இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்குமா? முடியும் என்று நிருபிக்கிறது ரோடேல் நிறுவனம்

usha devi venkatachalam
Krishi Janani
Published in
5 min readSep 16, 2019

[English Version/ஆங்கிலப் பதிப்பு | Tamil Version/தமிழ்ப் பதிப்பு]

ரசாயன விவசாயத்தின் மேன்மைகளைப் புகழ்வோர் வழக்கமாக கேட்கும் கேள்விகள்: இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்குமா? உலகிற்கே உணவளிக்க முடியுமா?

இந்த கேள்வியில் தொக்கி நிற்கும் ஒரு அடிப்படை அனுமானம்: இயற்கை விவசாயத்தில் விளைச்சலை அதிகரித்து, உலகின் கோடானு கோடி மக்களுக்கு உணவளிப்பது என்பது முடியாத காரியம். அது ரசாயன விவசாயத்தால் மட்டுமே முடியும். ஆகவே, விவசாயிகள் ரசாயன உரங்களைக் கொட்டி, மண்ணைப் பிழிந்து எடுக்கும் விவசாய முறையே தொடர வேண்டும்.

இது உண்மையா? இல்லை என்கின்றன இயற்கை விவசாயத்தை ரசாயன விவசாயத்துடன் ஒப்பீடு செய்த பல அறிவியல் ஆய்வுகள். ஆனால், இந்த அறிவியல் முடிவுகள் ஆங்காங்கே சிதறியிருப்பதால் பரவலாக அறியப்படவில்லை. மேலும் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக விவசாயிகளை சென்றடைவது கடினம். இந்த குறைகளைப் போக்க, பல ஆய்வு முடிவுகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரு தொடராக இங்கே சேகரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். அத்தொடரின் முதல் கட்டுரை இது.

நீண்ட கட்டுரையை படிக்க நேரமில்லையா? இதோ ஆய்வு முடிவுகளின் சுருக்கம்:

“செயல்திறனில் இயற்கை விவசாயம் ரசாயன விவசாயத்தை விஞ்சும்.”

[சிறு குறிப்பு: க்ரிஷி ஜனனியின் நீண்ட கால இலக்கு “மீள் உருவாக்க விவசாய சூழலியல்” (regenerative agroecology). எங்கள் மதிப்பீட்டில், இதுவே இயற்கையோடு இணைந்த, அறிவியல் சார்ந்த, நிலைத்த விவசாயத்திற்கான பரிணாம வளர்ச்சி. மீள் உருவாக்க விவசாய சூழலியல் என்றால் என்ன? இயற்கை விவசாயம் (organic agriculture) — மீள் உருவாக்க விவசாய சூழலியல் (regenerative agriculture) இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் பிற பதிவுகளில் சொல்கிறோம்.]

ரோடேல் நிறுவனத்தின் விவசாய முறைகள் பரிசோதனை பண்ணை நிலம் (புகைப்பட பதிப்புரிமை: ரோடேல் நிறுவனம்)

ரோடெல் நிறுவனம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை மையமாகக் கொண்ட ரோடேல் நிறுவனம், இயற்கை விவசாயம் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் செய்யவும், இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கவும் 1947-ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு) தொடங்கப்பட்டது. இதை விட சுவாரஸ்யமான ஒரு இந்திய தொடர்பு — இதன் நிறுவனர் ஜே.ஐ.ரோடேல் இயற்கை வேளாண்மையில் அதீத ஆர்வம் கொள்ள மூலகாரணமானவர் சர். ஆல்பர்ட் ஹோவர்ட். இயற்கை விவசாயத்தின் அதி முக்கியமான தூண்டுகோலாக கருதப்படும் “ஒரு வேளாண் முறையின் சாசனம்” (An Agricultural Testament) நூலின் ஆசிரியர் சர். ஆல்பர்ட் ஹோவர்ட், அந்த புத்தகத்தை இந்தியாவில் கண்ட பாரம்பரிய விவசாய முறைகளின் செயல்திறனால் ஈர்க்கப்பட்டே எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.

விவசாய முறைகள் பரிசோதனை (FST)

ரோடேல் நிறுவனம் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள தங்கள் பண்ணை நிலத்தில் பல்வேறு வகை விவசாய முறைகள் பரிசோதனை (Farming Systems Trial FST) ஒன்றை 1981 முதல் நடத்தி வருகிறது. இந்த உலகப் புகழ் பெற்ற பரிசோதனை, அமெரிக்காவிலேயே மிக நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வரும் ஒப்பீட்டுப் பரிசோதனை என்ற சிறப்பு பெற்றது. இங்கே மூன்று சாகுபடி முறைகள் அருகருகே செய்யப்பட்டு ஆரய்ச்சிக்கு உட்படுத்தபடுகின்றன. இந்த மூன்று முறைகளாவன: 1. கால்நடை எரு உரமிடப்பட்ட இயற்கை விவசாயம் (கால்நடைகள் மற்றும் கால்நடை-கழிவு எருவுடன் இயற்கை சாகுபடி), 2. இயற்கை தானிய விவசாயம் (கூடுதல் உரமில்லாமல் இயற்கை சாகுபடியில் தானியங்கள்), 3. ரசாயன விவசாயம் (இரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லிகளுடன் வழக்கமான அமெரிக்க தானிய சாகுபடி முறை). ரோடேல் நிறுவனத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால்:

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, இயற்கை மற்றும் ரசாயன முறைகளில் பயிரிடப்பட்டு பல விதமான உழவு முறைகளில் வளரும் பயிர்களில், மண்ணின் ஆரோக்கியம், பயிர் விளைச்சல், எரிசக்தி திறன், நீர் பயன்பாடு & மாசுபடுதல் மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை அளவிட்டு வருகிறோம்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஒப்பீட்டு ஆய்வின் முடிவுகள் என்ன சொல்கின்றன? அதி முக்கியமான கண்டுபிடிப்பு — “செயல்திறனில் இயற்கை விவசாயம் ரசாயன விவசாயத்தை விஞ்சும்.” இந்த முடிவில் தொக்கி நிற்கும் பல்வேறு வேளாண் சூழலியல் மற்றும் பருவநிலை தொடர்பான விஷயங்களை அலசி, ஆராய்வோம் வாருங்கள்.

(இடமிருந்து வலம்) பல்வேறு விவசாய முறைகளில் மகசூல், மண் வளம், மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி (வரைபடங்கள்: ரோடேல் நிறுவனம்)

மகசூல்

ஒரு விவசாயி மகசூலை இரண்டாவது முக்கியமான அம்சமாக கருதுவார் (விவசாயம் லாபகரமானதா என்ற கேள்விக்கே எப்பொழுதும் முதலிடம் கிடைக்கும்). ஆனால், இயற்கை விவசாயம் உலகிற்கு உணவளிக்க முடியுமா என்ற கேள்வி எழுவதால், மகசூலை முதலில் பார்ப்போம். ரோடேல் நிறுவன ஆய்வின் சிறப்பம்சங்கள்:

  • 5 வருட மாற்று காலத்துக்குப் பின், இயற்கை விவசாயம் ரசாயன விவசாயத்துடன் போட்டியிடும் வலு பெறுகிறது.
  • கணக்கிடப்பட்ட 1986–2014 ஆண்டுகளில், தானிய மகசூல் ஒரு ஏக்கருக்கு சராசரியாக இயற்கை உர விவசாயத்தில் 74 மரக்கால் (bushel), உரமிடாத இயற்கை விவசாயத்தில் 62 மரக்கால், ரசாயன விவசாயத்தில் 76 மரக்கால்.
  • இதில் மிக முக்கியமான முடிவு, இயற்கை விவசாயத்தை நீண்ட காலமாக தொடர்ந்து செய்வதால் கிடைத்த மகசூல். 2016-ம் ஆண்டு இயற்கை உரமிட்ட, உழவில்லா விவசாய முறையில் கிடைத்த மகசூல் வரலாற்று சாதனை படைத்தது. அந்த ஆண்டு சோள விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 200 மரக்கால் (bushel). இது அந்த மாவட்டத்தின் மற்றும் நாட்டின் சராசரி விளைச்சலை விட 22% அதிகம்!

ஆக, இயற்கை வேளாண்மை தனது மிக முக்கியமான சோதனையை — மகசூல் — மிக சாதாரணமாக கடந்து செல்கிறது.

இலாபம்

முன்பே குறிப்பிட்டபடி, ஒரு விவசாயி இயற்கை அல்லது மீள் உருவாக்க விவசாயத்திற்கு மாறுவதற்கு மிக முக்கியமான காரணி — இலாபம். பல விவசாய முறைகளை ஆய்வு செய்த ரோடேல் நிறுவனம், லாபகரமான விவசாயம் என்று சுட்டிக் காட்டுவது எதை?

  • லாபகரமான வேளாண்மை என்ற நோக்கில் பார்த்தால், இயற்கை விவசாயம் ரசாயன விவசாயத்துடன் நன்றாகவே போட்டியிடுகிறது. உரம், பூச்சி மருந்து போன்ற ரசாயன கலவைகளுக்கான தேவை இல்லாததால், உற்பத்தி செலவுகள் குறைவு. இதனால் விளைச்சல் விற்பனையில் பெரும் பகுதி லாபமாக மாறுகிறது.
  • இதை விட முக்கியமான செய்தி? இயற்கை விவசாயிகள் தங்கள் அறுவடையை இயற்கை அங்காடிகளில் அதிக விலைக்கு விற்காமல், அருகில் உள்ள சந்தைகளில் விற்கும்போது கூட இயற்கை விவசாயம் லாபகரமானதாக இருக்கிறது.
  • இவை அனைத்தையும் விட சிறந்த செய்தி? இயற்கை விவசாயம், ரசாயன விவசாயத்தை விட 3–6 மடங்கு அதிக லாபம் தரக்கூடும். ரோடேல் நிறுவனத்தின் ஒப்பீட்டுப் பண்ணைகளில், இயற்கை விவசாயம் ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு $558 நிகர வருவாய் ஈட்டியுள்ளது. ரசாயன விவசாயத்தில் வருவாய் ஆண்டுக்கு $190 மட்டுமே.

ஆக, லாபகரமான விவசாயம் என்று கணக்கிட்டாலும் இயற்கை விவசாயமே முதலிடம் பெறுகிறது.

ரோடேல் நிறுவனத்தின் விவசாய முறைகள் பரிசோதனை பண்ணை நிலங்கள் பார்வையிடல் I

மீண்டு வருதல் (Resilience)

“இயற்கை விவசாயம் உலகிற்கு உணவளிக்க முடியுமா?” என்று சந்தேகப்படுவோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், விவசாயத்தை எதிர் நோக்கும் ஆபத்துகளிலிருந்து நிலமும், பயிர்களும் மீண்டு வரும் தன்மை கொண்டுள்ளனவா என்பது. இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்:

  1. பருவநிலை அபாயங்களிலிருந்து மீண்டு வருதல்: இயற்கை விவசாயம் வறட்சியை தாங்கும் திறன் அதிகம் கொண்டுள்ளது. இயற்கை விவசாயம், ரசாயன விவசாயத்தை விட “கடும் வறட்சி காலங்களில் 40% அதிக மகசூல் கொடுக்கிறது” என்கிறது ரோடேல் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள்.
  2. களை, பூச்சி அபாயங்களிலிருந்து மீண்டு வருதல்: சமமான விளைச்சலைத் தரும் அதே நேரம், இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்ட சோளம் மற்றும் சோயா பயிர்கள், ரசாயன விவசாயத்தில் வளர்ந்த பயிர்களை விட களை செடிகளுடன் நன்கு போட்டியிடும் தன்மை கொண்டுள்ளன என்கின்றன ரோடேல் நிறுவனத்தின் முடிவுகள். களைக்கொல்லிகளின் திறனை களைகள் முறியடித்துக்கொண்டேயிருக்கும் இந்த விபரீதமான காலகட்டத்தில், களை எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரித்து, மகசூலையும் கொடுக்க வல்ல மண் வளத்தை உருவாக்கும் தன்மை இயற்கை விவசாயத்தின் ஒரு அதி முக்கியமான நன்மையாகும்.

வளம் & நலம்

உலகிற்கே உணவளிக்கும் திறமையுள்ள இயற்கை வேளாண்மை, அபாயங்களிலிருந்து மீண்டு வரும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது போலவே, இரண்டு வளம் கூட்டும் திறமைகளையும் தன்னுள் அடக்கியுள்ளது.

  1. மண் வளம்: கரிம (carbon) சேமிப்பு, நீரை நிலத்தில் நிறுத்தி வைப்பது, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, நீர் & மண் அரிப்பைத் தடுப்பது — போன்ற ஆய்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வகைகளிலும் மண் வளத்தை காலப்போக்கில் அதிகரிக்கும் திறன் இயற்கை விவசாயத்திற்கே இருப்பதாக ரோடேல் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
  2. பயிர் நலனும் உடல் நலமும்: ஊட்டச்சத்து அடர்த்தி மிக்க பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இயற்கை வேளாண்மையில் வளரும் பயிர்கள் உடல் நலத்திற்கு தேவையான புரதச் சத்து (protein) மற்றும் அத்தியாவசிய தாதுச் சத்துக்களை (essential minerals) அதிகம் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளன ரோடேல் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள்.
ரோடேல் நிறுவனத்தின் விவசாய முறைகள் பரிசோதனை பண்ணை நிலங்கள் பார்வையிடல் II

குறிப்புக்கள்

  • ரோடேல் நிறுவனத்தின் விவசாய ஆலோசனைக் குழுவில் உள்ள விவசாயிகள் பின்பற்ற வேண்டிய விவசாய தொழில்நுட்பங்களை பரிந்துரைக்கிறார்கள்.
  • அதே போல், தற்கால நடைமுறைகள் மட்டுமில்லாமல், வருங்கால தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்துகிறது ரோடேல். அந்த வகையில், சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்பங்கள்: 1) உழவில்லா விவசாயம், 2) மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified) பயிர்கள். இந்த தொழில்நுட்ப ஆய்வுகள் என்ன கண்டுபிடிக்கப்போகின்றன என்று அறிந்துகொள்ள ஆவலாக காத்திருக்கிறோம்.

இந்த ஆய்வுகளைப் பற்றி மேலும் அறிய, ரோடேல் நிறுவனத்தின் விவசாய முறைகள் சோதனை சிறப்பம்சங்கள், 2018 எஃப்எஸ்டி (FST) சிற்றேடு மற்றும் விவசாய முறைகள் சோதனை (FST) 30-ஆவது ஆண்டு அறிக்கை.

இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்குமா?

இப்போது, தொடங்கிய கேள்விகளுக்கே வருவோம் — இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்குமா? உலகிற்கே உணவளிக்க முடியுமா? கண்டிப்பாக கிடைக்கும், முடியும்! அது மட்டுமல்ல, இதை உடலுக்கும், உலகுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் செய்ய இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்,

எனவே… வெற்றிக்கான ஒரே வழி இயற்கை வேளாண்மை!

--

--

usha devi venkatachalam
Krishi Janani

techie | idealist :) Work & passion: social change, technology (ict4d), women & girls, rural livelihoods, agriculture. misc: food, reading, travel, spirituality