கயெக கடைசல் மற்றும் துருவல் மையங்கள் (CNC Turning and Machining Centers)

இரா. அசோகன்
3 min readJan 25, 2019

--

கயெக எந்திரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கடைசல் மையமும் (Turning Center) துருவல் மையமும் (Machining Center) ஆகும். கயெக கடைசல் எந்திரங்களுக்கும் கடைசல் மையங்களுக்கும் இடையே முறையான வேறுபாடு எதுவுமில்லை. எனினும், “கடைசல் எந்திரம்” என்ற பெயர் கடைசல் மட்டுமே செய்யக்கூடிய இயந்திரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை X மற்றும் Z ஆக இரண்டு அச்சுகளை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் ஒரேயொரு பிடிப்பிதான் இருக்கும். இதற்கு மாறாக, “கடைசல் மையம்” என்ற பெயர் கடைசல் எந்திரத்தில் துருவல் அல்லது துரப்பணத் திறனை ஒருங்கிணைக்கும் அல்லது இரண்டாம் செயல்பாடுகளைச் செய்வதற்குத் துணை சுழல் தண்டுகளைக் (sub-spindles) கொண்ட இயந்திரங்களை வழக்கமாகக் குறிக்கிறது. ஆகவே இவற்றில் மூன்றாம் Y அச்சும் உண்டு.

கயெக கடைசல் மையம்

தானியங்கு உளி மாற்றி (Automatic tool changer) கொண்ட கயெக துருவல் எந்திரங்களைத் “துருவல் மையம்” என்று சொல்கிறார்கள். கயெக துருவல் மையத்தின் மிக அடிப்படையான சிறப்பியல்பு சுழலியின் திசையமைவுதான். செங்குத்துத் துருவல் மையங்கள் (Vertical Machining Centers — VMC) பொதுவாகத் துல்லியமான வேலைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கிடைமட்டத் துருவல் மையங்கள் (Horizontal Machining Centers — HMC) பொதுவாகப் பெருமளவு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மற்றொரு பரவலாகப் பயன்படுத்தப்படும் துருவல் மையம் ஐந்து அச்சுகள் கொண்டது. இது பணிப்பொருளையோ அல்லது வெட்டுக் கருவியையோ அல்லது இரண்டையுமோ பல கோணங்களில் திருப்ப வல்லது. ஆகவே பல கோணங்களில் துருவலும் துரப்பணமும் செய்ய இயலும். அதாவது வெட்டுக் கருவி ஐந்து அச்சுகளில் நகரவும் திரும்பவும் வல்லது. X, Y மற்றும் Z ஆக மூன்று நேர் அச்சுகளில் நகரும். மற்றும் A மற்றும் B ஆக இரண்டு அச்சுகளில் திரும்பும். எனவே பணிப்பொருளை இந்த ஐந்து திசைகளிலிருந்தும் அணுக இயலும்.

மூன்று நேரியல் மற்றும் மூன்று சுழல் அச்சுகள்
கயெக துருவல் மையம்

தானியங்கு பணிப்பொருள் மாற்றி (Pallet Shuttle or Pallet Changing Systems)

எந்திரப் பணிமனையில் பணிப்பொருளையும் பாகங்களையும் கையாளும் வசதிக்காக பெரும்பாலும் மரத்தாலான அடிமேடைகளையோ அல்லது கலங்களையோ பயன்படுத்துகிறோம். வழக்கமாக வெட்டு வேலை முடிந்தபின் அந்த இயந்திரத்தை இயக்குபவர் பாகத்தை பிடிப்பியிலிருந்து எடுத்து கலத்தில் வைத்துவிட்டு அடுத்த பணிப்பொருளை எடுத்து இயந்திரத்தின் பிடிப்பியில் பொருத்துவார். இது ஒவ்வொரு பாகத்துக்கும் செய்ய வேண்டிய வேலை ஆதலால் கையால் செய்தால் அந்த நேரத்தில் எந்திரம் பயனற்றதாக இருக்கும், உற்பத்தி செய்யக்கூடிய நேரம் வீணாகும். ஆகவே உற்பத்தித் திறனை உயர்த்தும் பொருட்டு கயெக எந்திரங்களில் தானியங்கு பணிப்பொருள் மாற்றிகள் அவசியமாகிவிட்டன.

தானியங்கு பணிப்பொருள் மாற்றி

தானியங்கு உளி மாற்றி

கையால் செய்தால் எந்திரத்தின் உற்பத்தி நேரத்தை வீணடிக்கும் மற்றொரு முக்கியமான வேலை உளி மாற்றுவது. தானியங்கு உளி மாற்றி இந்த வேலையை விரைவாகச் செய்வதால் உற்பத்தித் திறனை உயர்த்த முடியும்.

தானியங்கு உளி மாற்றி

இது படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA) அனுமதிபடி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

நன்றி தெரிவிப்புகள் (Acknowledgements)

மற்ற இயந்திரவியல் கட்டுரைகள்:

--

--