை எப்படிப் பாராட்ட வேண்டும் அல்லது அவரை ஊக்கப்படுத்த என்ன வார்த்தை சொல்ல வேண்டும் எனத் தெரியாதவர்களோடு நான் பழகுவதில்லை.
மிகைப்படுத்தல் எனக்கு சலிப்பையே உண்டு பண்ணுகிறது. மிருகங்களை நேசிக்காதவர்களை விரும்புவதற்கு எனக்கு சங்கடமாயிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது பொறுமைக்கு யோக்கியதை இல்லாத எவரோடும் எனக்கு எப்போதும் பொறுமை கிடையவே கிடையாது.
நிழற்பட மூலம்: Neon Tommy

ஆஸ்கார் விருது வரலாற்றிலேயே அதிகளவில் விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட நடிகையும், மூன்று முறை ஆஸ்கார் விருதுகளை வென்ற நடிகையுமான Meryl Streep, ஒரு கட்டத்தில் சொன்ன வசனங்களே அவை. உத்வேகம் தருவதாய் அவை அமைந்திருந்ததால், தமிழாக்கம் செய்தேன். பகிர்வதில் மகிழ்ச்சி.


niram.me

Tharique Azeez (@enathu)