Vikatan
Vikatan Emagazine
Published in
5 min readFeb 28, 2018

--

அந்த 127 குழந்தைகளும் எப்படி இறந்திருக்கும்..? சிரியாவின் ரசாயனத் தாக்குதல் கதை!

நின்றுகொண்டிருந்தார்கள். அவ்வளவு கவனமாக சூழலை கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்த நடமாட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மணல் மூட்டைகளுக்குப் பின்னால் கனமான துப்பாக்கிகளைச் சுமந்தபடி இருந்த அவர்கள், அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் பேசிக்கொள்ளவே இல்லை. சிலர் சில விஷயங்களைச் சைகைகளில் பகிர்ந்துகொண்டார்கள். உங்கள் கற்பனையை இன்னும் விசாலப்படுத்திக்கொள்ள இதன் காலம் உங்களுக்கு உதவலாம். இது நடப்பது ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, 1915-ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் சமயம். பெல்ஜியத்தின் ஈப்ரஸ் நகரம் (Ypres) . பிரெஞ்ச் மற்றும் அல்ஜீரிய ராணுவ வீரர்கள் கூட்டாக அந்தப் பகுதியைக் காத்துக்கொண்டு நின்றார்கள்.

எதிரிகளின் சத்தம் எதுவும் கேட்கவில்லை. எந்த ஆயுதங்களும் நகர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. நம் படை கண்டு எதிரிகள் பயந்துவிட்டார்களோ என்ற நினைப்பு வேறு அங்கிருந்த சிலருக்கு எழுந்தது. நினைப்பு என்று எதிர்காலம் தெரிந்த நாம் சொன்னாலும், அந்த நிமிடம் அவர்களுக்கு அந்த நினைப்புதான் நம்பிக்கை. ஆம், அப்படித்தான் அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். நாம் காலத்தைக் கடந்து போயிருப்பதால் நம்மால் இவர்களை எதிர்க்கும் ஜெர்மனிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க முடியும்.

பிரெஞ்ச் மற்றும் அல்ஜீரிய கூட்டுப்படைகள் நின்றிருக்கும் எதிர் திசையில் ஜெர்மானிய படை நின்றுகொண்டிருந்தது. அவர்கள் அனைவரின் முகத்திலும் பெரும் ஆர்வம் இருப்பதை உணர முடிந்தது. துப்பாக்கிகளைத் தோள்களில் மாட்டியபடி அங்கு சில டாங்க்குகளைத் தள்ளி வந்தனர் ராணுவ வீரர்கள். யாருக்காகவோ காத்திருந்தனர். சில நிமிடங்களில் கருப்பு நிற கோட், சூட் சகிதம் வித்தியாசமான கண்ணாடி அணிந்து அந்த மனிதர் வந்தார். மூச்சுவிடும் சத்தம்கூட, குண்டு வெடிக்கும் சத்தம் அளவிற்குக் கேட்கும் நிசப்தம் அங்கு நிலவியது. அந்த கண்ணாடிக்காரர் காற்றின் போக்கைக் கவனித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழிந்திருக்கும். காற்று தங்களுக்கு சாதகமாக வீசுவதை உணர்ந்து சில சைகளைக் காட்டினார். மிகத் துரிதமாக வேலைகள் நடந்தன. அனைவரும் தங்களிடம் இருந்த அந்தக் கண்ணாடி மாஸ்க்குகளை முகத்தில் மாட்டிக்கொண்டார்கள். அந்த டாங்குகள் ஒரு திசையில் நிறுத்தப்பட்டுத் திறக்கப்பட்டன. திறந்துவிட்டதும், மொத்த படையும் பின்னோக்கி நகர்ந்தது.

உலகின் முதல் ரசாயனத் தாக்குதல் குறித்து விளக்கும் படம்.

போர்தான். இருந்தும், வீசும் அந்தக் காற்றை அத்தனை ரசனையோடு அனுபவித்துக்கொண்டிருந்தார்கள் அந்த வீரர்கள். சில நிமிடங்கள் கடந்திருக்கும். காற்றோடு சேர்ந்து பழுப்பு மஞ்சள் நிறத்தில், மேகம் நகர்வதுபோல் ஏதோ ஒன்று நகர்வதைக் கண்டு முதலில் ஆச்சர்யப்பட்டார்கள். அது என்ன, ஏது என்று அவர்கள் உணரும் முன் அது அவர்களை நெருங்கியது.

கண்கள் எரிந்தன. இருமத் தொடங்கினார்கள். சிலருக்கும் தும்மல். மூச்சடைத்தது. திணறினார்கள். மூச்சுக் குழாய் எரிந்தது. வாயில் ரத்தம் வழியத் தொடங்கியது. மயக்கமடைந்தார்கள். கீழே விழுந்தார்கள். அப்படியே மரணமடையத் தொடங்கினார்கள். கத்தியின்றி, சத்தமின்றி, குண்டுகளின்றி மிக அமைதியாக அந்தப் படுகொலை நடந்தேறியது. கொலை செய்யப்பட்டது மொத்தம் ஆறாயிரம் வீரர்கள். கொன்றது மொத்தம் 400 டன் க்ளோரின் வாயு (Chlorine Gas). ஜெர்மானிய வீரர்கள் கொண்டாடினார்கள். உலகின் முதல் ‘ரசாயனப் போர்’ (Chemical Warfare) வெற்றிகரமாக நடந்தேறியது. ‘ரசாயன போர்முறையின் தந்தை’ (Father of Chemical Warfare) ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) கொண்டாடப்பட்டார்.

ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber)

(ஏப்ரல் 15-ம் தேதி மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதாகப் பெருமிதம் கொண்ட ஃப்ரிட்ஸ், மே 1-ம் தேதி தன் வாழ்நாளின் பேரிழப்பைச் சந்தித்தார். சில வருடங்களிலேயே தன் வாழ்வின் பேரழிவுகளையும் கண்டார். அதுகுறித்து கடைசியில் பார்ப்போம். இப்போது இந்தக் க்ளோரின் அரக்கன் குறித்த தகவல்களைத் தேடலாம்.)

க்ளோரின் (Chlorine) தனியாக இருக்கும்பட்சத்தில் மிகக் கடுமையான எதிர்வினை ஆற்றக்கூடிய தன்மை வாய்ந்தது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவை உடைப்பது ‘ஹைட்ரோ க்ளோரிக் ஆசிட்’ (Hydrochloric Acid). இந்த ஹைட்ரோ க்ளோரிக்கில் இருந்து க்ளோரினை, 1774-ல் முதன்முதலாகத் தனியாக பிரித்தெடுத்தார் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் (Karl Wilhelm Scheele). 1810-ல் இந்தத் தனியான க்ளோரினுக்கு வெளிறச் செய்யும் (Bleaching) தன்மை அதிகமாக இருக்கிறது என்பதை ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy) கண்டுபிடித்தார். இது காற்றைவிட அடர்த்தியானது.

உலர்ந்த க்ளோரின் தண்ணீரோடு சேரும்போது, அது ‘ஹைப்போக்ளோரைட்’ (HypoChlorite) எனும் ரசாயனத்தை உருவாக்குகிறது. அது மிகச் சிறந்த கிருமிநாசினி. 1897-ல் பிரிட்டனின் மெயிட்ஸ்டோன் (Maidstone) பகுதியில் மிகப் பெரியளவில் ‘டைஃபாய்ட்’ (Typhoid) பரவிய காலத்தில், அந்தப் பரவலைத் தடுக்க ஹைப்போக்ளோரைட்தான் உபயோகப்படுத்தப்பட்டது.

மனித உடலுக்கு க்ளோரின் மிகப்பெரிய கேடு.

127 அப்பாவிக் குழந்தைகளின் மிகக் கொடூரமான மரணம், இந்தச் செய்தியை இப்போது எழுத வைத்திருக்கிறது. கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. சிரியாவில் கடந்த வாரம், கிழக்கு கவுட்டா (Estern Ghouta) பகுதியில் சிரிய அரசாங்கம், ரஷ்யா மற்றும் இரான் கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே வாரத்தில் 510 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 127 குழந்தைகளும், 75 பெண்களும் அடக்கம். இந்த வான்வழித் தாக்குதலில் ‘க்ளோரின் வாயு’ நிரப்பப்பட்ட குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சிக்கல்கள் நிறைந்தது சிரியா பிரச்னை. பல நூறாண்டுகளாகவே அவ்வப்போது பெரும் போர்களையும், பேரிழப்புகளையும் சந்தித்து வரும் ஒரு நிலப்பரப்பு. தற்போது பூதாகரமாக மாறியிருக்கும் சிரிய உள்நாட்டுப் போருக்கான தொடக்கம் 2011-ல் ஆரம்பித்தது.

2010-ல் துனிசியாவில் தொடங்கிய ‘Arab Spring’ புரட்சி லிபியா, எகிப்து, ஏமன், சிரியா மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கும் பரவின.

2011-ல் சிரியாவின் டெர்ரா (Derra) நகரில் சில இளைஞர்கள் ஒரு பள்ளியின் சுவரில் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக சில புரட்சிகர வாசகங்களை எழுதுகிறார்கள். இவர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பல இளைஞர்கள் சிறை பிடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களிலும் வெடிக்கத் தொடங்கின. அது பெரிய கலகமாக உருவெடுத்தது. அரசுக்கு எதிராகப் போராட்டக் குழுக்கள் கிளம்பின. அவர்களுக்கு ஆதரவாக துருக்கியும், ஜோர்டானும், வளைகுடா நாடுகளும் சில அரசியல் காரணங்களுக்காகக் கை கோத்தன. அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஈரானும் களமிறங்கின. ஏற்கெனவே ஒரு பக்கம் “குர்து” (Kurds) போராளிகள் அரசுக்கு எதிராகக் களத்தில் இருந்தனர். ரஷ்யா தலையிட்டதும், அமெரிக்கா தன் பலத்தைக் காட்டத் தொடங்கியது. குர்துகளும், மற்ற போராட்டக் குழுக்களும், அரசுக்கு எதிராகப் போராட அவர்களுக்கு உதவியது அமெரிக்கா. இந்தப் பிரச்னைகள் போக, இவர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து அழிக்கத் தொடங்கியது ஐஎஸ்ஐஎஸ் (ISIS). பல சர்வதேச சிக்கல்கள் நிறைந்த இந்த அரசியல் களத்தில் அனுதினமும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.

2013-ம் ஆண்டே “சரின்” எனும் ரசாயனம் கொண்டு மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐநா இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. பல உலக நாடுகளும் இதை வன்மையாகக் கண்டித்தன. அரசுத் தரப்பும், போராட்டக் குழுக்களும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டார்கள். இதோ, ஐநா, சிரியாவில் 30 நாள்களுக்கான அமைதி உடன்படிக்கை (Ceasefire) போட்ட இரண்டாவது நாள் இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. அதுவும், பழைய தாக்குதல்களில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் உலகம் முழுக்க இணைய வழியில் பயணித்து பெரும் உணர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. அய்லான் புகைப்படம் உலகம் முழுக்க ஏற்படுத்திய அதிர்வலைகளில் ஒரு பங்கைக்கூட இசைப்பிரியாவின் புகைப்படம் தமிழகத்தில் எழுப்பிவிடவில்லை என்பதற்குப் பின்னணியிலும் ஓர் அரசியல் உண்டுதான். இந்த அப்பாவிக் குழந்தைகளின் இறப்புகளைக் கண்டு வருந்தும் அதே நேரம், அதன் பின்னணி அரசியல்களையும் அறிய வேண்டியது மிகவும் அவசியம்தான்.

“நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்றார் மாவோ.

அய்லானும், அஹ்மத்தும், ஒமரும், அல்-டிமாஸியும், பிராஸ் அப்துல்லாவும், இசைப்பிரியாவும் சிரிப்பைத் தவிர வேறு எந்த பேராயுதத்தையும் ஏந்திவிடவில்லைதான். ஆனால், அவர்களை அழிக்க அந்த எதிரிகள் ஏன் இந்த நச்சு குண்டுகளை ஏந்தினார்கள் என்பது விடை காண வேண்டிய கேள்வி. தொடு திரையில் தெரியும் புகைப்படங்களை ஒரு நொடி அனுதாபத்தோடு தொட்டு நகர்த்தி வேலைகளைத் தொடரும் வாழ்க்கைக்கு நடுவில் இந்தக் கேள்விகளை எப்படி ஆராயப் போகிறோம்? இதற்கான தீர்வுகளை எப்படித் தேடப் போகிறோம்? மனித மாண்புகளை எப்படிக் காக்கப் போகிறோம்? மனிதத்தை எப்போது உணரப் போகிறோம்?

1. ஃப்ரிட்ஸ் ஹேப்லர், தான் ஏதோ பெரிதாக சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மே 1-ம் தேதி வீடு திரும்பினார். தன் வெற்றியைத் தன் மனைவியோடு பகிர்ந்தார். அவர் மனைவி மிகக் கடுமையாக அவரை விமர்சித்தார். ஃப்ரிட்ஸ் செய்தது அரக்கத்தனம் என்றார். அது பேரழிவிற்கான விதை என்றார். கடுமையான வாக்குவாதம் இரண்டு பேருக்கும் ஏற்பட்டது. ஆறாயிரம் பேரைக் கொன்றுவிட்டு வந்த கணவன் தன் வெற்றி குறித்துப் பேசியதைத் தாளாமல், வாக்குவாதமும் முற்ற அந்த நொடியே தற்கொலை செய்து இறந்துவிட்டார். சில ஆண்டுகளில் ஃப்ரிட்ஸ் கண்டுபிடித்த ரசாயன குண்டைக் கொண்டே நாஜிக்கள் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்தனர். அதில் ஃப்ரிட்ஸின் மொத்த சொந்தங்களும் செத்து மடிந்தன.

2. 1918-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார் ஃப்ரிட்ஸ் ஹேப்லர்.

This article was originally written by R.Kalaiselvan In Vikatan Tamil News

--

--